ஜனநாயகத் தேவதையின் 70 வருஷக் கதைகள்

ஜனநாயகத் தேவதை பேரழகியாக இருக்கிறாள். அவள் பிராடா நறுமணத்தைப் பயன்படுத்திக் கொண்டிருந்தாள். தமிழ்நாட்டுக்கு அவள் நூறு ஆண்டுகளுக்கு முன்னால் வந்தபோது சேலை அணிய ஆரம்பித்தாள். சந்தனமும் ஜவ்வாதும் மணக்க மதுரையின் தெருக்களில் அவள் பவனி வருகிறாள். தமிழ் நாட்டை நடத்துவதற்கு அவள் தமிழ்ப் பிள்ளைகளைப் பெற்றெடுக்கிறாள். அவளைப் பற்றிய கதைதான் இப்போது தேர்தல் மலர் 2021.

2020இல் கொரோனா கொள்ளைநோய்க் காலத்தில் சூலியான தேவதை மார்ச்2021இல் இந்தத் தேர்தல் மலரைப் பிரசவித்திருக்கிறாள். அவளது எல்லா நறுமணங்களையும் வண்ணங்களையும் அச்சு அசலாக பிரதியெடுத்ததுபோல இந்த மலர் பூத்திருக்கிறது. இந்த நூலின் ஆசிரியர் குறிப்பு சொல்வதுபோல, ஜனநாயகமும் கணித சுத்தமான ஏற்பாடுதான்.

இதில் பேசியிருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த ஜனநாயகத் தேவதையைக் கண்டடைவதற்குத் தான் 13 வயதிலிருந்து பயணித்த பாதைகளை நினைவுகூர்ந்திருக்கிறார். முதலமைச்சர் எடப்பாடி க.பழனிசாமி இந்தத் தேவதையை ஜெயலலிதாவின் முகத்தில் பார்க்கிறார். பாஜகவின் கரு.நாகராஜனும் கே.டி.ராகவனும் இந்தப் பிரவாகத்தில் பெற்ற தரிசனங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

காங்கிரஸின் கார்த்தி ப.சிதம்பரமும் ஜோதிமணியும் சாதாரண மக்களின் குரல்களிலிருந்து இந்தத் தேவதையின் மணத்தை நுகருகிறார்கள். பாட்டாளி மக்கள் கட்சியின் ராமதாஸ் இடப்பங்கீட்டில் இந்தத் தேவதையின் ஒளியைப் பார்க்கிறார். மக்கள் நீதி மய்யத்தின் சினேகா மோகன்தாஸ் குழந்தைப் பிராயத்திலிருந்தே பல முறை இந்தத் தேவதையைக் கனவில் காண்பதாகச் சொல்கிறார்.

முதிர்ந்த அரசியல் விமர்சகர் பழ.கருப்பையா இந்தத் தேவதையிடம் நீதி கேட்கிறார். காந்தியவாதியான தமிழருவி மணியன் இந்தத் தேவதையைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை என்று விசனப்படுகிறார். வரலாற்றாளர் ஆர்.முத்துக்குமார், திமுக இந்தத் தேவதையின் கைப்பிடித்து நடந்த வரலாற்றைச் சொல்லுகிறார். மூத்த பத்திரிகையாளர் துரை.கருணா அதிமுகவுக்கும் தேவதைக்குமான சந்திப்புகளைப் பற்றிப் பேசுகிறார்.

வழக்குரைஞர் லிங்கன், கடலோடிகளுடன் தேவதை நடத்திய உரையாடல்களைப் பதிவு செய்கிறார். சமூகச் செயல்பாட்டாளர் இசையரசு தனது ஆட்டோவில் தேவதையைச் சென்னையின் பெரும்பாக்கத்துக் குடிசை மக்களைச் சந்திக்க அழைத்துச் செல்கிறார். முனைவர் தீபாமாலா, தேவதையின் ஒளி முழுமையாகப் பரவுவதற்கு ஆலோசனைகளைச் சொல்லி வைக்கிறார். ஓய்வு பெற்ற வருவாய்த் துறை அதிகாரி பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி, தேவதையிடம் கணக்குக் கேட்கிறார்.தேவதையின் மேலும் பல ரகசியங்களை இந்த மலர் தாங்கியிருக்கிறது. வாங்கிப் படியுங்கள்.

நூலைப் பெறுவதற்கு: https://rzp.io/l/IPPODHUELECTION2021

 

இப்போது தேர்தல் மலர் 2021

இதழாசிரியர்: பொன்.தனசேகரன்

வெளியீடு: இப்போது, புதிய எண்.15, பழைய எண்.8, தாமோதரன் தெரு,தியாகராய நகர், சென்னை – 600017. செல்பேசி: +919884360505

விலை: ரூ.150. அஞ்சல் கட்டணம்: ரூ.23.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here