ஜனநாயகத்தின் நலனுக்காக, எதிர்க்கட்சிகள் அனைத்தும் பாஜகவுக்கு நெருக்கடியைக் கொடுத்த ராகுல் காந்தியின் தலைமையில் இணைய வேண்டும் : சிவசேனா

0
403

பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் இல்லாமல் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்வது சாத்தியமில்லை என்று சிவசேனா கட்சி கருத்து தெரிவித்துள்ளது

சிவசேனா கட்சி தனது நாளேடான ‘சாம்னா’வில் எதிர்க்கட்சிகள் ஒற்றுமை குறித்து தலையங்கம் எழுதியுள்ளது. அந்தத் தலையங்கத்தில் –

2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளும் குறிப்பாக மாநிலக் கட்சிகள் கடந்த கால தவறுகளுக்காக ஒன்றாக இணைய வேண்டும்.

ராகுல் காந்தியை தலைவராக ஏற்பதா அல்லது இல்லையா என்பதுதான் எதிர்க்கட்சிகள் முன் இப்போது இருக்கும் உண்மையான சிக்கல் . பிரதமர் பதவிக்கு எதிர்க்கட்சிகள் தரப்பில் ஏராளமான தலைவர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள்.

இன்றுள்ள அரசியல் சூழலில் பாஜகவின் வெற்றி ரகசியமே நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்துடன் இருப்பதுதான். இது அந்தக் கட்சிக்கு மிகப்பெரிய வலிமையையும், எதையும் சாதிக்கும் தன்மையை அளிக்கிறது. எதிர்க்கட்சிகள் ஒற்றுமையின்மையை தனக்கு சாதகமாகப் பயன்படுத்துகிறது பாஜக .

பாஜகவின் தோல்விகள் என்பது தெளிவாகத் தெரிந்த ஒன்றுதான். பாஜக மீது மக்களுக்கு கோபம் இருக்கிறது . தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகள் பாஜகவை கைவிட்டுவிட்டன. இப்போது பாஜக தன்னுடைய புகழை இஅழந்து வருகிறது.

பாஜகவில் பிரதமர் மோடிக்கு மாற்றாக, வேறுயாரும் அந்தக்கட்சிக்குள் இல்லை. பாஜகவில் நம்பிக்கையுள்ள நபருக்கு பற்றாக்குறை ஏற்பட்டு அந்தக் கட்சி தடுமாறி வருகிறது. எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மை, குழப்பம் ஆகியவற்றால்தான் பாஜக பலனடைந்து வருகிறது.

இப்படிப்பட்ட சூழலில் பாஜக தேர்தலில் 100 இடங்களுக்கும் குறைவாகப் பெற்றால், மீதமுள்ள எம்.பி.க்களை ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் அல்லது அரேபிய எமிரேட்ஸிடம் இருந்து பெற முடியுமா?

கடந்த 4 ஆண்டுகளாக மக்களின் நம்பிக்கையை பாஜகவால் பெற முடியவில்லை. பாஜகவும், பிரதமர் மோடியும் விளாதிமிர் புதின், டொனால்ட் டிரம்ப் நட்பைக் காப்பாற்றுவதில்தான் அக்கறையாக இருந்து வருகிறார்கள். இந்த நட்பைக் காப்பாற்றும் போக்கு, 2019-ஆம் ஆண்டு தேர்தலில் உதவுமா?

எதிர்க்கட்சிகள் தரப்பில் பிரதமர் வேட்பாளர்களுக்கு மம்தா பானர்ஜி, மாயாவதி,அகிலேஷ் யாதவ், மு.க.ஸ்டாலின், என்.சந்திரபாபு நாயுடு, நவீன் பட்நாயக், கே.சந்திரசேகர் ராவ் 85 வயதான எச்.டி. தேவகவுடா ஆகியோர் போட்டியாளர்களாக இருக்கிறார்கள்.

இப்போதுள்ள நிலையில், தேர் தயாராக இருக்கிறது, குதிரைகள் பூட்டுவதற்கு தயாராக இருக்கின்றன. ஆனால், தேருக்குச் சக்கரங்கள்தான் இல்லை. மூன்றாவது முன்னணியா அல்லது நான்காவது முன்னணி அமையுமா என்பது தெளிவாக இல்லாமல் இருக்கிறது.

ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ், குஜராத், கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு எப்படி அதிர்ச்சியையும், நெருக்கடியையும் கொடுத்தது, பயங்காட்டியது என்பதை யாரும் ஒதுக்கிவிட்டுச் செல்ல முடியாது.இப்போதுள்ள சிக்கல் என்னவென்றால் அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் ராகுல் காந்தி தலைமையை ஏற்பதா அல்லது இல்லையா என்பதுதான் .

ஜனநாயகத்தில் வலிமையான எதிர்க்கட்சி தேவை . ஜனநாயகத்தின் நலனுக்காக, எதிர்க்கட்சிகள் அனைவரும் பாஜகவுக்கு நெருக்கடியைக் கொடுத்த ராகுல் காந்தியின் தலைமையில் கண்டிப்பாக, மிக விரைவில் இணைய வேண்டும். அதிகாரம் , பதவிக்காக பாஜக எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை உடைக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here