உலகம் முழுவதும் பத்திரிகைகளின் வரலாறு என்பது சமூக நீதியின் வரலாறாகவே இருக்கிறது. பத்திரிகைகள் என்பவை சமூக மாற்றத்துக்கான கருவியாக இருந்து, சமூகத்தின் கடைக்கோடியிலிருப்பவர்களுக்குக் கடைத்தேற்றம் கிடைக்க அர்ப்பணிப்புடன் செயல்படுபவை. 1821இல் ராஜாராம் மோகன் ராய் ஆரம்பித்த வார இதழான சம்பத் கவ்முதி இந்திய அறிவு மறுமலர்ச்சியின் அடையாளமாக இருந்தது. தமிழ்நாட்டில் பாரதியார், அயோத்தி தாசர், ஜி.சுப்பிரமணிய ஐயர், வரதராஜுலு நாயுடு, பெரியார், எஸ்.எஸ்.வாசன், சதானந்த், வை.மு.கோதைநாயகி அம்மாள், சிங்காரவேலர், ராஜாஜி, வை.கோவிந்தன், தாவூத் ஷா, சி.பா.ஆதித்தனார், டி.வி.ராமசுப்பைய்யர், கலைஞர் மு.கருணாநிதி, அறிஞர் அண்ணா, சோ ராமஸ்வாமி என்று பத்திரிகைகளின் வழியாக சமூக மாற்றத்திற்கு வித்திட்டவர்கள் ஆயிரமாயிரம் பேர். கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி மகாத்மா காந்தியின் தலைமையிலான இந்திய விடுதலை இயக்கத்தில் பங்கேற்று தனது பத்திரிகை வேலையை இழந்தவர். அரச துரோகக் குற்றம் சாட்டப்பட்டு சிறைத்தண்டனைகளை அனுபவித்துள்ளார். தனது வேலையை இழந்த பின் கல்கி என்ற பத்திரிகையை ஆரம்பித்து ஏராளமான பத்திரிகையாளர்களை உருவாக்கினார். தினமணியின் முதல் ஆசிரியர் டி.எஸ்.சொக்கலிங்கம் விடுதலை இயக்கத்துக்காக தன்னை அர்ப்பணித்து சிறை சென்றவர்.
அரசாங்கத்தைவிட நாடு உயர்வானது. நாட்டு மக்கள் உயர்வானவர்கள். இதுவே தேசபக்தி. இந்தப் பாதையில்தான் தமிழ்நாட்டு ஊடகங்கள் அன்று முதல் இன்றுவரை செயல்பட்டு வருகின்றன. இதில் எந்தப் பத்திரிகைகளும் விதிவிலக்கல்ல. எந்தத் தொலைக்காட்சிகளும் விதிவிலக்கல்ல. எந்த டிஜிட்டல் செய்தித் தளங்களும் இந்தப் பெரும் நோக்கத்தை மீற முடியாது. நமது நாட்டுப்பற்று என்னும் அஸ்திவாரம் அவ்வளவு பலமானது. ஆனால் மக்களைப் பிரிப்பதையே நோக்கமாக கொண்ட சிலர் தமிழ்நாட்டு ஊடகங்களின் செயல்பாட்டைக் கொச்சைப்படுத்தியும் சிறுமைப்படுத்தியும் வெறுப்புப் பரப்புரை செய்துவருகிறார்கள். தமிழ்நாட்டு மக்கள் சமூக நீதிப் பண்பாடு கொண்டவர்கள். மெய்யறிவும் நுண்ணறிவும் பகுத்தறிவும் மிக்கவர்கள். எட்டு கோடி தமிழ் மக்களும் இந்தப் பரப்புரைகளின் தீய நோக்கத்தை அடையாளம் காண்பார்கள். மக்களைப் பாகுபடுத்தி அரசியல் செய்ய நினைக்கும் தீய சக்திகளைத் தமிழ் மக்கள் நிச்சயம் முறியடிப்பார்கள்.
டோலோ 650யும் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களும்
நாடார்களின் வெற்றிக் கதை: தாழக் கிடப்பாரைத் தற்காப்பதே தர்மம்
ஜென்னின் வேலைநீக்கம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியுமா?