(அக்டோபர் 16, 2017இல் வெளியான செய்தி மீட்கப்பட்டுள்ளது)

பன்மைத் தன்மை (Pluralism) குறித்து என்டிடிவியின் பிரணாய் ராய் தொகுத்த நிகழ்ச்சியில் சசி தரூர், ஜக்கி வாசுதேவ், மாளவிகா ஐயர், டீட்ரிச் ரீட்ஸ் ஆகியோர் பங்கேற்றார்கள். இந்த நிகழ்ச்சியில் பேசிய மாடலும் மாற்றுத் திறனாளி ஆர்வலருமான மாளவிகா ஐயர், திரைப்படங்களில் மாற்றுத்திறனாளிகளே அவர்களது பாத்திரங்களை நடிப்பது பற்றி சிந்திக்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார். ஜெர்மனியைச் சேர்ந்த இந்திய ஆய்வாளர் பேராசிரியர் டீட்ரிச் ரீட்ஸ், இந்தியாவின் பன்மைத்தன்மைக்குச் சவால்கள் அதிகரித்திருப்பதைப் பற்றி பேசினார். “ஒற்றை இந்தியா” கண்ணோட்டம் நாட்டின் பலமான பன்மைத்தன்மையைச் சீர்குலைக்கிறது என்று எழுத்தாளரும் காங்கிரஸ் பிரமுகருமான சசி தரூர் சுட்டிக் காட்டினார். ஈஷா யோகாவின் நிறுவனரான ஜக்கி வாசுதேவ் இந்த நிகழ்ச்சி முழுவதும் “பயம்”, “வருத்தம்”, “எதிர் விளைவு” என்கிற வன்முறைச் சொற்களையே பிரயோகித்துக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் பிரணாய் ராய், “நீங்கள் வெறுப்பு அரசியலுக்கு ஆதரவாக பேசவில்லையே” என்று கேள்வி எழுப்புமளவுக்கு ஜக்கி வாசுதேவ் வெறுப்பு அரசியலின் தூதுவராக விஷம் கக்கிப் பேசினார்.

“நீங்கள் இங்கே பார்க்கிற வன்முறை என்பது கடந்த காலத்துக்கான எதிர் விளைவு” என்று சொல்லி மாட்டிறைச்சியின் பெயரால் நடக்கும் படுகொலைகளை நியாயப்படுத்திப் பேசினார். “கடந்த காலத்தில் நடந்த தவறுகளுக்காக சிலர் எந்த வருத்தத்தையும் வெளிப்படுத்துவதில்லை” என்கிற மக்களைப் பிளவுபடுத்தும் அரசியல் மொழியைக் கையாண்டார் ஜக்கி வாசுதேவ். அதோடு நிற்கவில்லை அவர். “இங்கேயுள்ள மக்கள் தொகையின் தன்மை மாறிவிடக்கூடாது; அப்படியொரு பயம் இருக்கிறது” என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் சசி தரூர் இதைப் பொறுக்க முடியாமல் “அறிவியல்பூர்வமாக பார்த்தால் 80 சதவீதம் மக்கள் இந்துக்கள் என்கிற நிலைமை மாறப் போவதில்லை; இதனை ஒரு கல்வியாக மக்களிடம் கொண்டு சேர்த்து மக்களின் பயத்தைப் போக்குவதுதானே உங்களைப் போன்றவர்களின் பணியாக இருக்க வேண்டும்?” என்று கேட்டு வைத்தார். “நீங்கள் எப்போதிலிருந்து பயத்தைப் பரப்பும் வியாபாரியாக மாறினீர்கள்?” என்பதை வேறு வார்த்தைகளில் கேட்டு விட்டார் சசி தரூர்.

வெறும் யோகா சாமியாராக இருந்த ஜக்கி வாசுதேவ் இப்போது வெறுப்புச் சாமியாராக மாறி விட்டார்; தமிழ்நாட்டு மக்களே, உஷார். மக்களைப் பிளவுபடுத்தும் வெறுப்பு அரசியலுக்கு ஆன்மிக சாயம் பூசி ஓர் அயோக்கியர் வந்து கொண்டிருக்கிறார். எச்சரிக்கை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here