சோனியா – ராகுல் இல்லாத காங்கிரஸ் தலைமை சாத்தியமா?

0
364

“காங்கிரஸ் கட்சி மிகவும் பலவீனமாகி வருகிறது, பல அறிவுஜீவிகள் சோர்ந்து விட்டனர்”

“தலைவர்கள் பலர் டெல்லியை விட்டு நகர்வதே இல்லை. சோம்பேறித்தனம் அவர்களை ஆட்கொண்டுவிட்டது”

களத்தின் உண்மை நிலவரத்திலிருந்தும் கட்சித் தொண்டர்களிடமிருந்தும் பொது மக்களிடமிருந்தும் தொடர்பற்றுள்ளனர்”

“தலைமையே தள்ளாடுகிறது. சோனியா காந்தி தன் மகன் ராகுல் மீது கொண்ட கண் மூடித்தனமான அன்பினால், கட்சியின் கட்டுப்பாட்டை வேறு எவருக்கும் வழங்கத் தயாராக இல்லை.”

“தலைவர்கள் இன்னும் அதீதமான தன்னம்பிக்கையில் உள்ளனர். மக்கள் ஆதரவு தங்களுக்கு மீண்டும் கிடைக்கும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்”

“கட்சியில் உருவாகி வரும் அரசியல் வேறுபாடுகளைக் களைய எந்த ஒரு வழிமுறையும் இல்லை”

“கட்சி மூழ்கிக் கொண்டிருக்கிறது. அதன் முடிவு வெகுதூரத்தில் இல்லை”

அண்மையில் நடந்த பிகார் சட்டப்பேரவைத் தேர்தல், பல மாநில இடைத் தேர்தல்கள் ஆகியவற்றில் கட்சி அடைந்த தோல்விக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சிக்குள்ளும் வெளியிலும் இந்தக் கருத்துக்களே ஒலித்து வருகின்றன.

கட்சியில் சீர்திருத்தங்கள் தேவை

2014 ல் நடைபெற்ற பொதுத் தேர்தல் தோல்விக்குப் பின்னர், காங்கிரஸ் கட்சி ஒவ்வொரு தேர்தலிலும் தோல்வியைச் சந்திக்கும் போதெல்லாம், கட்சியில் ஒரு அதிருப்திக் குரல் முணுமுணுப்பாக இருந்து வந்துள்ளது. காலப்போக்கில் அது அடங்கியும் வந்துள்ளது.

ஊடகங்களில், கட்சியின் எதிர்காலம் பற்றியும் அதன் இருப்பு பற்றியுமே கூட கேள்விகள் எழுப்பப்பட்டுவருகின்றன.

கட்சிக்கு முற்றிலும் விசுவாசமாகக் கருதப்படுபவர்கள் உட்பட, பல தலைவர்கள் கட்சியில் சீர்திருத்தத்திற்கான கோரிக்கையை தீவிரமாக முன்வைக்கிறார்கள்.

ஆனால், தொடர் தோல்விகளுக்கிடையிலும், கர்நாடகம், பஞ்சாப், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இருந்தும் மத்தியப் பிரதேசம் மற்றும் கர்நாடகத்தில் ஆட்சியை இழக்கவும் செய்தது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், கட்சியில் சீர்திருத்தம் கோரி எழுதப்பட்ட கடிதத்தில் கையெழுத்திட்ட 23 தலைவர்களில் காங்கிரஸ் மூத்த தலைவர்களான குலாம் நபி ஆசாத் மற்றும் கபில் சிபல் ஆகியோரும் அடங்குவார்கள்

இந்தத் தலைவர்களின் குழு, ஜி 23 என அழைக்கப்படுகிறது. இவர்களில் ஒருவரான கபில் சிபல் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட கடிதத்தின் பரிந்துரைகள் ஏன் இதுவரை செயல்படுத்தப்படவில்லை என்று கேள்வி எழுப்புகிறார்.

இந்தத் தலைவர்கள் கட்சிக்குள் புது ரத்தம் பாய்ச்சிப் புத்துயிர் தர விரும்புகின்றார்கள். இதன் மூலம், தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு இணையாகப் போட்டியிடும் ஆற்றலை வளர்த்துக்கொள்ள விரும்புகிறார்கள்.

காந்தி குடும்பம் காங்கிரஸின் பயணத்துக்கு ஒரு தடையா?

மார்ச் மாதம், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ஜா ஒரு ஆங்கில செய்தித்தாளில், கட்சியை மேம்படுத்த வலியுறுத்தி ஒரு கட்டுரை எழுதினார். இதன் விளைவாகக் கட்சி அவரைச் செய்தித் தொடர்பாளர் பதவியில் இருந்து நீக்கியது.

கட்சியில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அவர் கருதுகிறாரா? பி பி சி-க்கு அவர் அளித்த பேட்டியில், “இதுவரை குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் இல்லை. அக்கட்டுரையில் நான் குறிப்பிட்ட பிரச்சனைகள், கட்சிக்குத் தேவையான மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான விருப்பம் மற்றும் உறுதிப்பாடு, இன்னும் கட்சியில் இல்லை. இப்போது அறிக்கைகளைத்தான் அதிகம் பார்க்க முடிகிறது. களத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதுவும் இல்லை. ” என்று அவர் கூறுகிறார்.

சீர்திருத்தத்திற்கான கட்சித் தலைவர்களின் கோரிக்கையில் மிக முக்கியமானது தலைமைக்கான தேர்வு. கடந்த ஆண்டு மே மாதம் நடந்த பொதுத் தேர்தல்களில் தோல்விக்கு தாரமிகப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட ராகுல் காந்தி கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகினார். சில காலம், சோனியா காந்தி இடைக்காலத் தலைவரானார். ஆனால் அவர் பெரும்பாலும் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார்.

கட்சியின் புதிய தலைவர் எப்போதோ நியமிக்கப்பட்டிருக்க வேண்டும், ஆனால் அது இன்னும் நடக்கவில்லை என்று சஞ்சய் ஜா ஏமாற்றமடைந்துள்ளார்.

காந்தி குடும்பம்தான் கட்சியின் பயணத்துக்குத் தடையாக உள்ளது என்று கட்சிக்குள் ஒரு கருத்து நிலவத் தொடங்கியுள்ளது.

பல தலைவர்கள் காந்தி குடும்பத்தை நேரடியாகத் தாக்கத் துணிவதில்லை. ஆனால் குடும்பத்தைச் சேர்ந்த எவரும் தலைவராக வருவதையும் அவர்கள் விரும்பவில்லை. காரணம், வாக்காளர்களை ஈர்க்கும் திறன் இப்போது அவர்களிடம் இல்லை என்பது தான். அவர்களைப் பொருத்தவரை கட்சிக்குப் பெரிய தடையே காந்தி குடும்பம் தான்.

குடும்பம் விலகினால், கட்சி உடையுமா?

சீதாராம் கேசரி தலைமையின் போது பல காங்கிரஸ் தலைவர்கள் கட்சியை விட்டு வெளியேறியது போல, குடும்பத்தை விட்டு வெளியிலிருந்து ஒரு தலைமை வந்தால், கட்சி உடைந்து போகும் என்றும் சிலர் நினைக்கின்றனர். அப்போதும் கட்சியில் இருந்தவர்கள் சோனியாவிற்கு மிக நெருக்கமானவர்களே. அவர்கள் காந்தி குடும்பத்துக்கு விசுவாசமானவர்கள்.

தலைவர் பதவியை ராஜினாமா செய்த பிறகும், ராகுல் காந்தி கட்சியின் பெரிய முடிவுகளை எடுத்தும், பெரிய பிரச்சினைகள் குறித்து அதிகம் பேசியும் வருகிறார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சோனியா காந்தியின் தலைமை ஒரு கண் துடைப்பு மட்டுமே என்றும் ராகுல் காந்திதான் முடிசூடா மன்னனாக விளங்குகிறார் என்றும் கூறப்படுகிறது.

ஆனால் கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் மத்தியில் ராகுல் காந்தியின் புகழ் மற்றும் விசுவாசம் இன்னும் அப்படியே இருப்பதாகத்தான் தெரிகிறது.

காங்கிரஸ் கட்சி குறித்த செய்தி சேகரிப்பிற்காக நான் 2018 நவம்பர்-டிசம்பர் மாதங்களில் பல மாநிலங்களுக்குச் சென்றேன். அந்தச் சுற்றுப்பயணத்தில், தொண்டர்களுடன் உரையாடியதில், ராகுல் காந்திதான் அவர்களுக்கு ஹீரோவாக விளங்குகிறார் என்பதை உணர்ந்தேன்.

மும்பையைச் சேர்ந்த அகில இந்திய மகளிர் காங்கிரசின் செயலாளர் பாவனா ஜெயின் களத்தில் சாதாரண தொண்டர்கள் மத்தியில் பணியாற்றுகிறார்.

நான் அவரைத் தொலைபேசியில் அழைத்து, மாற்றம் குறித்த பெரிய தலைவர்களின் கோரிக்கை தொண்டர்கள் மத்தியிலும் உள்ளதா என்று கேட்டேன். அதற்கு அவர், தொண்டர்கள் மத்தியில் ராகுல் காந்திக்கான ஆதரவு தேர்தல் தோல்விக்கும் முன்னும் பின்னும் ஒரே மாதிரியாகத் தான் உள்ளது என்று கூறுகிறார்.

ஒவ்வொரு கட்சித் தொண்டரும் அவரைத் தலைவர் பதவியில் காணவே விரும்புகிறார்கள் என்று அவர் கூறினார். “சாதாரணத் தொண்டனையும் தலைவர்களையும் ஒன்றாகப் பார்க்க முடியாது என்று நான் நினைக்கிறேன். தொண்டர்களுக்கு ராகுல் காந்தி மீது உள்ள நம்பிக்கையும் விசுவாசமும் அலாதியானது. இதை நீங்களே உணர்ந்திருப்பீர்கள்.” என்று அவர் கூறுகிறார்.

அவரது ராஜினாமா குறித்து தனக்கு இரண்டு கருத்துக்கள் இருப்பதாக பாவனா ஜெயின் கூறுகிறார். “அவர் ராஜினாமா செய்தாலும் குற்றம், செய்யாவிட்டாலும் அதை விடக் குற்றம். இப்போது அனைத்து தொண்டர்களும் அவர் தலைவர் பதவிக்குத் திரும்ப வேண்டும் என்று விரும்புகிறார்கள். இந்த மாற்றம் ஆறு மாதங்களில் நிச்சயம் நடக்கும், நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள்.” என்கிறார் அவர்.

தொண்டர்களின் மன உறுதி

டாக்டர் ரஷ்மி பவார் சர்மா குவாலியரில் காங்கிரஸ் கட்சியின் தலைவர். 2008 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் போட்டியிட்ட இவர் மத்தியப் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராக உள்ளார். தனது நகரத்திலும் மாநிலத்திலும் உள்ள ஒவ்வொரு தொண்டரும் ராகுல் காந்தி கட்சியின் அடுத்த தலைவராக வேண்டும் என்று விரும்புகிறார் என்று அவர் கூறுகிறார்.

“ராகுல் காந்தி கட்சியை வழிநடத்த வேண்டும் என்றுதான் நாங்கள் அனைவரும் விரும்புகிறோம். மார்ச் மாதத்திற்குள் கட்சியில் மாற்றம் ஏற்படும் என்றும் கட்சிக்கு ஒரு புதிய தலைவர் இருப்பார் என்றும் நான் நினைக்கிறேன், அது ராகுல் காந்தியாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். “

ராகுல் காந்தியின் திறமை குறித்துத் தொண்டர்களுக்கு எந்தச் சந்தேகமும் இல்லை என்று அவர் கூறுகிறார். “அவர் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வந்தார். காங்கிரஸ் கட்சி என்பது ஒரு மிகப் பெரிய கடல். ஆகவே, அவர் வந்த உடனேயே ஒரு அதிசயம் நடக்கும் என்று சொல்லமுடியாது. ஆனால் மாற்றம் படிப்படியாக நடக்கும்.” என்று கூறுகிறார்.

குவாலியர் மற்றும் சம்பல் பகுதிகளில் கட்சித் தொண்டர்களின் மன உறுதியும் மிக வலுவாக இருப்பதாக ரஷ்மி பவார் கூறுகிறார். “ஜோதிராதித்ய சிந்தியா கட்சியை விட்டு வெளியேறிய போதிலும், தொண்டர்கள் அவருடன் செல்ல மறுத்துவிட்டனர். இதிலிருந்து கட்சி மீதான தொண்டர்களின் விசுவாசத்தை அறிய முடியும்” என்று அவர் கூறினார்.

நவம்பர் 3 ம் தேதி இடைத்தேர்தல் முடிவுகளில் பின்னடைவைச் சந்தித்த ஜோதிராதித்ய சிந்தியா குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், ” அவரது அரண்மனையும் கோட்டையும் இருக்கும் குவாலியர் கிழக்கு தொகுதியில் உள்ள மக்களை அவர் தனது மக்கள் என்று கூறுகிறார். ஆனால் அந்த மக்கள், அங்கு, அவரது வேட்பாளரான முன்னாலால் கோயலை காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வியடையச் செய்துள்ளனர்.” என்று தெரிவிக்கிறார்.

கட்சியில் ராகுலின் செல்வாக்கு

ஜோதிராதித்ய சிந்தியா கட்சியை விட்டு வெளியேறிய பின்னர் கட்சித் தொண்டர்கள் சுதந்திரமாக உணர்ந்ததாகவும் கொண்டாடியதாகவும் கூறும் ரஷ்மி பவார், இதற்கு காரணம் அவரிடம் தொண்டர்கள் பயந்திருந்தனர் என்று தெரிவிக்கிறார்.

என்ன நடந்தாலும் தான் ஒருபோதும் காங்கிரஸையும் ராகுல் காந்தியையும் விட்டு வெளியேற மாட்டேன் என்று என்எஸ்யுஐ மாநிலத் தலைவராகவும் இருந்த ரஷ்மி பவார் கூறுகிறார். அவரைப் பொறுத்தவரை, கட்சி மற்றும் ராகுல் காந்தி மீதான விசுவாசம் சாதாரண தொண்டர்களிடையே காணப்படுவதாகவே கூறுகிறார்.

டெல்லியில் தலைவர்களின் அறிக்கைகள் சாதாரண தொண்டர்களைத் தவறாக வழிநடத்துகின்றன. ஆனால் அது அவர்களின் மன உறுதியைப் பாதிக்காது என்று பாவனா ஜெயின் கூறுகிறார், ஆனால் தலைவர் பதவியிலிருந்து ராஜிநாமா செய்த பிறகும் அவரின் ஆதிக்கமே இருப்பதாகவும் முடிசூடா மன்னராக அவரே இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்துக் கருத்து தெரிவித்த பாவனா ஜெயின், “ராகுல் இன்னும் எல்லா பெரிய முடிவுகளையும் எடுக்கிறார் என்று நீங்கள் சொல்கிறீர்கள், அதில் என்ன தவறு? அவர் இன்னும் கட்சியின் முக்கியமான தலைவராக இருக்கிறார், அவரது கருத்துக்களும் அவரது பங்களிப்பும் முக்கியத்துவம் பெற்றவை. சோனியா கட்சியின் நன்மைக்காக அவரிடம் ஆலோசனை கேட்கிறார். உடல் நிலை சரியில்லாதபோதும், இறுதி முடிவை சோனியாதான் எடுக்கிறார்.” என்று கூறுகிறார்.

ஜம்முவில் உள்ள கட்சியின் இளம் தொண்டர் ராஜ் ரெய்னா, தான் நிச்சயமாக ராகுல் காந்திக்கு ஆதரவாக இருப்பதாகக் கூறுகிறார், ஆனால் இந்த பதவிக்கு பகிரங்கமான தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.

“காங்கிரஸ் செயற்குழு மற்றும் தலைவர் பதவிகளுக்குத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும், இதேபோன்ற தேர்தல்கள் கீழிருந்து மேல் வரை நடத்தப்பட வேண்டும்.” என்கிறார் அவர்.

கட்சியின் உயர்மட்ட தலைவர்களிடம் அவர் கோபமாக இருக்கிறார், “நாங்கள் டெல்லிக்குச் செல்லும்போது, பெரிய தலைவர்களைச் சந்திப்பது சாத்தியமில்லை. அவர்களில் யாரும் ஜம்முவிற்கு வருவதில்லை. அப்படியே தவறிப் போய் வந்து விட்டாலும் நாங்கள் அவர்களை நெருங்கக் கூட முடியாது” என்று குற்றம் சாட்டுகிறார்.

தலைமையில்லாத கட்சி

சஞ்சய் ஜாவும் இந்த பிரச்னையை எழுப்பியுள்ளார். அவர், “நீங்கள் யாரையும் பொறுப்பேற்கச் செய்யாவிட்டால், கட்சியின் வீழ்ச்சி தொடரத் தான் செய்யும். தற்சமயம் கட்சியின் பொறுப்பு யாரிடமும் இல்லை. இரண்டாண்டுகளாகக் கட்சிக்கு இதுதான் நிலைமை. கட்சியை விளையாட்டாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்” என்று வேதனை தெரிவிக்கிறார்.

மேலும் அவர் கூறுகையில், “குடும்பம் கட்சிக்கோ அல்லது நாட்டிற்கோ அளிக்கும் பங்களிப்பு குறித்து எந்தவிதமான சர்ச்சையும் இல்லை. குடும்பம் செய்த தியாகம் வரலாற்றில் எழுதப்பட்டுள்ளது. ஆனால், காங்கிரஸ் கட்சியில் புதிய தலைவருக்கான வாய்ப்பளிக்க வேண்டிய நேரம் இது என்று எதிர்பார்க்கப்படுகிறது என்பதும் உண்மை. ” என்று கூறுகிறார்.

“ராகுல் காந்தி ராஜினாமா செய்ததுடன் நிற்காமல், ஒரு மாதத்திற்குள் தலைவர் தேர்ந்தெடுக்கப்படவேண்டும் என்று அறிவித்திருக்க வேண்டும். அதில் அவர் தவறி விட்டார்” என்று சஞ்சய் ஜா கூறுகிறார்.

“அவர் இதற்கான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இறுதியாக சோனியாவே திரும்பி வர வேண்டியிருந்தது. காங்கிரஸ் கட்சிக்கு தலைவர் இல்லை என்று இப்போது உலகம் கூறுகிறது. அவர் தனது தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக்கொண்டார்.”

சஞ்சய் ஜா, கட்சியின் இந்தத் தொடர் வீழ்ச்சிக்குக் கட்சியின் மற்ற தலைவர்களும் பொறுப்பு என்று கருத்து தெரிவிக்கிறார். கட்சியில் சீர்திருத்தங்களைக் கொண்டுவராததற்குப் பின்னால் பெரிய தலைவர்களின் ஆணவமும் சோம்பலும் உள்ளது என்பது அவர் கருத்து.

நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா ஆகியோரின் அரசியலை மக்கள் விரைவில் புறக்கணித்து விட்டு காங்கிரஸை நோக்கி வருவார்கள் என்று அவர்கள் பகல் கனவு காண்கிறார்கள் என்கிறார் ஜா.

ராகுல் - சோனியா தலைமையிலோ அவர்கள் இல்லாமலோ காங்கிரஸ் எப்படி இருக்கும்

மேலும் அவர் “கட்சி ஒரு நபருக்கோ அல்லது ஒரு குடும்பத்துக்கோ சொந்தமானது அல்ல. இந்த நேரத்தில் கட்சி தீவிர அரசியலில் முன் நின்று போராட வேண்டியது அவசியம். ஆனால், உட்கட்சி சிக்கலில் சிக்கி இருக்கிறோம். தலைமை இதுகுறித்து வாய் திறக்கவில்லை. ஜி 23 தலைவர்கள் பரிந்துரைகளை வழங்கியுள்ளனர். யாரும் கட்சியை விட்டு வெளியேறவில்லை. கட்சி எங்களை இடைநீக்கம் செய்தது, நாங்கள் கட்சியை விட்டு வெளியேறவில்லை. ” என்றும் கூறுகிறார்.

பிகாரில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ ஷகீல் அகமது கான், சில ஆண்டுகளுக்கு முன்பு தனது தலைவர்கள் வசதியான வாழ்வைப் பெற்றுவிட்டதாகவும், டெல்லியை விட்டு வெளியேற விரும்பவில்லை என்பதையும் புரிந்து கொண்டார். டெல்லியில் பல ஆண்டுகளாக வாழ்ந்த அவர், பொது மக்களிடமிருந்தும் கட்சித்தொண்டர்களிடமிருந்தும் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக உணர்ந்தபோது, பிகார் திரும்பினார்.

“நான் சில ஆண்டுகளுக்கு முன்பு பிகார் திரும்ப முடிவு செய்தேன், அப்போது தான் நான் பொது மக்களுடன் சேர்ந்து அவர்களுக்காக வேலை செய்ய முடியும்” என்று அவர் கூறுகிறார்.

டெல்லியில், மூத்த பத்திரிகையாளர் பங்கஜ் வோஹ்ரா கடந்த 40 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் குறித்து கவனித்து வருகிறார். கட்சியின் ஏற்றத் தாழ்வுகள் குறித்து அவர் மிகுந்த அக்கறை கொண்டவர். ராகுல் காந்தி தனது குடும்பத்தைச் சாராத ஒருவருக்குத் தலைமை வழங்கினால் மட்டுமே கட்சி பலப்படும் என்று அவர் கருதுகிறார்.

பிபிசியுடனான உரையாடலில் அவர், “பிகார் சட்டமன்றத் தேர்தலில் மோசமான தோல்விக்குப் பின்னர் 135 ஆண்டு பழைமையான கட்சியின் மறுக்கமுடியாத தலைவராக ராகுல் காந்தியை ஏற்றுக்கொள்வது கடினம், எனவே தலைவர் பதவிக்கான போட்டியில் தான் பங்கெடுக்காமல் வேறு யாராவது நியமிக்கப்பட உதவ வேண்டும். ” என்று ஆலோசனை வழங்குகிறார்.

ஆனால் பாவனா ஜெயின் மற்றும் ரஷ்மி பவார் சர்மா ஆகியோர் தலைவர் பதவிக்கு வெளிப்படையான தேர்தல் நடந்தால், தொண்டர்களின் தேர்வு ராகுல் காந்தியைத் தவிர வேறு யாராகவும் இருக்க முடியாது என்று வலுவான நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

நன்றி : பிபிசி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here