சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை 6 வழிச்சாலையாக மாற்றம் உள்ளிட்ட பல மாற்றங்களுடன் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் புதிய வரைவு அறிக்கையை சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் சமர்பித்துள்ளது.

இத்திட்டத்திற்காக விவசாய நிலங்களை அரசு கையகப்படுத்தியது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். விவசாய நிலங்களை அழிக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அரசியல் கட்சிகள் எதிர்த்து போராடின.

நீதிமன்றத்திலும் வழக்குத்தொடுக்கப்பட்டது. இது குறித்த வழக்கில் நீதிமன்றம் அரசை கடுமையாக எச்சரித்தது. நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காவிட்டால் திட்டத்தையே தடை செய்ய நேரிடும் என எச்சரித்தது. இதுதொடர்பாக, உயர் நீதிமன்றத்திலும் பல வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், இந்த திட்டத்தில் மாற்றங்களை கொண்டுவந்துள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சுற்றுச்சூழல் பாதிப்பை குறைக்கும் வண்ணம் மத்திய அரசின் நெடுஞ்சாலைத்துறை இத்திட்டத்தில் மாற்றம் செய்து மத்திய சுற்றுச்சூழல் ஆணையத்துக்கு அறிக்கையை சமர்பித்துள்ளது. பாரத் மாலா பிரொயோஜனா திட்டத்தின் கீழ் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் இத்திட்டம் உருவாக்கப்பட்டிருந்தது.

அதன்படி, இந்த திட்டம் முதல் கட்டமாக 8 வழிச்சாலையில் இருந்து 6 வழிச்சாலையாக குறைக்கப்படுகிறது. வருங்காலத்தில் போக்குவரத்துத் தேவைக்கு ஏற்ப அது 8 வழிச்சாலையாக மாற்றப்படும். அதனால், இந்த திட்ட மதிப்பீடு ரூ.10,000 கோடியில் இருந்து ரூ. 7210 கோடியாக குறைக்கப்படுகிறது.

சேலத்தில் உள்ள கல்வராயன் மலைக்கு பாதிப்பை ஏற்படுத்தாதவாறு செங்கம் – சேலம் என வழிமாற்றம் செய்யப்படவுள்ளது. வனப்பகுதிகளில் 70 மீட்டர் அகலத்துக்கு அமைக்கப்பட இருந்த சாலைகள் 20 மீட்டர் குறைக்கப்பட்டு 50 மீட்டர் அகலமாக அமைக்கப்படும்.

வனப்பகுதியில் 13.2 கிலோ மீட்டருக்கு பதில் 9 கிலோ மீட்டர் தூரம் வரை மட்டுமே சாலை அமைக்கப்படும். வனப்பகுதியில் 300 ஏக்கருக்குப் பதிலாக 103 ஏக்கர் வனப்பகுதி மட்டுமே கையகப்படுத்தப்படும்.

( இந்தச் செய்தி பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது )

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்