தனது அரசாங்கம் தான் இத்திட்டத்தை கேட்டு வாங்கியது என இதற்கு முன் பழனிச்சாமி பேசியுள்ளார்.

சர்ச்சைக்குரிய சென்னை-சேலம் பசுமை வழிச்சாலை திட்டம் முழுக்கமுழுக்க மத்திய அரசின் திட்டம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சனிக்கிழமை கூறினார். இத்திட்டத்திற்கு எதிராக பல மாவட்டங்களில் போராட்டங்கள் நடந்துவரும் வேளையில், நிலம் கையகப்படுத்தி மத்திய அரசிடம் கொடுக்கும் வேலையை மட்டுமே மாநில அரசு செய்து வருவதாக முதல்வர் கூறினார்.

தனது அரசாங்கம் தான் இத்திட்டத்தை கேட்டு வாங்கியது என இதற்கு முன் பழனிச்சாமி பேசியிருந்த நிலையில் தற்போது அதற்கு முரணாக கருத்து தெரிவித்திருக்கிறார்.

முன்னதாக இந்த மாதம், மத்திய அரசின் ’பாரத்மாலா பரியோஜனா’ திட்டத்தின் கீழ் 277.3 கிலோமீட்டர் நீளத்திற்கு எட்டுவழியில் பசுமைவழிச்சாலை அமைக்கப்படும் என அறிவித்த முதலமைச்சர் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு இத்திட்டம் உதவும் என்றார்.

சட்டமன்றத்தில் இதுகுறித்து பேசிய முதலமைச்சர், மாநில அரசாங்கம் போராடி இத்திட்டத்தை பெற்றுள்ளதாகவும் வெறும் 41 ஏக்கர் வனப்பகுதி மட்டுமே இத்திட்டத்திற்காக கைப்பற்றப்படும் எனவும் கூறினார். கைப்பற்றவுள்ள 1,900 ஹெக்டேர் நிலத்தில் 400 ஏக்கர் நிலம் அரசுக்கு சொந்தமானது என்று கூறினார். மேலும், இச்சாலை மலை வழியாக செல்லும் போது சுரங்கப்பாதை ஆக்கப்படும் என்று உறுதியளித்தார்.

இதுவரை இத்திட்டத்திற்கு ஆதரவாகவும் அதன் பயன்களை முன்னிலைப்படுத்தும் வகையிலுமே மாநில அரசாங்கம் பேசிவந்தது. ஆனால் தற்போது முதன்முறையாக மாநில அரசாங்கம் இத்திட்டம் வர உதவி மட்டுமே செய்கிறது என முதலமைச்சர் கூறியுள்ளார்.

“இது மத்திய அரசின் திட்டம். தமிழ்நாட்டுக்கு கிடைத்துள்ள மாபெரும் திட்டம் என்பதால் நாங்கள் அதற்கு உதவுகிறோம். இது முழுக்க முழுக்க மத்திய அரசின் திட்டம் தான். நமது மாநிலத்திற்கு வருவதால் நிலம் கையகப்படுத்துவதற்கு மட்டுமே தமிழ்நாடு அரசு உதவுகிறது,” என்றார் எடப்பாடி பழனிச்சாமி.

முன்னதாக, மும்பை – புனே மற்றும் டெல்லி – ஆக்ரா விரைவுச்சாலைகளோடு இத்திட்டத்தினை ஒப்பிட்டு விரிவான அறிக்கையை சட்டமன்றத்தில் படித்தார் பழனிச்சாமி. இந்த எட்டுவழிச்சாலையானது சேலத்திலிருந்து கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் வழியாக சென்னை வந்தடைகிறது. ஆனால், விவசாய நிலம், வீடுகள் மற்றும் காடுகள்
இதற்காக அழிக்கப்படும் என விவசாயிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

குற்றச்சாட்டுகள் அனைத்திற்கும் மறுப்பு தெரிவித்த முதலமைச்சர், “கிருஷ்ணகிரி மற்றும் உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலைகள் அமைக்கும் போது மாநிலத்தில் உள்ள வாகனங்களின் எண்ணிக்கை 1.7 கோடியாக இருந்தது. தற்போது அதன் எண்ணிக்கை 2.57 கோடி. இத்திட்டம் நிறைவடைய ஐந்து ஆண்டுகள் ஆகும். அதற்குள் வாகனங்களின் எண்ணிக்கை 3.27 கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. விபத்துகளை தவிர்த்து உயிர்களைக் காக்க இத்திட்டம் அவசியம்,” என்றார்.

சேலம், கோயமுத்தூர், நாமக்கல், கரூர் மற்றும் மதுரை ஆகிய பகுதிகளின் தொழில் வளர்ச்சிக்கு இத்திட்டம் உதவும் என்றார். இழப்பீடு தொடர்பாக பேசிய முதலமைச்சர், “வழிகாட்டு மதிப்பின் படி இழப்பீடு வழங்கப்படும். நிலங்களை இழக்கவிருக்கும் அனைவருக்கும் உரிய இழப்பீடு கிடைக்க அரசு எல்லா நடவடிக்கைகளும் எடுக்கும்,” என்றார்.