சேலம்-சென்னை 8 வழிசாலை: விளைநிலத்தை அளக்க எதிர்ப்பு தெரிவித்த விவசாயி குடும்பத்தை சேர்ந்த 6 பேர் கைது

0
383

8 வழிசாலை திட்டத்துக்காக, தங்களது நிலத்தை அளக்க வந்த அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த 6 பேர் குடும்பத்துடன் கைது செய்யப்பட்டனர்.

சேலம் முதல் சென்னை வரை 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் மத்திய அரசின் நிதியின்கீழ் எட்டு வழிச்சாலை அமைக்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார்.

சேலம், தருமபுரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள் வழியாக 274 கிலோமீட்டர் நீளத்துக்கு அமைக்கப்படவுள்ள இந்த சாலைக்காக 20 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகள் கையகப்படுத்தப்பட உள்ளன. இந்த சாலை அமைக்கப்பட உள்ள இடங்களில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

புதிய 8 வழி சாலை அமைப்பதற்காக காடுகளை அழிப்பதற்கும், மலைகளை குடைவதற்கும் வேளாண் நிலங்களை வலுக்கட்டாயமாக கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாய நிலங்களையும் வீடுகளையும் கையகப்படுத்திவிட்டால் தங்களது வாழ்வாதாமே பாழாகிவிடும் என்று கூறும் விவசாயிகள், இந்த 8 வழி பசுமை சாலையால் எந்தப் பயனும் இல்லை என்றும் கூறி இத்திட்டத்தை கைவிட வேண்டும் என்று போராடி வருகின்றனர்.

இந்நிலையில் அடிமலைபுதூர் பகுதியில் நிலம் அளக்க இன்று அதிகாரிகள் வந்த போது அந்த கிராம மக்கள் அப்பகுதியில் நிலம் அளக்க கூடாது என கேட்டுக் கொண்டனர். எனினும் அதிகாரிகள், தொடர்ந்து நிலம் அளக்க முயன்றனர். அவர்கள் அளவீடு செய்ய வந்த நிலம், அங்கு வசித்து வரும் ரவிச்சந்திரன் என்பவருடையது என்று கூறப்படுகிறது. இதனால் ரவிச்சந்திரன் குடும்பத்தை சேர்ந்த 6 பேரும் அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து 6 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here