சேலம்-சென்னை எட்டு வழிச்சாலை: 15 சதவீதம் விவசாய நிலங்கள் பயன்படுத்தப்படும்” -தேசிய நெடுஞ்சாலைத் துறை

0
1324

சர்ச்சைக்குரிய சேலம்-சென்னை எட்டுவழிச்சாலை திட்டத்துக்குப் பயன்படுத்தவுள்ள நிலத்தில் 15 சதவீதம் விவசாய நிலமாக இருக்கும் என்று தேசிய நெடுஞ்சாலைத் துறை தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் பேசுபொருளாகிவிட்ட சென்னை-சேலம் எட்டுவழிச்சாலை திட்டத்தின் தேவை என்ன, அதற்கான ஒப்புதல்கள் பெறப்பட்டுவிட்டனவா, பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றதா என்பது உள்ளிட்ட பல கேள்விகளுக்கு அரசுத் தரப்பிடம் இருந்து இதுவரை பதில்கள் இல்லாமல் இருந்தது.

எட்டுவழிச்சாலை கொண்டுவரப்படவுள்ள சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெறுவதும், விவசாயிகள் கைதுசெய்யப்படுவதும் தொடர்வதால், இந்த சாலைத் திட்டம் குறித்த கேள்விகளை பிபிசிதமிழ் மத்திய நெடுஞ்சாலைத் துறையிடம் வைத்தது.

மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்தில், விரைவுப்பதைகளுக்கென இயங்கும் தனிப்பிரிவின் தலைமை பொது மேலாளர் மனோஜ் குமார் அளித்த பதில்கள் இவை.

42

கேள்வி: தமிழகத்தில் இருந்து உயரதிகாரிகள் யாரேனும் சென்னை-சேலம் விரைவுப்பாதை திட்டத்தை நிர்வகிப்பதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனரா? இந்த திட்டத்திற்கான தமிழக ஒருங்கிணைப்பாளர் யாரேனும் உள்ளனரா?

பதில்: நெடுஞ்சாலைத்துறையின் எல்லாத் திட்டங்களும் அந்தந்த மாநிலத்தில் வளர்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்கவேண்டும் என்ற நோக்கத்தில் தயாரிக்கப்படுகின்றன. அதனால், அனைத்து தேசிய நெடுஞ்சாலைகள், சீரமைப்பு மற்றும் திட்டங்களை செயல்படுத்த மாநில அரசிடம் ஆலோசனை செய்து இறுதிமுடிவு எடுக்கப்படும்.

சென்னை-சேலம் விரைவுப்பாதை திட்டத்திற்கான விரிவான அறிக்கையைத் தயாரிக்க ஆலோசகர் ஒருவரை மத்திய நெடுஞ்சாலைத் துறை நியமித்துள்ளது. அந்த அறிக்கையின் ஒரு பகுதியாக சுற்றுச்சூழல் மற்றும் கட்டாயமாக நடத்தப்படவேண்டிய பிற ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

கேள்வி: சென்னை-சேலம் விரைவுப்பாதை திட்டத்திற்கு ரூ.10,000கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டது எவ்வாறு? இந்த ரூ.10,000 கோடி நிதி எந்தெந்த செலவுகளாக, எவ்வாறு செலவிடப்படும் என்று பட்டியல் தரமுடியுமா?

பதில்: எட்டுவழி விரைவுப்பாதைக்கான தோராயமான செலவு மதிப்பீடு மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. விரிவான திட்ட அறிக்கை முடிக்கப்பட்டால் மட்டுமே சாலைக்கு எவ்வளவு செலவாகும், நிலம் கையகப்படுத்துவதற்கு எவ்வளவு செலவாகும் என்று சொல்லமுடியும்.

கேள்வி: விரைவுப்பாதை திட்டத்திற்கான செயலாக்க அறிக்கை தயாரிக்கப்பட்டுவிட்டதா? இந்த திட்டத்தின் சாதக, பாதகங்கள் என்ன?

பதில்: இந்த திட்டத்திற்கான வரைவு திட்ட அறிக்கை (Draft Project Report) தயாரிக்கப்பட்டுவிட்டது. இந்த திட்டத்தால் பல நன்மைகள் ஏற்படும் என அடையாளம் காணப்பட்டுள்ளது என்பதால்தான் இதை முன்னெடுக்கிறோம்.

கேள்வி: சென்னை-சேலம் எட்டுவழி பாதை திட்டத்திற்காக வனத்துறையிடம் இருந்து எந்த ஒப்புதலும் பெறவில்லை என்பது உண்மையா? 49ஹெக்டர் வனப்பகுதி வழியாக சாலை அமையவுள்ளதாகக் கூறப்படுகிறது. அப்படியானால், எந்தெந்த வனப்பகுதிகள் இந்த திட்டத்தின் கீழ் கையகப்படுத்தபடும்?

பதில்: மாநில அரசு, மாவட்ட நிர்வாகங்கள், வனத்துறை ஆகியோர் இடையில் பல முறை ஆலோசனை சந்திப்புகள் நடைபெற்றுள்ளன. சாலை அமைக்கப்படுவதற்கு முன்னர் எல்லா துறைகளிடம் இருந்தும் அனுமதி பெறப்படும்.

கேள்வி: இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்னதாக இந்த திட்டத்தால் சுற்றுச்சூழலில் ஏற்படவுள்ள தாக்கம், பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் போன்றவை நடத்தப்படவேண்டும். இதுவரை ஏதேனும் கருத்து கேட்புகூட்டம் நடத்தப்பட்டதா? நடைபெற்றிருந்தால், அந்த கூட்டம் எங்கு, எப்போது நடைபெற்றது? அதில் வெளியான கருத்துகள் என்ன?

40

பதில்: சுற்றுச்சூழலில் ஏற்படும் தாக்கம் பற்றிய ஆய்வு நடைபெற்றுவருகிறது. ஆரம்பத் தகவல்களின் படி, சென்னை-சேலம் எட்டுவழிச்சாலை சுற்றுச்சூழலில் ஏற்படும் மாசுபாடு அதாவது கரிமத் தடயத்தை (carbon footprint)பெருமளவு குறைக்கும். சென்னை-சேலம் இடையிலான பயணதூரத்தை குறைப்பதால், எரிபொருள் பயன்பாடு குறையும்; இதனால், கரிமத் தடயம் குறையும் மற்றும் போக்குவரத்து மேம்படும்.

(கரிமத் தடயம் குறையும் என்பது இந்த இடத்தில், எரிபொருளைப் பயன்படுத்துவதால், வாகனங்களில் இருந்து வெளியாகும் நச்சுபொருளின் அளவை, கரியமில வாயுவின் அளவாகக் கொண்டு புவிவெப்பமயத்திற்கு எந்த அளவில் அது பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை குறிக்கும்)

கேள்வி: இந்த திட்டத்திற்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவது தொடர்பாக விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை ஏதும் நடைபெற்றதா? அவ்வாறு நடந்திருந்தால், அதில் பங்கேற்றவர்கள் பற்றிய விவரங்கள், அந்த கூட்டத்தில் வெளியான கருத்துகள் பற்றியும் சொல்லுங்கள். தமிழகத்தில் இந்த திட்டத்தை எதிர்க்கும் விவசாயிகளை கைது செய்வது தொடர்ந்து நடக்கிறது. இதுபற்றி உங்களது கருத்து என்ன?

பதில்: ஒரு திட்டத்தை பற்றிய இறுதி முடிவு எடுப்பதற்கு முன்னர், இதற்கான மாற்று திட்டங்கள் ஆலோசிக்கப்படும். இந்த திட்டம் அறிவிக்கப்படுவதற்கு முன்பாக, ஆரம்பகட்ட மதிப்பீடுகள் நடத்தப்பட்டன. சென்னை-கிருஷ்ணகிரி மற்றும் சென்னை-மதுரை போன்ற வழிகளை ஏற்படுத்தினால் பெருமளவு மக்களை அப்புறப்படுத்தவேண்டும். ஆனால் இந்த சென்னை-சேலம் திட்டத்தில் அத்தகைய சேதம் இருக்காது.

நெடுஞ்சாலைத்துறையின் திட்டங்களின் போது, அந்த திட்டம் செயல்படும் மாநிலத்தின் அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் மூலமாகவே நிலம் கையகப்படுத்தப்படும். ஒரு திட்டத்தை செயல்படுத்தும்போது, அந்த திட்டத்திற்கு சம்பந்தப்பட்ட நபர்களிடம் (நிலத்தை வழங்கும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள்) நம்பிக்கையை ஏற்படுத்த மாநில அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் ஆதரவாக மத்திய நெடுஞ்சாலைத்துறை இருக்கும்.

மத்திய நெடுஞ்சாலையின் ஒவ்வொரு திட்டங்களிலும், விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவது முடிந்தவரையில் குறைவாக இருக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பெரும்பாலும் அரசு நிலமே எடுத்துக்கொள்ளப்படுகிறது.

சென்னை-சேலம் திட்டத்தைப் பொருத்தவரையில், கையகப்படுத்தும் நிலத்தில், சுமார் 20% அரசு நிலமாகவும், 15% விவசாய நிலமாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆரம்பகட்ட ஆய்வுகளின்படி, சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை மற்றும் காஞ்சீபுரத்தில் உள்ள மொத்த பாசன வசதி பெற்ற நிலத்தில், ஒரு சதவீதிற்கும் குறைவானவையே இந்த திட்டத்திற்காக பயன்படுத்தப்படும்.

கேள்வி: சென்னை-சேலம் விரைவுப்பாதை திட்டத்திற்காக நிதி அளிப்பது யார்?

பதில்: இந்த திட்டம் மத்திய அரசின் பாரத்மாலா என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக செயல்படுத்தப்படுகிறது.

Courtesy : BBC Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here