செல்லாத நோட்டுகளாய் கசங்கிப்போன மக்கள்

0
54

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அதிரடி அறிவிப்பை செவ்வாய்க்கிழமை இரவு பிரதமர் மோடி வெளியிட்டார். இந்த அறிவிப்பு பிரதமர் மக்களுக்கு ஆற்றிய உரையின் போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. அதில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் தற்போதுள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றும், புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வரும் என்றும் தெரிவித்தார். இது மக்கள் சிறிதும் எதிர்பாராத வேளையில் செய்யப்பட்டது. இதைப் பற்றி நடுத்தர, சாமானிய மக்களின் மனநிலை என்ன? அவர்களின் அன்றாட வாழ்வில் என்ன மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன? மதுரை மக்களிடம் பேசினோம். சென்னை போன்ற பெருநகர மக்கள் பலர் செவ்வாய்க்கிழமை இரவே 500, 1000 ரூபாய் செல்லாது என அறிந்தவுடன் அருகில் இருந்த ஏடிஎம் மையங்களுக்குச் சென்று தங்கள் கணக்கில் கையிலிருந்த பணத்தை இருப்பு வைக்கவும், பலர் இரண்டு நாள் தேவைக்கான பணத்தை எடுக்க நீண்ட வரிசையில் காத்துக் கிடந்தனர். ஆனால் இது பற்றி மதுரையிலுள்ள மக்களுக்குப் பெரும்பாலும் காலை வேளையில்தான் தெரியவந்துள்ளது.
%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%a9%e0%af%8d
பாண்டியராஜன் – மருந்து கடை
எங்களுக்கு இன்னைக்கு வியாபாரம் ரொம்ப டல்லாதான் போகுது. நேற்று இரவே இந்த அறிவிப்பு தெரிஞ்சும்கூட ஒரு முன்னேற்பாடும் பண்ண முடில. காலை கடை திறந்ததுல இருந்து நிறைய மக்கள் 500 ரூபா நோட்டுகளோட தான் வந்தாங்க. எங்ககிட்ட இருந்த அளவு சில்லறை கொடுத்துட்டோம். இப்போ சில்லறை இல்லாததனால 500 ரூபா கொண்டு வரவங்களுக்கு மருந்து தர முடியல. சில்லறையோட வாங்கன்னு அனுப்பிட்டோம்.
ramachandran
ராமச்சந்திரன் – வியாபாரம்
இதுபோல அறிவிப்பு பண்றதுக்கு முன்னால ஒரு எச்சரிக்கையும் செய்யாம இப்படிப் பண்ணது பெரிய பிரச்சனையாக இருக்கு. என்கிட்ட காசு இருக்கு. ஆனா அத வச்சு ஒண்ணும் பண்ண முடியல. 100 ரூபாதான் சில்லறையா இருக்கு. மிச்சம் உள்ள பணம் எல்லாம் 1000, 500 ரூபாதான். வியாபாரம் செய்யிற எங்களப்போல சின்ன வியாபாரிகள் எப்படி எங்க வேலையாட்களுக்கு சம்பளம் தர்றது? அப்படி அத வாங்கி அவங்க என்ன பண்ணுவாங்க? 500 ரூபா கொடுத்த எங்கயும் எந்தப் பொருளும் வாங்க முடியாது.
kumar
குமார் – துப்புரவுத் தொழிலாளி
நேத்து நைட் நான், என் மனைவி, பிள்ளைங்க எல்லாம் பொள்ளாச்சில உள்ள உறவினர் வீட்டிலே இருந்தோம். 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாதுன்னு அறிவிப்ப பார்த்ததும் அவசர அவசரமா மதுரைக்கு பஸ் ஏறி வந்தோம். என்கிட்ட இருந்தது எல்லாம் 1000, 500 ரூபாதான் காலையில இருந்து செல்லாதுன்னா எப்படி ஊர் போறதுன்னு உடனடியா அங்கயிருந்து கிளம்பிட்டோம். இது தெரிஞ்சதனால பரவா இல்ல; ஆனா அதப் பார்க்காதவங்க எல்லாம் எப்படி இன்னைக்கு அல்லாடுறாங்களோ. இது மாதிரி நேரத்துல எப்படி எங்களப் போல சாமானிய மக்கள் திடீர்ன்னு வேற ஏற்பாடு பண்ணமுடியும். பணம் உள்ளவங்க பேங்க் கார்டு வச்சு சமாளிப்பாங்க. ஆனா அதுலாம் என்னனுகூட தெரியாத நாங்க என்ன பண்ண?
pandi
பாண்டி – துப்புரவுத் தொழிலாளி
எனக்கு எதுவும் தெரியல. என்கிட்ட 500, 1000 ரூபாய் நோட்டு எதுவும் இல்ல, என்கிட்ட இருக்கது 100 ரூபா, 50 ரூபாதான். ஆனா காலையில இருந்து ஜனங்க சில்லறைக்காக அலையிறத பாக்க முடியிது. என்னதான் கறுப்புப் பணம் வெளிய கொண்டுவர நினைச்சாலும் அதுக்கு இப்படி திடீர் பதற்றத்த உருவாக்கி அலைய வைக்க வேணாமே.
ravichandran
ரவிச்சந்திரன் – பொதுப் பணித்துறை ஊழியர்
எனக்கு நேத்து 10 மணி செய்தில முக்கியச் செய்தி வரத பாத்துதான் தெரியும். வங்கி, ஏடிஎம் எதுவும் இல்லாம 500 ரூபாய வச்சுகிட்டு சில்லறைக்கு அலையறோம். கால சாப்பாடு சாப்பிட முடில கடக்காரங்க சில்லற இல்லன்னு சொல்லிட்டாங்க. டீ கூட குடிக்க முடியலங்க. இது என்ன நைட்டோட நைட்ட சொல்லறாங்க. அப்படி பண்ணக்கூட மொபைல் ஏடிஎம் மாதிரி ஒரு சில்லறை வழங்குற இயந்திரமோ மையமோ இருந்தா எல்லாரும் நிம்மதியா அவங்க அவங்க வேலையப் பாக்கலாம்ல. மருந்துகடை, பெட்ரோல் பங்க் எங்க போனாலும் 500 ரூபா கொடுத்தா சில்லற இல்லன்னு 500 ரூபாய்க்கும் வாங்கிக்க சொல்றாங்க. இருக்க மொத்த காசுலயும் மருந்து, பெட்ரோல் வாங்கிட்டா வீட்டுச் செலவுக்கு என்னாங்க பண்ணறது?
murugan
முருகன் – விவசாயி
500, 1000 ரூபாய் நோட்டு செல்லாதுன்னு டி.வில வந்ததுல இருந்தே இங்க இருக்க கடைகளில யாருமே வாங்கல. சில்லறை இல்லன்னு சொல்லி அனுப்புறாங்க. பள்ளிக்குச் செல்ற பிள்ளைக்கு பஸ் காசுகூட கொடுக்க முடியலங்க. அத்தியவாசியப் பொருள் எதுமே வாங்க முடியல. வீட்டுக்குத் தேவையான பால், காய் போன்ற அன்றாட அத்தியவசிய பொருள் வாங்ககூட முடியல. இருக்க காசுக்கு சில்லறை கிடைக்கிற மாதிரி எந்த வழியும் பண்ணாம இஷ்டத்துக்குத் தடை பண்றாங்க.
%e0%ae%9a%e0%af%86%e0%ae%b3%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d
செளந்திரபாண்டியன் – டீக்கடை வியாபாரி
இன்னைக்கு வியாபாரம் ரொம்ப பாதிச்சு இருக்குங்க. சில்லறை இருந்த அளவு கொடுத்து வியாபாரம் பண்றோம் இனி கொடுக்க எந்த சில்லறையும் இல்ல. சின்னச் சின்ன வியாபாரம் பண்றவங்களுக்கு பெரும் பாதிப்பு. பெரிய கம்பெனி கடைல முதல் பணத்துக்கு பிரச்சன இல்ல. ஆனா எங்களுக்கு இதுல இன்னைக்கு வர பணம்தான் நாளைய வியாபார முதல்.
bakkiyam
பாக்கியம் – பூ வியாபாரம்
காலையில பூ வாங்க மார்க்கெட் போனப்போதான் தெரியும் 500, 1000 ரூபாய் நோட்டு செல்லாதுன்னு, என்கிட்ட இருந்தது 500 ரூபா நோட்டுதான். ஆனா தெரிஞ்ச கடைக்காராங்கனால பூ வாங்கிக்க சொல்லிட்டாங்க. இல்லைன்னா இன்னைக்கு என் பாடு திண்டாட்டம் தான்.
kannan
கண்ணன் – ஆட்டோ ஓட்டுநர்
முன்கூட்டி சொல்லியிருந்தா எல்லாரும் தேவையான தொகையா வச்சிருப்பாங்க. ஆனா திடீர்ன்னு சொன்னா யார்கிட்ட கேட்கமுடியும். காலைல பெட்ரோல் போட போனா 500 ரூபாய்க்குப் போடச் சொல்றாங்க. சின்ன வண்டிக்கு 500 ரூபாய்க்குப் பெட்ரோல் போட்டு உடனடியா பணம் எடுக்க முடியாது. எப்பவும் 400, 500 ரூபாய்க்கு வர சவாரி இன்னைக்கு மதியம் வர 100 ரூபாய்க்குதான் போயிருக்கு. எப்படியும் இன்னும் ரெண்டு நாளைக்கு டல்லா தான் இருக்கும்.
dinesh
தினேஷ் – கல்லூரி மாணவர்
கறுப்புப் பணம் ஒழிக்கத்தான் இந்த நடவடிக்கைன்னா அப்புறம் எதுக்கு மறுபடியும் புது 500, 1000 ரூபாய் நோட்டு. உண்மையில புது 2000 நோட்டுகளோட புழக்கத்துனால பணம் அதிக சுலபமாக பதுக்கதான் வழிவகுக்கும். சும்மா கண் துடைப்பாதான் இது இருக்குமே தவிர இதனால நன்மை கிடையாது. சாதாரண மக்களுக்குத் தேவையில்லாத அழுத்தத்த தந்துருக்கு இந்தத் தடை.

இந்தத் திடீர் அறிவிப்பினால் நடுத்தர வார்க்க மக்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். வங்கிக் கணக்கு வைத்திருப்போரில் பலர் டெபிட் கார்ட், கிரெடிட் கார்ட் வைத்திருப்பர். பணம் ஏடிஎம்மில் எடுக்க முடியாவிட்டால்கூட கார்டுகளைப் பிரயோகித்துக் கொள்வர். ஆனால் இந்தியாவில் பலருக்கு வங்கிக் கணக்குகளே கிடையாது. இதில் எப்படி மக்கள் தங்களிடம் உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்ற இயலும்? ஒரு வேளை நண்பர்கள் கணக்கில் மாற்றினாலும் எத்தனை நாட்கள் பிறர் கணக்கில் பெறமுடியும் என கேள்வி எழுகிறது. 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்கிற அறிவிப்பு சரிவர திட்டமிடப்படாதது என்பதை மக்கள் படும் அவதி உணர்த்துகிறது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்