டிசம்பர் 5, 2016; ஜெயலலிதா மறைந்த நாள். புதிய தலைமுறை தொலைக்காட்சியில் பத்மபிரியா ஸ்ரீமலியும் இன்னொரு பெண் தொகுப்பாளரும் தொடர் நேரலைச் செய்திகளை வழங்க தயாராக இருக்கிறார்கள். ஆனால் சக ஊழியர் ஒருவர், “பெண்களை விட்டா உளறுவாங்க” என்கிற கருத்தைச் சொல்கிறார். அதை ஏற்றுக்கொண்டு ஆண் செய்தித் தொகுப்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. இப்படி வாய்ப்பு மறுக்கப்பட்ட அந்த அநீதியான தருணத்தை பத்மபிரியா நினைவுகூர்ந்தபோது, அந்த அரங்கிலிருந்த ஏராளமான பெண் பத்திரிகையாளர்கள் அந்த வலியை உணர்ந்தார்கள்.

டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் செய்தியாளர் கோமலுக்கு ஒரு ஐ.பி.எஸ் அதிகாரி ”நீங்க அழகா இருக்கீங்க” என்று எஸ்.எம்.எஸ் அனுப்புகிறார்; இது கோமலுக்குச் சுத்தமாக பிடிக்கவில்லை. என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கிறார். மூத்த பெண் பத்திரிகையாளர் ஒருவரிடம் ஆலோசனை கேட்டு உறுதி செய்துவிட்டு, “இது எனக்குப் பிடிக்கவில்லை” என்று பதில் எஸ்.எம்.எஸ் அனுப்புகிறார். “ஒரு பிரச்சினை ஆரம்பிக்கும்போதே அதைத் தடுத்து விடுவது சிறப்பானது” என்கிறார் கோமல். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கமும் தமிழ்நாடு பெண் ஊடகவியலாளர்கள் மையமும் ஒருங்கிணைத்த ”எனது வானம்! எனது சிறகு!” கருத்தரங்கில் பெண் பத்திரிகையாளர்கள் தங்களுடைய சவால்களைப் பற்றி பேசினார்கள்.

ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா மையம் யானைகளின் வழித்தடத்தில் ஆக்கிரமிப்புகளைச் செய்திருப்பதைப் பற்றி ஆதாரபூர்வமாக வீடியோ செய்தி வெளியிட்டதற்காக தன் மீது அவதூறுகள் ஏவப்பட்டதைப் பற்றி பத்திரிகையாளர் வித்யஸ்ரீ தர்மராஜ் விளக்கமாக பேசினார். டெல்லியிலிருந்து வந்த மூத்த பெண் பத்திரிகையாளர் பாஷா சிங், ஊடகங்களில் பெண்களுக்குப் பணிப் பாதுகாப்பு இல்லாத சூழலை விவரித்துப் பேசினார். திருமணமான பெண்கள் செய்தியறைகளில் இரண்டாம் தரமாக நடத்தப்படுவதை தானே நேரடியாக அவுட்லுக் செய்தி இதழில் கண்டதாக அவர் சொன்னார்; இந்தி மொழி ஊடகங்களில் ஒரு பெண்கூட செய்தி ஆசிரியராக இல்லை என்பதைச் சுட்டிக் காட்டினார்.

உலகம் முழுவதும் ஆய்வு செய்யப்பட்டவர்களில் 48 சதவீதம் பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளானதாக கூறியுள்ளார்கள்; 83 சதவீதம் பெண் பத்திரிகையாளர்கள் தங்களுக்கு நடந்த துன்புறுத்தலைப் பற்றி புகார் செய்யவில்லை என்று சொல்லியிருக்கிறார்கள். இந்த ஆய்வை தி ஹிந்து வெளியீட்டுக் குழுமத்தின் தலைவர் என்.ராம் மேற்கோள் காட்டினார். பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் ஹைதராபாத் செய்தி ஆசிரியர் கே.ஆர்.சீனிவாஸ் பதவி விலகியது வரவேற்கத்தக்க முன்னுதாரணம் என்றார் ராம். இதே பண்பும் பக்குவமும் மோடி அரசுக்கு இல்லை என்பதை பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் பதவி விலக மறுப்பதிலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது என்றார் அவர்.

The Raya Sarkar Interview

#MeToo: Brave New World

#MeToo: அதிகாரத்தை அடித்து நொறுக்கு

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்