2015 ஆம் ஆண்டு பெரும் வெள்ளத்துக்கு பின்னர் சென்னை மக்களுக்கு தொடர் மழை என்றாலே ஒரு வித அச்சம் தொற்றிக் கொள்வது வாடிக்கையாகிவிட்டது. தற்போதைய  நிலவரப்படி எப்படி இருக்கிறது செம்பரம்பாக்கம் ஏரி ? என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு

சென்னை மக்களின் குடிநீர் ஆதாரங்களில் மிக முக்கியமானது செம்பரம் பாக்கம் ஏரி. பூந்தமல்லிக்கு அருகே நான்கு கி.மீ. தொலைவில் உள்ளது செம்பரம்பாக்கம் ஏரி.

ஏரி நிரம்பும் தருவாயில், சென்னை மக்களின் குடி நீர் தேவைக்கு போக மீதம் உள்ள உபரி நீர் மட்டுமே செம்பரம் பாக்கம் ஏரியில் இருந்து கால்வாய் வழியாக அடையாற்றில் திறந்து விடப்படும். அந்த உபரி நீர் திருமுடிவாக்கம் , வழுதலம்பேடு , திருநீர்மலை பகுதிகளை கடந்து அனகாபுத்தூர், மீனம்பாக்கம் மணப்பாக்கம், ஈக்காட்டு தாங்கல் சைதாப்பேட்டை, கோட்டூர்புரம், அடையாறு, ராஜா அண்ணாமலைபுரம் வழியாக சென்று பட்டினபாக்கத்தில் வங்க கடலில் கலக்கிறது..!

13 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 85.40 அடி. தற்போது இந்த ஏரியில் 66.20 அடிக்கு மட்டுமே தண்ணீர் உள்ளது. ஏரியின் தரைப்பகுதி தெரியும் அளவுக்கு தான் தண்ணீர் உள்ளது. செம்பரம் பாக்கம் ஏரியை கண்டு அச்சம் கொள்ள தேவையில்லை.

இந்த ஆண்டு பெரும் மழை பெய்தால் மட்டுமே இந்த ஏரிக்கு தண்ணீர் வரத்து இருக்கும், இல்லையென்றால் வரும் கோடை காலத்தில் சென்னை மக்களுக்கு குடி நீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு செம்பரம் பாக்கம் ஏரியில் நீரின் அளவு குறைவாக இருப்பதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த ஏரியை தூர் வாரி ஆழப்படுத்தி இருந்தால் இன்னும் அதிக நீரை தேக்கி வைத்திருக்கலாம்..! ஆனால் இந்த ஏரி கடந்த 2015 ஆண்டு பெரும் வெள்ளத்திற்கு பின்னரும் கூட ஆழப்படுத்த வில்லை..! என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
 திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களை சேர்ந்த 3700 க்கும் மேற்பட்ட சிறு ஏரிகள் நிரம்பினால் அந்த உபரி நீரும் செம்பரம்பாக்கத்திற்கு தான் வந்தடையும்..! 

மேலும் ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து வரும் கிருஷ்ணா நதி நீர் பூண்டி ஏரியை வந்தடைந்து அங்கிருந்து குடி நீர் தேவைக்காக செம்பரம்பாக்கம் ஏரிக்கும் திறந்து விடப்படுகிறது.

தற்போதைய நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேறும் செம்பரம்பாக்கம், திருநீர்மலை கால்வாய் நீர் வழித்தடங்கள் பெரும்பாலும் சீமைகருவேலம் மரங்களாலும், குப்பை மேடுகளாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அத்தோடு வழுதலம் பேடு பகுதியிலும் முள்செடிகள் அடர்ந்து சில தொழிற்சாலை கட்டிடங்கள், கான்கிரீட் குடியிருப்பு கட்டிடங்களும் செம்பரம் பாக்கம் ஏரியின் நீர்வழித்தடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது. 

இது போன்ற ஆக்கிரமிப்புகளால் தான் தண்ணீர் ஆற்றிற்கு செல்லாமல் ஊருக்குள் செல்லும் நிலை ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

உபரி நீர் வரும் நீர் கால்வாய் பகுதி மீது அரசு கவனம் செலுத்தி, முள்செடிகள், மரங்கள், குப்பைகள், தொழிற்சாலைகள், கான்கிரீட் வீடுகள் போன்றவற்றை முன் கூட்டியே அகற்றி கால்வாயை அகலப்படுத்துவதோடு கரையின் இருபுறமும் கருங்கற்களான தடுப்புச்சுவர்கள் அமைத்தால் தண்ணீர் தங்கு தடையின்றி செல்ல வழி ஏற்படும்.

நீர்வழித் தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றுவதன் மூலம் பெரும் மழைக்காலங்களில் செம்பரம்பாக்கம் ஏரியில் திறந்து விடப்படும் உபரி நீர் ஊருக்குள் புகுவதை நிரந்தரமாக தடுக்கலாம்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்