அண்ணா பல்கலைக்கழகத்தில் மறுப்பீட்டில் கூடுதல் மதிப்பெண் வழங்குவதில் 3 ஆண்டு காலங்களில் ரூ.240 கோடி ஊழல் நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் மறுமதிப்பீட்டில் நடந்துள்ள ஊழல்கள், தமிழக கல்வித் துறையில் இதுவரை நடந்துள்ள ஊழல்கள் அனைத்தையும் மிஞ்சுவதாக உள்ளது.

விடைத்தாள் மறுமதிப்பீட்டில் ஊழல் நடந்து விடக்கூடாது என்பதற்காக பல்வேறு கட்டுப்பாடுகளை அண்ணா பல்கலைக்கழகம் உருவாக்கி உள்ளது. ஆனால் அந்த கட்டுப்பாடுகளை எல்லாம் நவீன முறையில் ஏமாற்றி, மிக நூதனமாக இந்த முறைகேடு நடந்துள்ளது.

அண்ணா பல்கலைக் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் தங்களது விடைத்தாளை மறுமதிப்பீடு செய்ய விரும்பினால் ரூ.700 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். அந்த 700 ரூபாயில் ரூ.300 விடைத்தாள் போட்டோ காப்பிக்கும் ரூ.400 மறுமதிப்பீட்டுக்கான கட்டணமாக எடுத்துக் கொள்ளப்படும்.

ரூ.700 பணம் கட்டி விண்ணப்பித்ததும், அந்த பாடத்துக்குரிய நிபுணர், அந்த விண்ணப்பத்தை ஆய்வு செய்வார். மதிப்பெண் மறுமதிப்பீட்டுக்கு அந்த விடைத்தாள் உகந்ததா? என்று ஆய்வு செய்து பரிந்துரை செய்வார். இதையடுத்து அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் மூலம் மறுமதிப்பீடு நடக்கும் மையம் தேர்வு செய்யப்படும். அந்த வகையில் 23 மையங்களில் மறுமதிப்பீடு பணி நடக்கும்.

அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி நேரடியாக இதற்கான அதிகாரிகள் மற்றும் மறு மதிப்பீடு செய்பவர்களை முடிவு செய்து நியமிப்பார். மறுமதிப்பீட்டின் போது ஏற்கனவே எடுத்த மதிப்பெண்களை விட குறைவான மதிப்பெண் வந்தால் எந்த மாற்றமும் செய்ய மாட்டார்கள்.

மறுமதிப்பீடு செய்த பிறகு ஏற்கனவே எடுத்த மதிப்பெண்ணை விட 15 சதவீதத்துக்கும் கூடுதலாக மதிப்பெண் பெற்றால், மேலும் ஒரு நபரிடம் மறு மதிப்பீடு செய்ய உத்தரவிடப்படும். அவர்கள் இருவரில் யார் அதிக மதிப்பெண் அளித்துள்ளாரோ அது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

இந்த இடத்தில்தான் தில்லுமுல்லு நடத்தப்படும். குறிப்பிட்ட மாணவருக்கு அதிக மதிப்பெண் கிடைக்கும் வகையில் இடைத்தரகர்கள் செய்து விடுவார்கள். இந்த இடைத்தரகர்கள் அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகத்தையே சுற்றி, சுற்றி வருபவர்களாக உள்ளனர்.

இந்த இடைத்தரகர்களுக்கும் விடைத்தாள் மறு மதிப்பீடு செய்யும் பேராசிரியர்கள் சிலருக்கும் நெருக்கமான நட்பு உண்டு. இந்த கும்பல்தான் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்ற ஆசையுடன் வரும் மாணவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு முறைகேடு செய்துள்ளனர்.

அதாவது விடைத்தாள் திருத்தத்துக்கு ஏற்ப இந்த கும்பல் லஞ்சம் வாங்கியுள்ளது. பாசானால் போதும் என்ற மாணவர்களிடம் கொஞ்சம் பணம் வாங்கியுள்ளனர். அதிக மதிப்பெண் வேண்டும் என்று விரும்பும் மாணவர்களிடம் அதிக பணத்தை வாங்கியுள்ளனர். சராசரியாக அவர்கள் மாணவர்களிடம் தலா ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கி இருப்பது உறுதியாகியுள்ளது.

இந்த லஞ்சப் பணம் தேர்வு கட்டுப்பாட்டு துறையில் உள்ள உயர்மட்ட அதிகாரிகளின் கைகளுக்கும் சென்று சேர்ந்து இருக்கலாம் என்று லஞ்ச ஒழிப்பு போலீசார் கருதுகிறார்கள். அதை உறுதிப்படுத்தவே நேற்று அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.

பொதுவாக அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வு கட்டுப்பாட்டு துறையில் அதிகாரியாக நியமனம் செய்யப்படுபவர்கள் 3 ஆண்டுகள் அந்த பதவியில் இருப்பார்கள். அதாவது தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியாக ஒருவர் நியமனம் செய்யப்பட்டால் அவர் 6 செமஸ்டர்களை நடத்தும் பொறுப்பை ஏற்பார்.

6 செமஸ்டர்களின் தேர்வு நடத்துவது, முடிவை வெளியிடுவது விடைத்தாள் மறு மதிப்பீடு செய்வது உள்ளிட்ட அனைத்தும் அவர்களது கட்டுப்பாட்டில்தான் நடைபெறும்.

இந்த நிலையில் 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் வெளியான அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு முடிவுக்கு பிறகே சுமார் 3 லட்சம் பேர் விடைத்தாள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்து அதில் 90 ஆயிரம் பேர் கூடுதல் மதிப்பெண் பெற்று இருக்கிறார்கள். இவர்களில் பாதி பேர் லஞ்சம் கொடுத்து இருக்கலாம் என்ற சந்தேகத்தின்படி ஒரு செமஸ்டருக்கு ரூ.40 கோடி முதல் ரூ.45 கோடி வரை மாணவர்களிடம் இருந்து லஞ்சம் பெறப்பட்டுள்ளது.

தற்போது குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் தங்களது 3 ஆண்டுகள் பணிக்காலத்தில் 6 செமஸ்டர்களிலும் இத்தகைய முறைகேடுகளில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். அந்த சந்தேகம் உண்மையாக இருக்கும்பட்சத்தில் கடந்த 3 ஆண்டுகளில் அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.240 கோடி ஊழல் நடந்து இருப்பதாக கருதப்படுகிறது.

தனிப்பட்ட வகையில் சிலர் மட்டுமே இந்த முறைகேடுகளை செய்ய இயலாது. அனைத்து மறுமதிப்பீடு மையங்களிலும் இடைத்தரகர்கள் மூலம் இந்த ஊழல் ஜாம்…ஜாம் என்று நடந்துள்ளது.

போலீசார் மேலும் தீவிர விசாரணை நடத்தினால் பல நூறு கோடி ரூபாய் முறைகேடுகள் எப்படி நடந்தது என்பது வெளிச்சத்துக்கு வரும். அது மட்டுமின்றி அண்ணா பல்கலைக் கழகத்தில் உள்ள கறுப்பு ஆடுகளும் யார் என்பது தெரிந்துவிடும்.

Courtesy : Maalaimalar

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here