சென்னை மெரினாவில் கருணாநிதிக்கு இடம் : தீர்ப்பின் முக்கியம்சம்

0
352

சென்னை மெரினா கடற்கரையில் திமுக தலைவர் கருணாநிதிக்கு இடம் ஒதுக்கித் தருமாறு தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

திமுக தலைவர் கருணாநிதியின் உடலை நல்லடக்கம் செய்ய சென்னை மெரினாவில் இடம் ஒதுக்கித் தருமாறு தமிழக அரசிடம் திமுக தலைவர் வைத்த கோரிக்கையை அரசு நிராகரித்து விட்டது.

இதையடுத்து திமுக நீதிமன்றத்தை நாடியது. நேற்று இரவு 10.30 மணியளவில் திமுக தொடர்ந்த மனு மீது விசாரணை தொடங்கியது.

விசாரணையில் திமுக தரப்பில் பல வாதங்களை முன் வைத்தது. அதனை தவிடுபொடியாக்கும் வகையில் தமிழக அரசும் சில பலமான வாதங்களை முன் வைத்ததோடு, முன்னாள் முதல்வர் ஜானகி அம்மாளுக்கு மெரினாவில் இடம் ஒதுக்க முடியாது என்று கருணாநிதி அளித்த உத்தரவின் நகலையும் தாக்கல் செய்தது.

ஆனாலும், சட்ட சிக்கல் என்ற ஒன்றை தமிழக அரசால் கடைசி வரை நிரூபிக்க முடியாத வகையில், ஜெயலலிதா நினைவிடத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்பட்டதால் பின்னடைவு ஏற்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கலைஞர் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்கவும், கண்ணியமான முறையில் இறுதிச் சடங்குகள் நடைபெற நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டனர்.

மேலும், தங்களது தீர்ப்பில் அவர்கள் குறிப்பிட்ட முக்கிய அம்சம் என்னவென்றால், மெரினாவில் இடம் வழங்க முடியாது என்று கூறிய தமிழக அரசு, சட்ட சிக்கல் என்பதை நிரூபிக்கவில்லை.

மத்திய அரசு வகுத்த விதிமுறைகளை இந்த வழக்கில் கொண்டு வர முடியாது. மேலும், ஜெயலலிதா நினைவிடத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்பட்டதாலும் சட்ட சிக்கல் என்ற வாதம் தீர்வுக்கு வந்தது என்று தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

14 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு கலைஞருக்கு வெற்றி கிட்டியது. இந்த தீர்ப்பின் மூலம் தனது மரணத்துக்குப் பிறகும் திமுகவினருக்கும், தமிழக மக்களுக்கும் ஒரு ஆனந்தக் கண்ணீரை ஏற்படுத்திக் கொடுத்தார் கலைஞர் கருணாநிதி.

Courtesy : Dinamani

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்