சென்னை பெரம்பூர் தனியார் பள்ளியில் மாணவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி ஆசிரியரைப் போலீசார் கைது செய்தனர்.

சென்னை திரு.வி.க நகரைச் சேர்ந்த முரளி என்பவரின் மகன் நரேந்தர், பெரம்பூரில் உள்ள டான் பாஸ்கோ பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். புதன்கிழமையன்று நரேந்தரை அவரது தந்தை வழக்கம்போல் இரு சக்கர வாகனத்தில் பள்ளியில் விட்டுச் சென்றுள்ளார்.

இந்நிலையில் சில மணி நேரம் கழித்து, நரேந்தரின் தந்தைக்கு, பள்ளி நிர்வாகத்தினர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நரேந்தர் பள்ளியில் மயங்கி விழுந்து விட்டதாகவும், அதனால் அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

அங்கு, நரேந்தர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததையடுத்து, அதிர்ச்சியடைந்த நரேந்தரின் தந்தை முரளி, திரு.வி.க நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில், பள்ளிக்குத் தாமதமாக வந்த நரேந்தருக்கு டக்வாக் தண்டனை வழங்கப்பட்டதாகவும், இதில் நரேந்தர் மயங்கி விழுந்ததாகவும் தெரிய வந்ததாகவும், அதனால் பள்ளி உடற்கல்வி மற்றும் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில், பள்ளி வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. பதிவுகளைப் போலீசார் ஆய்வு செய்தனர். அதனைத்தொடர்ந்து உடற்கல்வி ஆசிரியர் ஜெய்சிங் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் அருள்சாமி ஆகியோரைப் போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்: ஒக்கி: கண்ணுக்குப் புலப்படாத மக்களுக்கு நடந்த கண்ணுக்குப் புலப்படாத பேரிடர்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்