சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 33 ஆயிரம் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் சிறப்பு வேலைவாய்ப்பு முகாமிற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகப்படுத்த வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மற்றும் தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம் மூலமாக வருகிற 6.2.2016, சனிக்கிழமை அன்று காலை 8.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை டி.பி.ஜெயின் கல்லூரி, துரைப்பாக்கம், சென்னை-96-ல் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒக்கியம்-துரைப்பாக்கம் மற்றும் பெரும்பாக்கத்தில் வசிக்கும் மக்கள் பயன்பெறும் வகையில் அப்பகுதியில் உள்ள 150 தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்போடு அவர்கள் வாழும் இடத்திலேயே அவர்களுக்கான வேலைவாய்ப்பினை வழங்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் இம்முகாம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த முகாமில் இரவு காவலர், ஓட்டுநர், சமையலர், கம்பியர் போன்ற இனங்களில் 8000-க்கும் மேலான பணிகளுக்கு, பணிநியமன ஆணைகளை, தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்களால் வழங்கப்பட உள்ளது. தமிழ்நாடு திறன் மேம்பாட்டு வளர்ச்சித் துறையுடன் இணைந்து தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தால் மறுகுடியமர்வு செய்யப்பட்டவர்களுள் 4,200 இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு ரூபாய் நான்கு கோடி செலவில் திறன் பயிற்சிகள் வழங்க பயிற்சியாளர்கள் தேர்வு செய்யவும் இந்த முகாமில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள மறுகுடியமர்வு திட்டப்பகுதிகளிலிருந்து துரைப்பாக்கத்திற்கு போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளது. தற்போது மறுகுடியமர்வு செய்யப்பட்ட 3,590 குடும்பங்களுடன் ஏற்கெனவே ஒக்கியம்-துரைப்பாக்கம், பெரும்பாக்கம் மற்றும் அதனருகில் வசித்து வரும், குடிபெயர்யத 29,410 குடும்பங்களும் ஆக மொத்தம் 33,000 குடும்பங்களும் இதன் மூலம் பயன் பெற வாய்ப்பு உள்ளது. ஒக்கியம்-துரைப்பாக்கம் மற்றும் பெரும்பாக்கத்தில் வசிக்கும் மறுகுடியமர்த்தப்பட்ட மக்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலயது பயன் பெற்றுக் கொள்ளுமாறு தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்