சென்னை பாக்ஸ் ஆபிஸ் – இங்கேயும் சிங்கம்தான் கிங்

0
166

சென்னை பாக்ஸ் ஆபிஸில் இந்த வாரம் ஆங்கில ரியலிஸ்டிக் அனிமேஷன் திரைப்படமான தி லயன் கிங் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

கடந்த இரு மாதங்களில் வெளியான தமிழ்ப்படங்கள் எதுவும் லாபம் தரவில்லை. சில படங்கள் மட்டும் சுமாராக வசூலித்தன. பிற 98 சதவீத படங்கள் படுதோல்வியை சந்தித்தன. அதில் சமுத்திரகனி நடிப்பில் நவீன் தயாரித்த கொளஞ்சி படமும் அடக்கம். இந்தப் படம் 3 லட்சத்துக்கும் குறைவான வசூலையே முதல் பத்து தினங்களில் பெற்றுள்ளது.

அமலா பாலின் ஆடை திரைப்படம் விமர்சனரீதியாக புகழப்பட்ட அளவுக்கு வசூலிக்கவில்லை. சென்றவார இறுதியில் 5.34 லட்சங்களை மட்டுமே இப்படம் வசூலித்தது. முதல் பத்து தினங்களில் இதன் சென்னை வசூல் 50.65 லட்சங்கள். ஒரு கோடியை கடந்திருந்தால் படம் வெற்றிக்கணக்கில் சேர்ந்திருக்கும்.

5. ஜட்ஜ்மென்டல் ஹேய் கியா (இந்தி)

கங்கனா ரனவத் நடித்திருக்கும் இந்தப் படம் சென்றவாரம் வெளியானது. படம் முதல்நாளில் குறைவாக வசூலித்தாலும் அடுத்தடுத்த நாள்களில் சின்ன முன்னேற்றத்தை பெற்றிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. சென்னையில் முதல் மூன்று தினங்களில் இதன் வசூல் 12.18 லட்சங்கள்.

4. கடாரம் கொண்டான்

விக்ரம் நடித்திருக்கும் கடாரம் கொண்டான் முதல்வார இறுதியில் முதலிடத்தைப் பிடித்தது. இரண்டாவது வார இறுதியான சென்றவார இறுதியில் சுமார் 26.18 லட்சங்களை வசூலித்துள்ளது. இது முதல்வார இறுதி வசூலில் கிட்டத்தட்ட ஏழில் ஒரு பங்கு. முதல் பத்து தினங்களில் இதன் சென்னை வசூல் 2.60 கோடிகள்.

3. டியர் காம்ரேட்

விஜய் தேவரகொண்டா நடித்திருக்கும் மும்மொழிப் படமான டியர் காம்ரேட் சுமாரான வரவேற்பையே தமிழகத்தில் பெற்றுள்ளது. எனினும் ஓபனிங் மோசமில்லை. சென்றவாரம் வெளியான படம் முதல் மூன்று தினங்களில் சென்னையில் 50.50 லட்சங்களை வசப்படுத்தியுள்ளது.

2. A1

சந்தானம் நாயகனாக நடித்திருக்கும் A1 சென்றவாரம் வெளியானது. தில்லுக்கு துட்டு சீரிஸ் தவிர சந்தானம் ஹீரோவாக நடித்து வெளிவந்த படங்களில் காமெடிக் காட்சிகள் ஓரளவு சிரிக்க வைத்த படம் இதுவே. வசூலிலும் அது எதிரொலிக்கிறது. முதல் மூன்று தினங்களில் இதன் சென்னை வசூல் 1.05 கோடி.

1. தி லயன் கிங் (ஆங்கிலம்)

தி லயன் கிங் திரைப்படம் முதல்வார இறுதியில் 1.40 கோடியை வசூலித்து கடராம் கொண்டானுக்கு அடுத்த இடத்தைப் பிடித்திருந்தது. வார நாள்களில் இப்படம் 1.12 கோடியை வசூலித்தது. இரண்டாவது வார இறுதியில் இப்படம் 1.57 கோடியை தனதாக்கியுள்ளது. இது முதல்வார இறுதி வசூலைவிட அதிகம். இரண்டாவது வார வசூல் முதல்வாரத்தைவிட அதிகரிப்பது மிக அரிதாகவே நடக்கும். முதல் பத்து தினங்களில் தி லயன் கிங்கின் வசூல் 4.10 கோடிகளாகும்.