சென்னை நகரவாசிகள் ஷவரில் குளிப்பதற்கு பதிலாக பக்கெட்டில் இருந்து நீரை எடுத்துக் குளித்தால் சுமார் 82 லிட்டர் தண்ணீரை ஒவ்வொருவரும் சேமிக்கலாம் என்கிறது சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம்.

சென்னை நகருக்கு தினமும் 850 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவை என்றாலும் தற்போது 550 மில்லியன் லிட்டர் மட்டுமே நகரவாசிகளுக்கு விநியோகம் செய்யமுடிகிறது என்பதால், மக்கள் பயன்பாட்டில் சிக்கனத்தை கடைப்பிடித்தால், ஒவ்வொருவரும் தினசரி பயன்பாட்டில் 300 லிட்டர் தண்ணீரைச் சேமிக்க முடியும் என விழிப்புணர்வு செய்தியை அரசு வெளியிட்டுள்ளது.

குளிப்பதில் தொடங்கி கார் உள்ளிட்ட வண்டிகளை கழுவுவதற்குப் பயன்படுத்துவதுவரை நீரை எவ்வாறு சிக்கனமாக பயன்படுத்தலாம் என்ற விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.

துணிகளை துவைக்கும்போது குழாயில் தண்ணீரை திறந்துவிட்டு அலசுவதற்கு பதிலாக, பக்கெட்டில் நீரை பிடித்துவைத்து அலசினால், 116 லிட்டர் செலவாகும் இடத்தில் வெறும் 36 லிட்டர் மட்டுமே செலவாகும் என்று கூறப்படுகிறது.

அதேபோல பல்துலக்கும்போது மற்றும் காரை கழுவும்போது, குழாயில் தண்ணீரை திறந்துவிடுவதற்கு பதிலாக சிறிய பாத்திரத்தில் தண்ணீரை பிடித்துவைத்துப் பயன்படுத்தினால், ஐந்து லிட்டர் நீருக்கு பதிலாக வெறும் 0.75 லிட்டர் மட்டுமே செலவாகும்.

செடிகளுக்கு தண்ணீர் விடும்போது 50 லிட்டர் செலவாகும் இடத்தில் பக்கெட்டில் நீரை எடுத்து செடிகளுக்கு ஊற்றினால்,50 லிட்டருக்கு பதிலாக வெறும் 10 லிட்டர்தான் செலவாகும் என்று கூறப்படுகிறது. தோட்டங்கள் வைத்திருப்பவர்கள், தினமும் 100 லிட்டர் செலவிடும் இடத்தில் பக்கெட் பயன்பாட்டின் மூலம் சுமார் 70 முதல் 75 லிட்டர் நீரை சேமிக்கலாம் என்கிறது சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம்.

நவம்பர் மாதம் வரை மழைக்காக சென்னை நகரம் காத்திருக்கவேண்டிய சூழலில் தண்ணீர் பயன்பாட்டில் ஒவ்வொரு துளி நீரையும் மக்கள் சேமிக்கவேண்டும் என்கிறது அரசு.

திருச்சியைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் சுப்புராமன் தன்னுடைய வீட்டில் மழை நீரை சேமிப்பு குடிநீராக பயன்படுத்துவதோடு, தண்ணீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்துகிறார். சென்னை குடிநீர்வழங்கல் வாரியம் பட்டியலிட்டுள்ள விதிமுறைகள் சிறப்பானவை என்றாலும், அரசு அலுவலகங்கள், தண்ணீர் சிக்கனத்திற்கான மாதிரியாக திகழ்ந்தால்தான் மக்கள் மத்தியில் மாற்றம் ஏற்படும் என்கிறார்.

”தண்ணீர் தட்டுப்பாட்டில் சென்னை நகரம் தவிக்கும்போது விழிப்புணர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். இது வரவேற்கத்தக்கது.ஆனால் தண்ணீரை உருவாக்கமுடியாது. இயற்கையின் கொடையை எப்போதும் சேமிக்கவேண்டும். தண்ணீரை வீடுகளுக்கு அளிக்க அரசாங்கம் பதித்துள்ள குழாய்களில் உள்ள உடைப்புகளை உடனே சரிசெய்வது, தண்ணீர் எடுத்துச் செல்லும் லாரிகளில் தண்ணீர் சிந்தாமல் தடுப்பது போன்ற எளிமையான மாற்றங்களை அரசு செய்யவேண்டும்,”என்கிறார்.

மேலும், ஒவ்வொரு ஊரிலும் அரசு அலுவலகங்களில் தண்ணீரை சேமித்து, அந்த அலுவலகங்களை மக்கள் பார்வையிட்டு சேமிப்பின் பலனை தெரிந்துகொள்ளலாம் என்று அரசு எடுத்துக்காட்டாக செயல்பாட்டால் மக்களிடம் மாற்றம் உருவாகும் வாய்ப்பு அதிகம் என்கிறார் சுப்புராமன்.

”மழை நீர் சேமிப்பு தொடங்கி, கழிவறை நீரை மறுசுழற்சி செய்வது என அரசு அலுவலகங்களில் பல லட்சம் லிட்டர் நீரை சேமிக்கமுடியும். மக்களுக்கு எடுத்துக்காட்டாக அரசும், அரசின் நெறிகளை மக்களும் பின்பற்ற வேண்டும். அரசு பின்பற்றாதபோது மக்கள் அதனை கேள்வி கேட்கவேண்டும்,” என்கிறார் சுப்புராமன்

Courtesy: BBC

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here