சென்னை ஐஐடி-யில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகமாக இருக்கிறது – ஆய்வில் தகவல்

0
158

 சென்னை ஐ.ஐ.டி-யில் சாதிய அடிப்படையில் பெரும் ஏற்றத் தாழ்வுகளும், தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு எதிரான வன்முறைகளும் அதிகமாகவே இருக்கிறது என்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய உறுப்பினர் ஸ்வராஜ் வித்வான் தெரிவித்துள்ளார்.

சென்னை ஐ.ஐ.டி-யில் நிகழும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள் குறித்து தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய உறுப்பினர் ஸ்வராஜ் வித்வான் ஆய்வு செய்தார்.

சென்னை ஐஐடியில் தாழ்த்தப்பட்ட பிரிவு மாணவர்கள் உளவியல்ரீதியாக துன்புறுத்தப்படுவதாகவும் மாணவர் சேர்க்கை மற்றும் பணி நியமனங்களில் இடஒதுக்கீடு புறக்கணிக்கப்படுவதாகவும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்துக்கு பல்வேறு புகார்கள் வந்தன.

இதனால் சென்னை ஐஐடி-யில் பயிலும் தாழ்த்தப்பட்ட பிரிவு மாணவர்களின் நிலை பற்றி தெரிந்து கொள்ள தேசிய எஸ்.சி ஆணைய உறுப்பினர் சுவராஜ் வித்வான் கடந்த சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களிடம் கருத்துகளை கேட்டறிந்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சுவராஜ் வித்வான், “நம்நாட்டில் உள்ள மற்ற ஐஐடி-களை ஒப்பிடும்போது சென்னை ஐஐடியின் நிலைமை கவலை அளிக்கும் விதமாக உள்ளது. இங்கு தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகமாக இருக்கிறது. ஐஐடி-யில் கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் 2017-ஆம் ஆண்டு வரை, 17 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

ஆனால், அதற்கான காரணம் முழுமையாக அவர்களது பெற்றோருக்கு தெரிவிக்கப்படவில்லை. மேலும், இடஒதுக்கீடு முறையும் முழுமையாக பின்பற்றப்படவில்லை. மொத்தமுள்ள 2,322 முதுநிலை அறிவியல் இடங்களில், இதுவரை 47 எஸ்சி, 6 எஸ்டி பிரிவு மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர்.

தாழ்த்தப்பட்டோர் மட்டுமின்றி பிற்படுத்தப்பட்ட பிரிவினர்களும் உடல் மற்றும் மனரீதியாக துன்புறுத்தப்படுவதாக மாணவர்கள், ஊழியர்கள் தரப்பில் புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.” என்று கூறினார்.

மேலும் இது குறித்து பிரதமர் மோடி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லப் போவதாகவும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here