சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் காய்கறி இறக்குமதி செய்யப்படுகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்து வருகிறது. இதனால் காய்கறி சந்தையில் அவற்றின் வரத்து குறைந்து உள்ளது. இதன் தொடர்ச்சியாக காய்கறிகளின் விலை அதிகரித்து உள்ளது.
தொடர்மழை, விளைச்சல் மற்றும் வரத்து குறைவு, ஆகியவற்றால் கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் வெங்காயத்தின் விலை கடந்த ஒரு வாரத்தில் 3 மடங்காக உயர்ந்துள்ளது.
இதனால், கடந்த வாரம் ரூ.25க்கு விற்பனை செய்யப்பட்ட வெங்காயத்தின் விலை தற்போது ரூ.80க்கு விற்கப்பட்டு வருகிறது.
இந்த விலை மேலும் உயர வாய்ப்பிருப்பதாக வணிகர்கள் கூறுகின்றனர். வெங்காயத்தைப் போலவே, கடந்த வாரம் ஒரு கிலோ 20 ரூபாய்க்கு விற்கப்பட்ட கேரட், இன்று 60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கத்திரி, அவரை, பீட்ரூட், முள்ளங்கி, வெண்டைக்காய் போன்ற காய்கறிகளின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளதால், இது பொதுமக்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தி உள்ளது.