பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு அதிகரித்துள்ளது. மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:

பெட்ரோல், டீசல் விலையானது, அதன் உச்சபட்ச மதிப்பிலிருந்து குறைந்துள்ளது. இதன் காரணமாகவும், அரசின் வரி வருவாயை அதிகரிக்கும் நோக்கிலும், பெட்ரோல், டீசல் மீதான கூடுதல் கலால் வரி லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்படுகிறது. மேலும், பெட்ரோல், டீசல் மீதான சாலைக் கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டுக்கான கூடுதல் வரியையும் (செஸ்) லிட்டருக்கு ரூ.2 உயர்த்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

இதன் மூலம் அரசுக்கு ரூ.28,000 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும். இது தவிர, கச்சா எண்ணெய் மீதான இறக்குமதி வரி டன்னுக்கு ரூ.1 உயர்த்தப்படுகிறது. இந்த இறக்குமதி வரி மூலம் ரூ.22 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என்றார். 

பெட்ரோல் மீது தற்போது ரூ.17.98 மொத்த கலால் வரி (அடிப்படை கலால் வரி-ரூ.2.98; கூடுதல் கலால் வரி-ரூ.7; செஸ் வரி-ரூ.8) விதிக்கப்படுகிறது. டீசல் மீதான மொத்த கலால் வரி ரூ.13.83 (அடிப்படை கலால் வரி-ரூ.4.83; கூடுதல் கலால் வரி-ரூ.1; செஸ் வரி-ரூ.8) ஆக உள்ளது.

இவை தவிர, ஒவ்வொரு மாநிலமும் வெவ்வேறு சதவீதங்களில் மதிப்பு கூட்டு (வாட்) வரியை பெட்ரோல், டீசல் மீது விதித்து வருகின்றன. 

கலால் வரி உயர்த்தப்பட்ட காரணத்தினால், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 2.57 மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ. 2.52 அதிகரித்துள்ளது. சென்னையில் சனிக்கிழமை நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 75.76 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் ரூ. 70.48 விற்பனை செய்யப்படுகிறது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here