சென்னையில் கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில், பல்வேறு தளர்வுகளை அமல்படுத்தியது அரசு. பொதுமக்களும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினர். திரையரங்குகள், கடற்கரைகள், மீன் மார்க்கெட்டுகள் ஆகியவை கட்டுப்பாடின்றி திறக்கப்பட்டதால் மக்களின் கூட்டம் பெருக்கெடுத்தது.

ஆனால், இந்த இடங்களில் கொரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகளை மக்கள் கடைப்பிடிப்பதில்லை. குறைந்தபட்சம் முகக் கவசம் கூட அணிவதில்லை. இதனால், கொரோனாவின் மூன்றாவது அலை பரவுமோ என்ற அச்சம் பலருக்கும் இருக்கிறது.

அதேபோல், 15 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி அளிக்கும் தனியார் பயிற்சி மையங்கள், மாணவர்களை அரசுக்கு சொந்தமான பள்ளி மற்றும் கல்லூரி மைதானங்களுக்கு அழைத்து வந்து பயிற்சி அளிக்கின்றனர். 15 வயதிற்குட்பட்டவர்களை கொரோனா மூன்றாம் அலை தாக்கும் என்பதால்தான் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அரசு இதுவரை பள்ளிகளைத் திறக்கவில்லை.

மூன்றாம் அலை பரவலாம் என்கிற எச்சரிக்கை இருக்கும் நிலையில், தியேட்டர்கள், கடற்கரைகள், மீன் மார்க்கெட்டுகள், கிரிக்கெட் பயிற்சிகள் என தொடர்வது கொரோனாவை பரப்பாதா..? என்று கொரோனா களப்பணியில் இருக்கும் செவிலியர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இதுகுறித்து அரசின் கவனத்துக்கும் சென்னை மாநகராட்சிக்கும் புகார்கள் பறந்துள்ளன. இது தொடர்பாக இரு தரப்பும் ஆலோசிக்கின்றனர். இதனால் சில தீவிர கட்டுப்பாடுகளை சென்னைக்குள் அமல்படுத்தலாமா? என்று மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here