டிடிவி ஆதரவாளராக இருந்த செந்தில் பாலாஜி தனது ஆதரவாளர்களுடன் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார்.

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் செந்தில் பாலாஜி திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தார். 2006 ஆம் ஆண்டு கரூர் தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 2011 முதல் 2015 வரை தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சராகவும் பணியாற்றினார் செந்தில் பாலாஜி. 2015 ஆம் ஆண்டு அமைச்சர் பொறுப்பில் இருந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் நீக்கப்பட்ட பின், 2016 இல் அரவக்குறிச்சி தொகுதியில் எம்.எல்.ஏ ஆனார்.

ஜெயலலிதா மறைவிற்கு பின், எடப்பாடி அணியில் இருந்து பிரிந்து தினகரன் அணியில் செயல்பட்டு வந்தார். இதனால் தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டதாக தங்க தமிழ்ச்செல்வன், செந்தில் பாலாஜி உள்பட 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதில் மேல் முறையீடுக்கு செல்லாமல் இடைத்தேர்தலை சந்திக்க டிடிவி தரப்பு தயாரானது. இதில் செந்தில் பாலாஜிக்கும் டிடிவி தினகரனுக்கும் மனக்கசப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்த் செந்தில் பாலாஜி தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியது. இதைத்தொடர்ந்து சுத்த தங்கங்களான நீங்கள் இருக்கும் போது முலாம் பூசப்பட்ட போலிகள் விலகுவதால் இங்கு யார் வருந்தப் போகிறார்கள் என டிடிவி தினகரன் அமமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

மேலும் அந்தக் கடிதத்தில், “நெல்மணிகளோடு சில களைகளும் சேர்ந்து வளர்ந்து விடுவது வழக்கமானதுதான். துரோகத்தை வேரறுக்க தியாகத்தால் அணிவகுப்போம். ஒரு சிறு குழு விலகி செல்வதால் கட்சிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்பட்டு விடாது. மீண்டும் இணைய அழைக்கும் துரோக கூட்டத்திற்கு செல்லக்கூடாது. அமமுகவின் எழுச்சியை தடுத்து வளர்ச்சியை முடக்கும் முயற்சிகள் தீவிரமாக உள்ளது. அமமுகவை அழிக்க நினைப்பவர்கள் உயர் மின் அழுத்த மின்சாரத்தை தொடுவதற்கு சமம்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்,செந்தில் பாலாஜி தனது ஆதரவாளர்களுடன் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார். இதில் கரூரில் உள்ள 4 சட்டமன்ற தொகுதியில் இருந்தும் செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் வந்திருந்தனர். 18 ஆண்டுகளுக்கு பின் திமுகவில் இருந்து விலகி சென்ற செந்தில் பாலாஜி இன்று மீண்டும் திமுகவில் இணைந்துள்ளார்.

இதுகுறித்து செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் கூறுகையில் திமுக தலைமை மீது தங்களுக்கு நம்பிக்கை இருப்பதாகவும் அதனால் நாங்கள் திமுகவில் இணைகிறோம் எனவும் தெரிவித்தனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here