செண்பகராமன் பிள்ளை: ஹிட்லரை எதிர்த்த ஒரே இந்தியன்

மறக்கப்பட்ட சரித்திர நாயகன் ஒருவரது கதை

0
12
செண்பகராமன் பிள்ளை

எம்டன் என்ற பிரமாண்ட ஜெர்மானிய போர்க்கப்பல், சென்னை மீது குண்டுகளை வீசிக்கொண்டிருந்தது. கேரள கடற்பகுதியில் நங்கூரமிட்ட அந்தக் கப்பல், பிரிட்டிஷ் கப்பல்களைத் தடுத்து, சராமாரியாக தாக்கியழித்துக்கொண்டிருந்தது. இந்தத் தாக்குதலுக்குப் பின்னால், செண்பகராமன் பிள்ளை இருக்க வேண்டும் என்று இந்திய மக்கள் நம்பினார்கள். கடந்த ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி, செண்பகராமன் பிள்ளை என்ற அந்த வீர தேசபக்தனின் 125வது பிறந்தநாள் கடந்து போனது. அந்த மனிதனின் வீரம் செறிந்த அஸ்தி, அவன் பிறந்த தேசத்தில் கரைக்கப்பட்டு, 50 ஆண்டுகளாகிறது. முதலாம் உலக யுத்தத்தின் நூறாண்டு நிறைவு விழா நடந்து முடிந்தபோது, ஒவ்வொரு நாடும் தங்கள் ஆஸ்தான தலைவரை நினைத்துக் கொண்டாடின. ஆனால் செண்பகராமன் பிள்ளையை நினைத்துப் பார்க்க சொந்த தேசத்தில் யாருமில்லை..

1914 செப்டம்பர் 22ஆம் தேதி. அப்போதைய மதராஸ் துறைமுகம். இரவு 9.45 மணி. கிழக்கின் அன்னப்பறவை என்ற பெயர்கொண்ட ஒரு போர்க்கப்பல் அரவமில்லாமல் வந்து நங்கூரமிடுகிறது. முதலாம் உலக யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த அந்த நேரத்தில், தென் இந்தியாவுக்கு எந்தச் சேதமும் ஏற்பட்டிருக்கவில்லை. எனவே, கடல் நகரம் மெதுவாய் கண் அயரத் தொடங்கியிருந்தது. யாரும் எதிர்பாராத நேரத்தில், அந்தக் கப்பலிலிருந்த பீரங்கிகள் குண்டுகளைக் கக்கத் தொடங்கின. துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிரிட்டிஷ் எண்ணெய் டாங்கர்கள் மீது குண்டுகள் விழுந்து, நெருப்புக் குழம்பாய் வெடித்துச் சிதறின. 10 லட்சம் லிட்டர் வரையிலான மண்ணெண்ணெயை, குண்டுகள் அனலாக்கி அப்படியே குடிக்கத் தொடங்கின.

எரியும் பெருநெருப்பு வெளிச்சத்தில், மதராசப்பட்டினம் நடுப்பகல்போல் ஜொலிக்கத் தொடங்கியது. கடலை நோக்கி காற்று வேகமாக வீசிக்கொண்டிருந்த அதிர்ஷ்டத்தின் காரணமாக, சென்னை தப்பியது. இலக்கு தவறி சில குண்டுகள் இடம் மாறி விழுந்ததேயன்றி, சென்னையின் எந்தப் பகுதியையும் கப்பல் தாக்கவில்லை. கடலில் நிற்பது, உலக வரலாற்றில் அதிக நாசத்தை விளைவித்த கப்பலான, ஜெர்மனியின் எஸ்.எம்.எஸ். எம்டன் என்பதை, பின்னரே சென்னை நகரவாசிகள் அறியலானார்கள்.

எம்டனின் குண்டுவீச்சு தொடர்ந்ததால், மக்கள் உடனடியாக பட்டணத்தை விட்டு வெளியேறத் தொடங்கினார்கள். பெரும் சேதத்தை ஏற்படுத்திய எம்டன் கப்பல், பின்னர் கேரள தீரம் வழியாக நகரத் தொடங்கியது. லட்சத்தீவில் உள்ள மினிகாய் தீவைச்சுற்றி முன்னேறிய அந்தக் கப்பல், அக்டோபர் 15ஆம் தேதி முதல் அங்கேயே ஐந்து நாட்கள் நங்கூரமிட்டது. அந்த வழியாக வந்த ஐந்து பிரிட்டிஷ் கப்பல்களை அடித்து மூழ்கடித்தது. ஆனால், அந்தக் கப்பல்களில் பயணம் செய்த யாரையும் மரணத்தைத் தழுவ அனுமதிக்கவில்லை எம்டன்.

இலங்கையிலிருந்து நியூயார்க் நகருக்கு கரும்பு சரக்கு ஏற்றி பயணித்துக்கொண்டிருந்த செயின்ட் எக்பேர்ட் என்ற ஒரு கப்பல் தடுத்து நிறுத்தப்பட்டது. மூழ்கடிக்கப்பட்ட கப்பல்களிலிருந்து மீட்கப்பட்ட, முந்நூற்றைம்பதுக்கும் மேற்பட்டவர்கள், எக்பேர்ட் கப்பலில் ஏற்றிவிடப்பட்டு, கொச்சி துறைமுகத்திற்கு பத்திரமாக அனுப்பிவிடப்பட்டனர்.
பயமறியாத எம்டன் கப்பலில், தலைமைத் தளபதிக்கு அடுத்த ஸ்தானத்தில் கமாண்டிங் ஆஃபீசர் சி. செண்பகராமன் பிள்ளை இருந்தார் என்ற செய்தி வேகமாக பரவியது. சென்னைப் பட்டணத்தைக் குண்டுகளுக்கு இரையாக்காமல் காப்பாற்றியிருந்தார் செண்பகராமன் பிள்ளை. அதுமட்டுமல்லாது, சென்னை துறைமுகத்தில் இறங்கிய செண்பகராமன் பிள்ளை, ”நண்பர்களே, இந்தத் தாக்குதல் இந்தியர்களுக்கு எதிரான தாக்குதல் அல்ல; இது பிரிட்டனுக்கு எதிரான தாக்குதல்” என்று தமிழில் உரையாற்றியதாக செய்திகள் உண்டு.

அந்தக் காலகட்டத்தில் கொச்சியில் வாழ்ந்த ஒரு பிரிட்டிஷ் பெண்மணி, தன்னுடைய நாட்குறிப்பில் இவ்வாறாக எழுதுகிறார். எம்டன் கப்பலில் இருந்து, இலங்கையின் செயின்ட் எக்பேட் கப்பலில் பயணப்பட்டு வந்த சில ஜெர்மானிய கடற்படை வீரர்கள், கொச்சியில் இறங்கி, அங்கிருந்த ஒரு யூதரின் வீட்டில் “சாப்பாடு“ சாப்பிட்டார்கள் என்ற செய்தியே அது. அந்த வீரர்கள் கூட்டத்தில் செண்பகராமன் பிள்ளை இருந்தார் என்று, இன்றளவும் சொல்லப்படுவது உண்டு.
வெளிநாட்டிலிருந்து ஒரு படையைக் கொண்டு வந்து, பிரிட்டிஷ் இந்தியாவைத் தாக்கி, ஆங்கிலேயரை இந்தியாவிலிருந்து துரத்திவிட வேண்டும் என்பதே, சுதேச பற்றுமிக்க செண்பகராமன் பிள்ளையின் திட்டமாக இருந்தது. அந்தத் திட்டத்தின் ஒரு பகுதிதான், சென்னை துறைமுகத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் என்று, இப்போதும் பலரால் நம்பப்படுகிறது. எதுவாக இருந்தாலும், எம்டனின் நினைவுகளையும், கதைகளையும் தமிழகம் இன்றளவும் மறக்கவில்லை.

வீரம் செறிந்த செண்பகராமன் பிள்ளையின் உருவச் சிலையை, சென்னை காந்தி மண்டப வளாகத்தில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு, அப்போதைய முதலமைச்சர் மு.கருணாநிதி திறந்து வைத்தார். செண்பகராமன் பிள்ளை பிறந்த மாநிலமான கேரளாவோ, அவரை முற்றாக மறந்துவிட்டது. ஆனால், “பயங்கரமானவன்” என்ற அர்த்தத்தில், “அவன் எம்டனாணு” என்ற ஒரு நகைச்சுவை சொல்லாடலைத் தவிர…

செண்பகராமன் பிள்ளை யார்? அவர் எப்படி ஜெர்மனிக்குச் சென்றார்?

திருவனந்தபுரத்தில், தலைமைச் செயலகம் அருகில், இன்றைய ஏஜீஎஸ் அலுவலகம் உள்ள இடத்தில் ஒரு சிறிய வீட்டில், வெங்கிடி என்று அப்போது அறியப்பட்ட ஒரு சிறிய குடும்பத்தில் பிறந்தார் செண்பகராமன். அங்கிருந்த மாடல் பள்ளியில் படித்து வந்த சிறுவன் செண்பகராமன், வகுப்பிலேயே ஆங்கிலேயருக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினான். முதன்முதலாக “ஜெய் ஹிந்த்” என்று அந்தச் சிறுவன் கோஷமிட்டதைக் கேட்ட தலைமை ஆசிரியர் மிரண்டுவிட்டார். போலீசாருக்குத் தகவல் அளிக்கப்பட்டு, போலீசும் வந்தார். வந்தவர் வேறுயாருமல்ல; செண்பகராமனின் தந்தையான சின்னச்சாமி பிள்ளை. (இது செண்பகராமன் பிள்ளை பற்றிய நினைவேந்தல் நிகழ்ச்சியில், தமிழக காங்கிரசின் மூத்த தலைவரும், முன்னாள் மாநிலத் தலைவருமான குமரி அனந்தன் கூறிய செய்தி)

அன்று, பிரிட்டன் விஞ்ஞானியான வால்டர் ஸ்ட்ரிக் லேண்ட், வண்ணத்துப்பூச்சிகள் குறித்த ஆராய்ச்சியை மேற்கொள்ள, திருவனந்தபுரத்தில் தங்கியிருந்தார். அப்போது, ஒரு பிரபல அறிவியல் மாத இதழில், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 18 வயது இளைஞன், சிலந்திகளின் நிற மாற்றம் குறித்த ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். அவனைச் சந்தித்தார் வால்டர் ஸ்ட்ரிக் லேண்ட்.

டி. பத்மநாப பிள்ளை என்ற அந்த இளம் ஆராய்ச்சியாளனால் ஈர்க்கப்பட்ட வால்டர், அவனை மேல் படிப்பு படிக்க வைக்க, இங்கிலாந்துக்கு அழைத்துச் சென்றார். அவனுடன், அவனின் உற்ற நண்பனும், நெருங்கிய உறவினனுமான இளைஞன் செண்பகராமன் பிள்ளையும் அழைத்துச் செல்லப்பட்டார். ஆஸ்திரியாவில் ஒரு கல்லூரியில் சேர்க்கப்பட்ட செண்பகராமன், அங்கு டிப்ளமா பட்டயப்படிப்பில், பொறியியல் படிப்பை முடித்தார். அறிவியல் அரசியலிலும், பொருளாதார அறிவியலிலும் விருதுகள் பெற்றார். 12 மொழிகளில் புலமை பெற்றிருந்த அவர், ஜெர்மனியில் புகழ்பெற்ற ஆராய்ச்சி மையங்களில் பொறியாளராக பணியாற்றி வந்தார். சுமார் 20 ஆண்டு காலம் ஜெர்மனியில் வசித்து வந்தார் செண்பகராமன் பிள்ளை.
“என் கணவன் ஒரு ராஜாவைப்போல் வாழ்ந்திருக்க வேண்டியவர்” என்று பின்னாளில் அவரின் மனைவி லக்ஷ்மி பாய் கூறியிருந்தார். அப்படிப்பட்ட செண்பகராமன் பிள்ளைக்கு என்ன நேர்ந்தது?

எம்டன் கப்பலில் பிள்ளை இருந்தாரா?

எம்டன் கப்பல், இந்தியப் பெருங்கடலில் நின்றிருந்த 2ஆம் மாதம், ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில், தீவிர அரசியல் நடவடிக்கைகளில் பிள்ளை ஈடுபட்டிருந்தார் என்று, சான்றுகள் கூறுகின்றன. அப்படியானால், கப்பலில் அவர் இருந்திருக்க முடியாது. ஆனால் எம்டன் கப்பல் மூலம் கொச்சியில் அவர் வந்திறங்கியதாக, பிள்ளையின் மனைவி பின்னாளில் கூறியுள்ளார்.

கப்பலில் அவர் வரவில்லை என்று வைத்துக்கொண்டாலும், ஜெர்மனியில் இருந்தபோது, செண்பகராமன் பிள்ளை மற்றும் இந்திய புரட்சி சிப்பாய்களின் உதவி, எம்டன் கப்பலுக்கு கிடைத்திருக்க வேண்டும். எம்டன் கப்பலில் முதன்மை அதிகாரியாக இருந்த லெப்டினன்ட் வோன் மூக் எழுதிய எம்டன் நினைவுக்குறிப்புகளில், இது குறித்த தெளிவுகள் உண்டு.
எம்டன் கப்பல் இந்தியாவுக்கு வந்து, திரும்பிச் சென்றது இந்தோனேசியா கடல் வழியாக இருந்தது. கிழக்காசியா வழியாக நுழைந்து, பிரிட்டிஷ் இந்தியாமீது தாக்குதல் நடத்துவதற்கு, இயன்ற உதவியைச் செய்வதாக செண்பகராமன் பிள்ளைக்கு, இந்தோனேசியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட சுதந்திர புரட்சிப்படையைச் சேர்ந்த டாக்டர். டொவ்ஸ் டெக்கர் வாக்குறுதி அளித்திருந்தார்.

இந்தியாவின் ஒரு முக்கிய புரட்சிக்காரனான செண்பகராமன் பிள்ளை, சுவிட்சர்லாந்தில் வைத்து, ஜெர்மனியின் தூதரைச் சந்தித்து, 1914 செப்டம்பரில் இந்திய புரட்சிப் படைகள் முன்னெடுக்கவிருந்த திட்டங்கள் குறித்த விவரங்களை கைமாற்றியதாக, பிரிட்டிஷ் புலனாய்வு முகமை பதிவு செய்துள்ளது. ஜெர்மனியின் அப்போதைய சக்கரவர்த்தியுடன்கூட, பிள்ளைக்கு மிக நெருக்கம் இருந்ததாக, அவரை ஜெர்மனியில் வைத்து சந்தித்தவரான, பறவைகள் ஆராய்ச்சியின் தந்தை எனப் போற்றப்படும் சலீம் அலி, தன்னுடைய சுயசரிதையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

முதலாம் உலக யுத்தத்தில், நடுநிலை நிலைப்பாடுடன் இருந்த சுவிட்சர்லாந்தை மையமாகக்கொண்டு, சுதந்திர இந்தியாவுக்கான ஆதரவாளர்கள் சங்கத்தை நிறுவினார் செண்பகராமன் பிள்ளை. பெர்லினை மையமாக வைத்து ஜெர்மனியிலும், இங்கிலாந்திலும் புரோ இந்தியா என்ற பெயரில் இந்திய விடுதலை ஆதரவு முன்னெடுப்புகளைத் தொடங்கினார். இவருக்கு கவிக்குயில் சரோஜினி நாயுடுவின் சகோதரரான வீரேந்திரநாத் சட்டோபாத்தியாயா (சாட்ரோ) நெருங்கிய கூட்டாளியாக இருந்தார். முதலாம் உலக யுத்த காலத்தில், இங்கிலாந்தின் உளவுப்பிரிவு கட்டுப்பாட்டு அதிகாரியான ஜோன் வெலிங்கர், தனக்கு கீழ் உள்ள ஆர் என்பவரின் தலைமையில், உளவாளிகளை சுவிட்சர்லாந்துக்கு அனுப்பி, இவர்களைக் கொன்றழிக்க உத்தரவிட்டிருந்தார்.

பிரபல நாவலாசிரியர் சாமர்செட் மோம் என்பவர்தான் அந்த ஆர் என்ற அதிகாரி. பின்னாளில் மோம், இந்திய புரட்சிப்படைகளில் இருந்தவர்களின் வாழ்வைத் தழுவி, பல கதாபாத்திரங்களையும் படைத்தார்.
இதனிடையே, உளவுப்படை வருவதையறிந்த பிள்ளையும், சாட்ரோவும் பெர்லினுக்கு புறப்பட்டு சென்றனர். அங்கு, இந்தியன் சுதந்திர லீக் (இன்டியன் இன்டிபென்டன்ஸ் லீக்) அமைப்புக்கு கீழ், இந்திய சிப்பாய்கள் ஏராளமாக கூடிவந்திருந்தனர். அவர்களில் பிரபல மலையாள நாவலாசிரியராக இருந்த சி.வி. ராமன் பிள்ளையின் மருமகனான எ.ஆர். ராமன் பிள்ளை, மலையாள சிறுகதைகளின் தந்தை என்று போற்றப்படும் வேங்கையில் குஞ்சிராமநாயனாரின் மகன் எ.சி.என். நாணு நம்பியார் மற்றும் செண்பகராமன் பிள்ளையுடன் சென்றிருந்த டி.பத்மநாம பிள்ளை ஆகிய மலையாளிகளும் உடனிருந்தனர். செம்பக் என்ற அழைக்கப்பட்ட செண்பகராமனும், சாட்ரோவும் இணைந்து, சாட்ரோ-செம்பக் பெர்லின் கமிட்டி என்ற அமைப்பை தோற்றுவித்தனர். இதில் பிற புரட்சிப்படையினரும் இவர்களுடன் கைகோர்த்தனர். பணம், ஆயுதங்கள் இவைகளைச் சேகரித்துக்கொண்டு, இந்திய கடல் பகுதிக்கு செல்ல வேண்டும்; பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக தாக்குதல் நடத்த வேண்டும்; இந்தியாவை, ஜனநாயக, சோசலிச அரசமைப்பு கொண்ட நாடாக மாற்ற வேண்டும் என்பதே இந்தக் கமிட்டியின் திட்டம்.

இதற்கான படையைத் திரட்டுவதற்காக, ஐரோப்பிய நாடுகளிலும், ஆசியாவிலும், ஆப்ரிக்காவிலிருந்த ஜெர்மானிய காலனியாதிக்க நாடுகளிலும் பல பெயர்களில் தங்கியிருந்தார் செண்பகராமன் பிள்ளை. உங்களிடம் போதிய ஆள்பலம் இருந்தால், பணமும், ஆயுதங்களையும் தரத்தயாரென, ஜெர்மனி ஃபாரின் ஆஃபீஸ் இசைவு தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து, போரைத் தலைமையேற்று நடத்த, டி. பத்மநாப பிள்ளையும், பல சிப்பாய்களும் இந்தியாவுக்குத் திரும்பினர்.
போர் எட்டாத பகுதியாக, அதே சமயம் இந்தியாவுக்கு மிக அருகிலுள்ள நாடாக, இந்தோனேசியாவுக்கு அருகிலுள்ள ஜாவா தீவு இருந்தது. அங்கு ஜெர்மானிய கப்பல், ஆயுதங்களைக் கொண்டுவந்து இறக்கி வைக்க வேண்டும் என்பதாக இருந்தது திட்டம். அந்தக் கப்பலை எதிர்கொண்டு சென்று, ஆயுதங்களைப் பெற, நரேந்திரநாத் பட்டாச்சாரியா என்ற சிப்பாய் அனுப்பப்பட்டிருந்தார். ஆனால் கப்பல் வரவில்லை. அவர் பெரும் அலைச்சலுக்கு உள்ளானதே மிச்சம். இதனால், அங்கிருந்து ரஷ்யாவின் மாஸ்கோ நகருக்கு பயணப்பட்ட பட்டாச்சாரியா, தனது பெயரை, எம்.என். ராய் என மாற்றிக்கொண்டு வாழ்ந்தார். தனது வெளிநாட்டு மனைவியுடன் சேர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை தோற்றுவித்தார் பட்டாச்சாரியா.

பிரிட்டிஷ் இந்தியாவை, காஷ்மீரின் வடமேற்குப் பகுதியில் இருந்தும் தாக்க வேண்டும் என்பதே, செண்பகராமன் பிள்ளையின் யுத்த வியூகமாக இருந்தது. இதற்காக ஜெர்மனியின் நேச நாடான துருக்கி விமானப்படையின் பின்துணையையும் உறுதி செய்திருந்தார். அதோடு, பிரிட்டனுக்கு எதிராக இருந்த ஆப்கானிஸ்தானிலிருந்து, அமீரின் சகாயமும் கிடைக்கலானது. அமீர் உதவி செய்யவில்லை என்றாலும், தன்னுடைய சகோதரன், மக்கள் மற்றும் மத பண்டிதர்கள் என மொத்தம் 50 ஆயிரம் பேரை அனுப்பிவைப்பதாக அவர் வாக்குறுதி அளித்திருந்தார். 1914 ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் தேதி, ஐ.என்.வி. எனப்படும் இன்டியன் நேஷனல் வாலன்ட்டரி கார்ப்ஸ் எனப்படும் இந்திய தேசிய தன்னார்வப் படை உருவாக்கப்பட்டது.
அந்தப் படையுடன் பெர்லினில் எழுச்சிக்கான உரையை நிகழ்த்தினார் செண்பகராமன் பிள்ளை. இந்தியர்களுடன் வெளிநாட்டவரையும், உள்நாட்டவரையும் உணர்வடையச் செய்து ஒன்று சேர்க்க விரும்பிய அவர், அங்கிருந்த முஸ்லிம்களையும், சீக்கியர்களையும் ஒவ்வொருவராக சந்தித்து உணர்வுண்டாக்கினார்.

இதன் காரணமாகவே, அடுத்த மாதங்களில் நிகழ்த்தப்பட்ட எம்டன் கப்பல் தாக்குதலில், பிள்ளையின் “கைகள்” இருந்தன என்ற சந்தேகம் உறுதிப்படுத்தப்பட்டது. இந்தத் தாக்குதலுக்காக, சீனாவும், ஜப்பானும் கூட்டு சேர்ந்து உதவ வேண்டும் எனக்கோரி ஆள் அனுப்பப்பட்டது. ரஷ்யாவுக்கு அனுப்பப்பட்ட இரண்டு பேரில் ஒருவரான பூபேந்திரநாத் தத்தா, சுவாமி விவேகானந்தரின் தம்பியாவார். மேலும் இரண்டு பேரை, அமெரிக்காவின் தேசிய தலைவர்களைச் சந்தித்து பேசவும் அனுப்பியிருந்தார் பிள்ளை. பின்னர், அந்நாள் மெசப்படோமியாவான இந்நாள் ஈராக்கில் ராணுவ முகாமை அமைத்தார்.
இந்தியாவில் புரட்சி வெடித்தால், உடனே நிர்வாகத்தில் அமர்த்த, காபூலை மையமாக வைத்து, அங்கு தற்காலிக அரசையும் உருவாக்கினார். வெளிராஜ்ஜிய கொள்கைகளை செண்பகராமன் பிள்ளையே வகுத்து வைத்திருந்தார்.
ஆனால், முதலாம் உலகப்போரில் ஜெர்மனி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, பிள்ளையின் அத்தனை திட்டங்களும் பாழாயின. 1919இல் மீண்டும் ஜெர்மனிக்கு திரும்பினார் அவர். அதேநேரம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட ரஷ்யப்புரட்சியைத் தொடர்ந்து, சட்டர்ஜி உள்பட ஒரு பெரும் கூட்டம் ரஷ்யாவுக்குச் சென்றது. முடிவில் சர்வாதிகாரி ஸ்டாலினின் படைகள் கொன்று குவித்தவர்களில், துரதிருஷ்டவசமாக சட்டர்ஜியும் சிக்கி மாண்டார். ஸ்டாலினின் குரூரத்தைக் கண்ட எம்.என்.ராய் (பட்டாச்சாரியா) மார்க்சியத்தை விட்டுவிட்டார்.

இவைகள் நடந்து முடிந்த பின்பு, ஒரு ஜெர்மானிய நிறுவனத்தில் பொறியாளராக தற்காலிக பணியில் சேர்ந்த செண்பகராமன் பிள்ளை, இந்திய விடுதலைக்காக தொடர்ந்து முயற்சித்துக்கொண்டே இருந்தார். 1930இல் இந்தியன் சேம்பர் ஆப் காம்ர்ஸ்-ன் (இந்திய வர்த்தக சபை) பெர்லின் பிரதிநிதியாக தேர்வானார் பிள்ளை. நாஜிகளுக்குத் துணையாக நின்ற தேசிய மக்கள் கட்சி (நேஷனல் பீப்பிள்ஸ் பார்ட்டி)யில் வெள்ளைக்காரன் அல்லாத ஒரே அயல்நாட்டுக்காரரும் இவரே…
ஹிட்லருடன் ஏற்பட்ட மோதல்

ஜெர்மனியின் சர்வாதிகாரியான ஹிட்லருடன் ஆரம்பத்தில் நல்ல நட்பில் இருந்தார் பிள்ளை. ஆனால் ‘ஆரிய வம்சத்தாரல்லாத இந்தியர்களை, பிரிட்டிஷார் ஆட்சி செய்கிறார்கள் என்றால் அது, இந்தியர்களின் தலைவிதி’ என்ற ஹிட்லரின் வாய்மொழி கேட்டு, தேசப்பற்றாளனான பிள்ளை வேதனை கொண்டார். (1931 அக்டோபர் 10ஆம் தேதி, ஹிட்லரின் இந்தப் பேச்சு பத்திரிகைகளில் வெளியானது.) அந்த நாட்களில் ஹிட்லர் ஒரு வளர்ந்த சர்வாதிகாரியாக வளராத நேரம். பிரிட்டனுடன் நல்லுறவைப் பேண விரும்புவதாக காட்டிக்கொள்ள, மற்றொரு முறையும் இவ்வாறாக திருவாய் மொழிந்தார் ஹிட்லர். (அதே ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி) “பிரிட்டன் இந்தியாவை இழந்தால், எந்த ஒரு ராஜ்யத்துக்கும் அது நல்லதல்ல; ஜெர்மனி உள்பட“…

இதனைத் தொடர்ந்து ஹிட்லருக்கு செண்பகராமன் பிள்ளை கடிதம் ஒன்றை எழுதினார். அதில், “திருவாளர் ஹிட்லர், நீங்கள் ரத்தத்தைவிட சிவப்பான தோலுக்கு முக்கியத்துவம் தருகிறீர்கள்; எங்கள் தோல் கருத்ததாக இருக்கலாம்; ஆனால் எங்கள் இதயங்கள் கருப்பானவைகளல்ல“ எனக் காட்டமாக குறிப்பிட்டிருந்தார்.
ஹிட்லர் தன்னுடைய கருத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்றும், இந்தியர்களிடம் அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் அறிவுறுத்தியிருந்தார். அதற்காக ஹிட்லருக்கு காலக்கெடுவும் விதித்தார் வீரச்செண்பகராமன் பிள்ளை.

இதனைத் தொடர்ந்து, தன்னுடைய செயலாளரை அனுப்பி ஹிட்லர் மன்னிப்பு கேட்டாராம். ஆனால் அதே சமயம் தன்னைக் கருத்த இதயமுள்ளவன் என பிள்ளை விமர்சித்ததை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. செத்தாலும் இந்தியர்கள் உண்மையைத்தான் பேசுவார்கள் என்றும் பிள்ளை காட்டமாக கூறியிருந்தார்.
முடிவில், பிள்ளையின் காலக்கெடு முடிந்து முதல் நாள் தொடங்கி, ஹிட்லரின் எதிர் நடவடிக்கைகளால் இருவருக்குமான தொடர்பில் ஏற்பட்ட பெரும்பிளவு நீடித்து நிலைத்தது.

1933ஆம் ஆண்டு ஜனவரியில் ஜெர்மனியின் சான்ஸிலரானார் (பிரதமர்) ஹிட்லர். ஜூன் மாதத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒழித்துக்கட்டி, சர்வாதிகார சிம்மாசனத்தில் அமர்ந்தார் ஹிட்லர்.
பின்னர் நாஜிகளின் அட்டூழியம் தொடங்கியது. பெர்லினில் குடியிருந்த பிள்ளையின் வீட்டுக்குள் புகுந்த அவர்கள், அவரை மிகக்கொடூரமாக தாக்கி, வெளியே இழுத்து வீசிவிட்டுச் சென்றனர். படுகாயம் அடைந்த அவர், சிகிச்சைக்காக இத்தாலி சென்றார். அங்கு அவரது தலையில் ரத்தம் உறைந்து கட்டி ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சம்பாத்தியம் குறைந்ததால், பிள்ளையால் உயர்சிகிச்சை பெற முடியவில்லை. ஒரு சாதாரண நர்சிங் ஹோமில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த செண்பகராமன் பிள்ளை, 1934 மே 28ஆம் தேதி மரணத்தைத் தழுவிக்கொண்டார்.
ஹிட்லருக்கு எதிராக ஒருவரும் நாவைக்கூட அசைக்க முடியாதிருந்த அந்தச் சூழலில், தனது கணவர், தன் சொந்த நாட்டுக்காக ஹிட்லரை எதிர்த்து நின்றார் என்றும், இதனால் வேதனையை ஏற்ற அவர், இடிந்துபோன மனிதனாக உயிரிழந்தார் என்று வேதனையுடன் அவரின் மனைவி லக்ஷ்மி பாய் பின்னாட்களில் பதிவு செய்துள்ளார்.
திருவனந்தபுரத்தில் நேதாஜியின் சிலை

1933இல் ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் நடந்த ஒரு சந்திப்பின்போது, நேதாஜி சுபாஷ் சந்திரபோசை செண்பகராமன் பிள்ளையின் வீட்டில் பார்த்ததாக, பகத் சிங்கின் சித்தப்பாவும், சுதந்திரப் போராட்ட தியாகியுமான சர்தார் அஜித் சிங், தன்னுடைய சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டில் ஒரு படையைத் திரட்டி, பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக போராடுவதற்கு, நேதாஜிக்கு வழிகாட்டியதும், இந்திய தேசியப் படைக்கு முன்பே (ஐஎன்ஏ) இந்திய தேசிய தன்னார்வ படையை (ஐஎன்வி) உருவாக்கியதும் செண்பகராமன் பிள்ளையின் யுத்த திட்டங்களாக இருந்தது.
மாவீரனாக விளங்கிய செண்பகராமன் பிள்ளை பிறந்த ஊரான திருவனந்தபுரம் நகரத்தில், பல்கலைக்கழக ஸ்டேடியத்திற்கு முன்பு, சுபாஷ் சந்திர போசின் முழு உருவச் சிலை கம்பீரமாக நிற்கிறது. ஆனால், செண்பகராமன் பிள்ளைக்கு ஒரு சிலையும் இல்லை. நினைவுச்சின்னமாகக்கூட ஒன்றுமே இல்லை. நேதாஜியின் சிலையில் பொறிக்கப்பட்டுள்ள “ஜெய் ஹிந்த்” என்ற முழக்கத்தை உருவாக்கியவர் செண்பகராமன் பிள்ளை. சாத்தியம் இருந்திருந்தால், சிலையாக உள்ள நேதாஜியே கீழே இறங்கி வந்து, இந்த நன்றியில்லா மனங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பார் என்பது மட்டும் சத்தியம்..

நன்றி – மலையாள மனோரமா நாளிதழ்

தமிழில் – குஞ்சம்மாள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்