சர்கார் படத்தின் கதை வருண் ராஜேந்திரனின் செங்கோல் கதைதான், சர்கார் டைட்டில் கார்டில் வருண் ராஜேந்திரனுக்கு நன்றி தெரிவிக்கப்படும் என்று முருகதாஸ் நீதிமன்றத்தில் கூறியதைத் தொடர்ந்து சர்கார் படத்துக்கு தடைகோரி தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் பிரமாண்டமாக தயாராகியிருக்கிறது சர்கார். இதன் கதை என்னுடைய செங்கோல் ஸ்கிரிப்டை தழுவி எழுதப்பட்டுள்ளது என்று உதவி இயக்குநர் வருண் ராஜேந்திரன் எழுத்தாளர்கள் சங்கத்தில் புகார் செய்தார். சங்கத்தின் தலைவர் பாக்யராஜ் சங்க நிர்வாகிகள் முன்னிலையில் வருண் ராஜேந்திரனின் கதையையும், முருகதாஸின் சர்கார் கதையையும் படித்து, இரண்டு கதைக்கும் ஒற்றுமை இருப்பதை உறுதி செய்தார். செங்கோல் கதையை தழுவியே சர்கார் கதை எழுதப்பட்டிருக்கிறது, அதனால், சர்கார் டைட்டிலில் வருண் ராஜேந்திரனுக்கு கிரெடிட் தரவேண்டும் என்று பாக்யராஜ் முருகதாஸை கேட்டுக் கொண்டார். முருகதாஸ் மறுத்ததுடன், கோர்ட்டில் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து பாக்யராஜும், முருகதாஸும் மீடியாக்களில் அவரவர் தரப்புகளை நியாயப்படுத்தி பேட்டிகள் அளித்தனர். செங்கோல் கதைதான் சர்கார் கதை என்று எழுத்தாளர்கள் சங்கம் அதிகாரப்பூர்வமாகக் கொடுத்த கடிதத்தை வைத்து சர்கார் படத்துக்கு தடைகேட்டு வருண் ராஜேந்திரன் நீதிமன்றம் சென்றார்.

வருண் ராஜேந்திரனின் மனுவுக்கு பதிலளிக்கும்படி முருகதாஸ், எழுத்தாளர்கள் சங்கம், சன் பிக்சர்ஸ் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். அக்டோபர் 30 இன்று மறுவிசாரணை நடந்தது. நீதிமன்றத்தில், செங்கோல் கதைதான் சர்கார் என்று முருகதாஸ் ஒப்புக் கொண்டார். டைட்டிலில் கதைக்காக வருண் ராஜேந்திரனுக்கு நன்றி தெரிவிக்கப்படும், அவருக்கு குறிப்பிட்ட தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றத்துக்கு வெளியே வழக்கு சமரசமானதால் சர்காருக்கு தடை கோரிய வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

இதனால் சர்கார் நவம்பர் 6 வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here