சூறையாடப்பட்ட சுங்கச்சாவடியில் கைவரிசை : ரூ.18 லட்சம் மாயம்

0
143

செங்கல்பட்டு அருகே பரனூரில் சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப்பட்ட போது, அங்கிருந்த ரூ.18 லட்சம் பணத்தை காணவில்லை என சுங்கச்சாவடி பொறுப்பாளர் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை, கோயம்பேட்டிலிருந்து கிளம்பிய அரசு விரைவு பஸ், திருநெல்வேலிக்கு சென்று கொண்டிருந்தது. சென்னை – திருச்சி நெடுஞ்சாலையில், பரனுார் சுங்கச்சாவடிக்கு, கடந்த ஜன., 25 அதிகாலை, 1:00 மணிக்கு வந்தது.

இந்நிலையில் ஓட்டுநருக்கும் சுங்கச்சாவடி ஊழியருக்கும் இடையே கட்டணம் செலுத்துவது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது சுங்கச்சாவடி ஊழியர்கள் அரசுப்பேருந்து ஓட்டுநரையும் நடத்துநரையும் சரமாரியாக தாக்கினர்.

அரசு ஊழியர்கள் தாக்கப்பட்டதை பார்த்த, அவ்வழியே சென்ற அரசு பஸ் ஓட்டுனர்கள், நடத்துனர்கள் மற்றும் பயணியர், சுங்கச்சாவடியின், 12 பூத்துகளையும் அடித்து நொறுக்கினர்; ஊழியர்களையும் தாக்கினர்.

அலுவலகத்திற்குள் புகுந்து அங்கிருந்த கணினிகள் மற்றும் கேமரா போன்றவற்றை சேதப்படுத்தினர். இந்த சம்பவத்தை பயன்படுத்தி, சிலர், பணத்தை திருடியதாக கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பாக அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் மற்றும் சுங்கச்சாவடி ஊழியர்கள் இருவர் கைதாகியுள்ளனர். இந்த மோதல் காரணமாக கடந்த 2 நாட்களாக சுங்கச்சாவடியில் பணம் வசூலிக்கப்படவில்லை. மூன்றாவது நாளாக இன்றும்(ஜன.,28)வாகனங்கள், பணம் செலுத்தாமல் இலவசமாக செல்கின்றன.

இந்நிலையில், மோதல் நடந்த அன்று சுங்கச்சாவடியில் இருந்த ரூ.18 லட்சம் பணத்தை காணவில்லை என சுங்கச்சாவடி பொறுப்பாளர் செங்கல்பட்டு தாலுகா போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here