சூர்யா, விக்ரம், பிரபுதேவா மோதும் பொங்கல் படங்கள் ஒரு பார்வை

0
463

பொங்கல் பண்டிணையை முன்னிட்டு நாளை மூன்று படங்கள் வெளியாகின்றன. ஆறு படங்கள், எட்டுப் படங்கள் என்று மார்கழியில் விளம்பரம் செய்து, தை பொங்கலை எட்டியது மூன்றே மூன்றுதான். தானா சேர்ந்த கூட்டம், ஸ்கெட்ச், குலேபகாவலி.

தானா சேர்ந்த கூட்டம்

நாளை வெளியாகும் மூன்று படங்களில் அதிக எதிர்பார்ப்பு சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்துக்கே. சூர்யா, – விக்னேஷ் சிவன் – அனிருத் என்ற முக்கூட்டணி காரணமாக படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். அதற்கேற்ப அனிருத் இசையில் பாடல்கள் ஏற்கனவே வெற்றி பெற்றுள்ளன. குறிப்பாக சொடக்குப் பாடல் பட்டி தொட்டியெங்கும் ஒலிக்கிறது.

சிபிஐ என்று சொல்லி வணிகர்களிடம் பணம் பறித்த கொள்ளை கும்பலை பற்றி இந்தியில் வெளியான ஸ்பெஷல் 26 படத்தின் கருவை மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. கரு மட்டும்தான், காட்சிகள் வேறு. கும்பல் என்பதால் கீர்த்தி சுரேஷ், கார்த்திக், செந்தில், தம்பி ராமையா, சுரேஷ் மேனன், ரம்யா கிருஷ்ணன், ஆனந்த்ராஜ், பிரம்மானந்தம் என்று பெரும் நட்சத்திரப் பட்டாளம் நடித்துள்ளது.

ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் படத்தை தயாரித்துள்ளது. நிச்சய வெற்றி கோஷத்துடன் தானா சேர்ந்த கூட்டம் நாளை களம் காண்கிறது.

ஸ்கெட்ச்

விக்ரம், தமன்னா முதல்முறையாக இணைந்திருக்கும் படம் ஸ்கெட்ச். வாலு படத்தை இயக்கிய விஜய் சந்தர் படத்தை இயக்கியுள்ளார். தமன் இசை.

விக்ரம் மாற்றுத் திறனாளி போன்று வித்தியாசமான வேடத்தில் நடித்தால்தான் அவர் படத்தைப் பார்க்கிறார்கள். கடைசியாக அவரது நடிப்பில் வெற்றி பெற்ற இருமுகன் படத்தில்கூட வில்லன் கதாபாத்திரத்தில் திருநங்கையாக நடித்திருந்தார். ஆனால், ஸ்கெட்ச் படத்தில் அப்படியெந்த சவால் வேடமும் இல்லை.

கார் திருட்டை மையப்படுத்திய ஸ்கெட்ச் ஒரு அடிதடி ஆக்ஷன் படம். மூவிங் பிரேம் படத்தை தயாரிக்க, தாணு தனது வி கிரியேஷன்ஸ் மூலம் படத்தை வெளியிடுகிறார். தாணுவின் நேரடி போட்டியாளர், எதிரி ஞானவேல்ராஜா. அதன் காரணமாகவே தள்ளிப் போவதாக இருந்த ஸ்கெட்ச் வெளியீட்டை இழுத்துப் பிடித்து பொங்கலுக்கே வெளியிடுகிறார் என்ற பேச்சு உள்ளது. தானா சேர்ந்த கூட்டமா இல்லை ஸ்கெட்சா? இந்த நீயா நானா போட்டியில் ஸ்கெட்ச் வெற்றி பெறுமா என்பது நாளை தெரியும்.

இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்காக விக்ரம், தமன்னா கேரளா சென்றனர். ஆனால், தமிழ்நாட்டில் ஒரு புரமோ நிகழ்ச்சிகூட நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குலேபகாவலி

பிரபுதேவா நடித்திருக்கும் குலேபகாவலி கடைசி நேர நெருக்கடியை சமாளித்து பொங்கல் ரேஸில் ஒட்டிக் கொண்டது. ஹன்சிகா, ரேவதி, ஆனந்த்ராஜ், சத்யன், யோகி பாபு நடித்துள்ளனர். கல்யாண் இயக்கம், விவேக் மெர்வின் இசை.

பிரபுதேவா பல வருடங்களாக படம் நடிக்காமலிருந்ததும், அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான தேவி சுமாராகப் போனதும், டிசம்பர் 29 வெளியான களவாடிய பொழுதுகள் தோல்வியடைந்ததும் குலேபகாவலிக்கு சின்ன பின்னடைவு.

படம் ஆக்ஷன், நகைச்சுவை என ஜனரஞ்சகமாக தயாராகியிருப்பதால் ரசிகர்களின் வரவேற்பைப் பெற சாத்தியம் உள்ளது. பாடல்களும், பிரபுதேவாவின் நடனமும் படத்தின் சிறப்பம்சங்களாக இருக்கும். நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுத்திருப்பதால் மற்ற இரு படங்களிலிருந்து குலேபகாவலி வித்தியாசப்படுகிறது.

பொங்கலுக்கு வெளியாகும் மூன்று படங்களும் எதிர்பார்ப்புக்குரியவையே. ஆச்சரியமான இன்னொரு விஷயம் இந்த மூன்றும் திருட்டை மையப்படுத்தியவை. மூன்றும் வெற்றி பெற்றால் 2018 புத்தாண்டு தமிழ் திரையுலகுக்கு சிறப்பான தொடக்கமாக அமையும்.

இதையும் படியுங்கள்: ஜல்லிக்கட்டிற்கும் ஆதார் கட்டாயம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here