சூர்யாவை ஆதரித்து கமல் அறிக்கை

அனைத்து படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வு நடத்தினால் மாணவர்கள் கஷ்டப்பட மாட்டார்களா என்று மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையை நடிகர் சூர்யா விமர்சித்ததைத் தொடர்ந்து அவரை மத்திய, மாநில ஆளும்கட்சியை சேர்ந்த அரசியல்வாதிகள் அவதூறாக பேசி வந்தனர். இதற்கு நடிகரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல் கண்டித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஏழை மற்றும் நடுத்தர வகுப்பு மாணவ மாணவியரின் கல்வி மேம்பாட்டிற்காக தம்பி சூர்யா மற்றும் அவரது குடும்பத்தார் பல வருடங்களாக உதவி செய்து வருகிறார்கள். எனவே கல்வி குறித்து பேசுவதற்கான உரிமை சூர்யாவிற்கு உண்டு. புதிய கல்விக் கொள்கை குறித்து தம்பி சூர்யாவின் கருத்துக்கள் பலவற்றில் எனக்கும் உடன்பாடு உண்டு. மக்களின் கருத்தை அறிவதற்காக என்று சொல்லப்பட்டு வெளியிடப்படுகின்ற வரை அறிக்கை மீது கருத்து சொன்னதற்காக சூர்யா மீது அவதூறு பேசி வரும் ஆளும் அரசுகளின் ஆதிக்க போக்கினை மக்கள் நீதி மய்யம் வன்மையாக கண்டிக்கிறது. தம்பி சூர்யாவிற்கு எனது ஆதரவு கண்டிப்பாக உண்டு”  என கூறியுள்ளார்.

விஷ்ணு விஷாலின் எஃப்ஐஆர்(FIR)

விஷ்ணு விஷால் நடிக்கும் புதிய படத்துக்கு எஃப்ஐஆர் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதன் விரிவாக்கமாக பெயருக்கு கீழே பைசல் இப்ராஹிம் ராயிஸ் என டேக் லைன் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் விஷ்ணு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடிக்கிறார். சுஜாதா என்டர்டெயின்மெண்ட் படத்தை தயாரிக்க, மனு ஆனந்த் படத்தை இயக்குகிறார். தற்போது படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.

பிகில் பாடல் திருட்டுத்தனமாக வெளியீடு

அட்லி நடிப்பில் பிகில் படத்தில் விஜய் இரு வேடங்களில் நடித்து வருகிறார். ரஹ்மான் இசை. சிங்கப்பெண்ணே எனத் தொடங்கும் பாடலை ரஹ்மான் பிகிலுக்காக கம்போஸ் செய்திருந்தது திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியானது படக்குழுவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்தப் படத்தில் ரஹ்மான் இசையில் வெறித்தனம் என்ற பாடலை விஜய் பாடியுள்ளார். பிகிலில் நயன்தாரா நாயகியாக நடித்து வருகிறார்.

ராட்சசியை எதிர்த்து ஆசிரியர்கள் புகார்

ஜோதிகா நடித்திருக்கும் ராட்சசி படத்தில் அரசுப் பள்ளிகளை கடுமையாக விமர்சித்திருந்தனர். அரசுப் பள்ளிகள் என்றால் மோசமாக இருக்கும், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் எந்த வேலையும் செய்ய மாட்டார்கள் என்ற பொதுப்புத்தியை ஒட்டி இந்தப் படத்தின் காட்சிகள், வசனங்கள் வைக்கப்பட்டிருந்தன. இது தங்களை அவமதிப்பதாக தமிழ்நாடு ஆசிரியர்கள் சங்கம் புகார் அளித்துள்ளது. இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், சர்ச்சைக்குரிய காட்சிகள், வசனங்களை நீக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

விமலின் கன்னி ராசிக்கு விடுதலை

முத்துக்குமரன் இயக்கத்தில் விமல், வரலட்சுமி நடித்திருக்கும் படம் கன்னி ராசி. பெயரில் ராசியிருந்தாலும் படத்துக்கு ராசியில்லை. பல வருடங்களாக அண்டர்புரொடக்ஷனில் இருக்கிறது. இந்நிலையில் படத்தை வெளியிட கடும் முயற்சி எடுக்கப்பட்டதன் பலனாக அடுத்த மாதம் படத்தை வெளியிட வாய்ப்பு அமைந்திருக்கிறது. முதல்கட்டமாக நேற்று படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டனர். விமல் – வரலட்சுமி முதல்முறையாக சேர்ந்து நடித்திருக்கும் படம் இது. விமல் தற்போது சண்டக்காரி படத்தில் ஸ்ரேயாவுடன் நடித்து வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here