சூரிய பகவானுக்கு முக்கியமான விரதம்

0
826

சூரிய பகவானுக்கு உரிய விரதங்களில் முக்கியமானது ரத சப்தமி விரதம். இந்த விரதத்தை எப்படி அனுஷ்டிக்க வேண்டும் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.

சூரிய ஜெயந்தி என்பது இந்த விழாவின் மற்றுமொரு பெயர். சப்தம் என்றால் ஏழு. இதனால் தான் அமாவாசை, பவுர்ணமி கழிந்த 7-ம் நாளை ‘சப்தமி திதி’ என்று அழைக்கிறோம். 

உத்திராயண புண்ணிய காலத்தின் தொடக்க மாதமான, தை மாத வளர்பிறையை தொடர்ந்து வரும் சப்தமி திதியே ‘ரத சப்தமி’ ஆகும். ரத சப்தமியன்று சூரியனுக்கு விசேஷமான ஒளி உண்டாயிற்று என புராணங்கள் கூறுகின்றன. அந்த தினத்தில், சூரியன் பயணிக்கும் தேரை இழுத்துச் செல்லும் 7 குதிரைகளும் ஒரு சேர வடக்கு நோக்கி திரும்பி பயணத்தை தொடங்குகின்றன.

விரதம் இருக்கும் முறை

இந்த சிறப்பு மிக்க தினத்தில், சூரிய உதயத்தில் எழுந்து ஆறு, ஏரி அல்லது குளத்தில் நீராட வேண்டும். இல்லாவிட்டால் வீட்டில் சூரிய ஒளி படும் இடத்தில் நின்று நீராடலாம். நீராடும் போது, ஏழு எருக்கம் இலை, மஞ்சள் பொடி கலந்த அட்சதையை தலைக்கு மேலே வைத்துக் கொண்டு நீராட வேண்டும்.

ஏழு எருக்கம் இலைகளை கால்களில் இரண்டு, கைகளில் இரண்டு, தோள் பட்டைகளில் இரண்டு, தலையில் ஒன்றை வைத்து நீர் ஊற்ற வேண்டும். தலையில் வைக்கும் இலையில் பெண்கள் மஞ்சள் பொடி மற்றும் அட்சதையும், ஆண்கள் அட்சதை மட்டும் வைத்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால் செல்வத்தையும், ஆரோக்கியத்தையும் தரும். தந்தை இல்லாத ஆண்கள், கணவரை இழந்த பெண்கள், ஏழு எருக்கம் இலைகளுடன் பச்சரிசி, கருப்பு எள் ஆகியவற்றை தலையில் வைத்து நீராட வேண்டும்.

கணவனை இழந்தவர்கள் இந்த விரதத்தை கடைப்பிடிப்பதால், அடுத்து வரும் பிறவிகளில் இந்த நிலை வராது. ரத சப்தமி விரதத்தை சூரிய உதயத்தில் செய்ய வேண்டும். ரத சப்தமியன்று சுத்தமான இடத்தில் செம்மண்ணால் பூசி, அந்த இடத்தில் சூரிய ரதம் வரைய வேண்டும். அதில் சூரிய, சந்திரரை வரைந்து பவனி வருவதாக நினைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு சந்தனம், மஞ்சள், குங்குமம் இட்டு, சிவப்பு நிறம் உள்பட பல்வேறு வாசனை மலர்களால் அர்ச்சித்து சூரிய துதிகளை சொல்லி வழிபட வேண்டும்.

சர்க்கரைப்பொங்கல், உளுந்து வடை நிவேதனம் செய்து பூஜை செய்ய வேண்டும். கோதுமையால் செய்த சப்பாத்தி, சாதம் போன்ற வற்றை பசுமாட்டிற்கு கொடுப்பது நல்ல பலனை தரும். வாசலில் சூரிய ஒளி படும் இடத்தில் ரதம் வரைந்து அரிசி, பருப்பு, வெல்லம் படைக்கலாம். சூரிய உதயத்தின் போது குளித்து விரதம் அனுஷ்டித்தால் செல்வந்தர் ஆகலாம் என்று புராணங்கள் கூறுகின்றன.

ரதசப்தமியன்று தொடங்கும் தொழில், பணிகள் மிகவும் சிறப்பாக நடைபெறும். இந்த நாளில் செய்யப்படும் தர்மம், தானத்திற்கு பல மடங்கு புண்ணியம் கிடைக்கும். சூரியன், நாம் வழங்கும் தானத்தை நம் முன்னோர்களிடம் வழங்குகிறார். எவ்வளவு கொடிய பாவங்களும் அதனால் அகன்று விடும்.

Courtesy : Maalaimalar

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here