முஸ்லிம்கள் நோன்புக் காலத்தில் அதிகாலை முதல் சூரியன் அஸ்தமிக்கும் வரை உணவு உட்கொள்ளாமல் இருப்பார்கள். அதனால் அவர்களுக்கு உடலில் சக்தி சிறிது குறைந்திருக்கும். அதனைச் சரிசெய்ய கண்டிப்பாகப் பேரீச்சம்பழம் எடுத்துக் கொள்வார்கள். அந்த அளவுக்குப் பேரீச்சை சத்து நிறைந்தது.

முன்பெல்லாம் பழைய பேப்பர் கடையில் பேப்பர் போடும்போது பேரீச்சம்பழம் கொடுப்பார்கள். நம்முடைய வீட்டில் இரு சக்கர வாகனம் ஓடாமல் தகராறு செய்தால் அதை இரும்புக் கடையில் போடு, பேரீச்சம்பழமாவது கிடைக்கும் என்று கிண்டலடிப்பார்கள்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் விரும்பிச் சாப்பிடும் வகையில் பேரீச்சம்பழத்தை வைத்து கேக்கும், அதன் மேலே ஊற்றிச் சாப்பிட ஸாஸும், எப்படிச் செய்வது எனக் குறிப்பு எழுதியுள்ளேன். கண்டிப்பாகச் செய்து பாருங்கள். மிகவும் ருசியாக இருக்கும். உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.

கேக்குக்குத் தேவையான பொருட்கள்

பொடியாக நறுக்கிய பேரீச்சம்பழம் – 100 கிராம்
பிரவுன் சுகர் – 75 கிராம்
மைதா – 75 கிராம்
வெண்ணெய் – 30 கிராம்
முட்டை – 1
வெனிலா எசன்ஸ் – அரை தேக்கரண்டி
சமையல் சோடா – அரை தேக்கரண்டி
சூடான தண்ணீர் – 125 மில்லி

ஸாஸ் செய்யத் தேவையான பொருட்கள்

பிரவுன் சுகர் – 100 கிராம்
வெண்ணெய் – 95 கிராம்
திக்கான கிரீம் – 125 கிராம்

கேக் செய்முறை

ஒரு பாத்திரத்தில் பேரீச்சம்பழம், சமையல் சோடா போட்டு அதில் சூடான வெந்நீர் ஊற்றவும். கேக்கிற்கான கலவை தயார் பண்ணும்வரை ஓரமாக வைக்கவும் .

வெண்ணெய், பிரவுன் சுகர் இரண்டையும் மிருதுவாகும்வரை அடிக்கவும்.

பின்பு முட்டையைச் சேர்த்து அடிக்கவும். (நிறைய அளவு செய்யும்போது முட்டையை ஒன்று ஒன்றாக அடிக்க வேண்டும்)

அதன் பின் மாவைப் போட்டு மெதுவாகக் கலக்க வேண்டும். வேகமாக அடிக்கக் கூடாது .

பின்பு ஊற வைத்த பேரீச்சம் கலவை, வெனிலா எசன்ஸ் இரண்டையும் மாவுக் கலவையுடன் சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும்.

பின் வெண்ணெய் தடவிய கேக் டின்னில் கலவையை ஊற்றவும்.

கேக் செய்வதற்கு முன் ஓவனை 180 டிகிரி சூடு செய்ய வேண்டும். அப்படி ஏற்கனவே சூடு செய்த ஓவனில் கேக் கலவையை 45 நிமிடத்திற்கு வேகவிட வேண்டும். 45 நிமிடம் கழித்து வெந்துவிட்டதா என மரக்குச்சியால் குத்திப் பார்க்கவும். ஸாஸ் செய்வதுவரை கேக் சூடு ஆறட்டும்.

ஸாஸ் செய்யும் முறை

ஒரு கனமான பாத்திரத்தில் வெண்ணெயை உருக விடவும்; உருகியதும் பிரவுன் சுகர், கிரீம் போட்டு 10 நிமிடங்களுக்குச் சிறு தீயில் நன்றாகக் கலக்கவும். பின்பு அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.

ஆறின கேக்கின் மேல் மரக்குச்சியால் சிறு சிறு துவாரங்கள் போடவும். அதன் மேலே செய்து வைத்த ஸாஸில் பாதி ஊற்றவும். மீதி ஸாஸ் தேவைப்படும்போது சூடு பண்ணி உபயோகப்படுத்தலாம்.

இந்தக் கேக்கை வெனிலா ஐஸ் கிரீமுடன் சுவைத்தால், மிகவும் அருமையாக இருக்கும்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்