சுவாதி கொலைக்குப் பின்னும் இரண்டு நாட்கள் மேன்ஷனில் தங்கியிருந்த ராம்குமார்

0
2891

இன்ஃபோஸிஸ் மென்பொறியாளர் சுவாதியை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொலைசெய்துவிட்டு மேன்ஷனில் இரண்டு நாட்கள் தங்கியிருந்த பின்னரே சொந்த ஊருக்குத் தப்பிச் சென்றிருக்கிறார் ராம்குமார். ஜூன் மாதம் 24ஆம் தேதி காலை நுங்கம்பாக்கம் இரயில் நிலையத்தில் சுவாதி பட்டாக்கத்தியால் குத்திக் கொலைசெய்யப்பட்டார். சுவாதியை கொலைசெய்த நபர் இரயில் நிலையத்தின் அருகே நடந்துசென்ற காட்சிகள் பக்கத்துத் தெருக்களிலுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. அதனை ஆதாரமாகக் கொண்டு காவல் துறையினர் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில் ராம்குமாரைக் கைது செய்தார்கள்.

சென்னை சூளைமேடு செளராஷ்டிரா நகர் எட்டாவது வீதியிலுள்ள ஏ.எஸ் மேன்ஷனில் கடந்த மூன்று மாதங்களாக ராம்குமார் தங்கியிருந்துள்ளார். பொறியியல் பட்டதாரியான ராம்குமார் அந்த மேன்ஷனில் தங்கி வேலை தேடி வந்துள்ளார். மேலும் சூளைமேட்டைச் சேர்ந்த ஐ.டி ஊழியரான சுவாதியிடம் பழக முயற்சித்துள்ளார். ஜூன் மாதம் 24ஆம் தேதி காலை 6.30 மணியளவில் வழக்கம்போல் பணிக்குச் செல்வதற்காக சுவாதி நுங்கம்பாக்கம் இரயில் நிலையத்திற்குச் சென்றுள்ளார். அங்கு வந்த ராம்குமார் சுவாதியிடம் பேச முற்பட்டிருக்கிறார். சிறிது நேரத்தில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. திடீரென்று கத்தியை எடுத்த ராம்குமார் சுவாதியைக் குத்தியுள்ளார். இரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த சுவாதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கொலை செய்தபின்னும் ஏதும் நடக்காததுபோல தான் தங்கியிருந்த ஏ.எஸ் மேன்ஷனிலேயே இரண்டு நாட்கள் தங்கியிருந்துள்ளார் ராம்குமார். மேன்ஷனில் உள்ளவர்களுக்கும்கூட ராம்குமார்தான் கொலையாளி என்பது தெரியாமலேயே இருந்துள்ளது. இரண்டு நாட்கள் கழித்து ராம்குமார் தனது சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டைக்குத் தப்பிச் சென்றுள்ளார். மேன்ஷனில் இருந்த யாரேனும் ராம்குமாருக்கு உதவியிருக்கக் கூடும் என்பதால் போலீசார் சனிக்கிழமை அதிகாலை ஏ.எஸ் மேன்ஷனுக்குச் சென்று யாரும் வெளியே போகாதவாறு சீல் வைத்தனர். பின்னர் காலை ஒன்பது மணியளவில் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் மேன்ஷனிலிருப்பவர்கள் வெளியே செல்ல அனுமதி வழங்கினார். ஆனால் வெள்ளிக்கிழமை இரவு முதல் ராம்குமாருடன் அறையில் தங்கிவந்த இளைஞர் விடுதிக்கு வரவில்லை.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்