ஸ்வீடனைச் சேர்ந்த 16 வயது சிறுமி கிரேட்டா தன்பர்க் அமைதிக்கான நோபல் பரிசுக்கான போட்டியில் இடம்பெற்றுள்ளார். சுற்றுச்சூழல் மீது மிகுந்த அக்கறை கொண்ட இவர் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம், உலக வெப்பமயமாதலை தடுக்க வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகம் முன்பு தனி ஒரு ஆளாக போராட்டம் நடத்தினார்.

இதன் மூலம் பிரபலமான அவர் இளம் சுற்றுச்சூழல் ஆர்வலராக அறியப்பட்டார். அதனை தொடர்ந்து கிரேட்டா தன்பர்க், தனது பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்துவிட்டு உலக வெப்பமயமாதல் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு தொடர்பான போராட்டங்களை முன்னெடுக்க தொடங்கினார். இவரது இந்தப் போராட்டத்திற்கு இந்தியா உள்ளிட்ட பல நாட்டு மாணவர்களும் ஆதரவு தெரிவித்து வெள்ளி தோறும் பள்ளிகளுக்குச் செல்லாமல் பருவநிலைக்கு எதிராக போராடி வருகின்றனர்.

மேலும் இவர் கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற ஐ.நா.வின் உலக வெப்பமயமாதல் மாநாட்டிலும், கடந்த ஜனவரி மாதம் நடந்த உலக பொருளாதார மன்றத்திலும் பங்கேற்று உரையாற்றி உள்ளார். 

இயற்கையை நேசிக்கும் சிறுமியின் பொதுநல சிந்தனையை பாராட்டி இதற்கு முன் amnesty international அமைப்பு விருது கொடுத்து கவுரவித்துள்ளது. நோபல் பரிசுக்கு நிகரான right livelihood விருதும் வழங்கப்பட்டது. இவரது இந்த முயற்சியை கெளரவிக்கும் விதமாக டைம் இதழ் வெளியிட்ட 2018ஆம் ஆண்டின் செல்வாக்கு மிக்க இளைஞர் பட்டியலில் கிரேட்டா தன்பர்க் பெயரும் இடம் பெற்றிருந்தது.

2019ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு 219 தனி நபர்களின் பெயர்களும், 85 அமைப்புகளின் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், நார்வே நாட்டைச் சேர்ந்த 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள், கிரேட்டாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கவேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளனர். இந்த விருதானது வரும் வெள்ளிக்கிழமை நார்வேயில் அறிவிக்கப்படும்  என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், சிறுமி கிரெட்டாவுக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பு குறைவாகவே இருப்பதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தன்பர்க் சிறுமி என்பதால், நோபல் பரிசு அவருக்கு மட்டுமே வழங்கப்படாது என பீஸ் இன்ஸ்ட்ட்டியூட் (Peace Research Institute) இயக்குனர் ஹென்ரிக் உர்தால் என்பவர் தெரிவித்துள்ளார்.

மேலும் சிறுமிக்கு, பாகிஸ்தான் சிறுமி மலாலாவுக்கு வழங்கப்பட்டது போல் நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட வாய்ப்புள்ளதாக அவர் கூறியுள்ளார்.  இதே கருத்தையே பிற நிபுணர்களும் முன்வைத்துள்ளனர்.