தமிழ் மரபின் விடுபட்ட பக்கங்களைத் தேடிச் சேர்த்து வருகிறார் க.சுபாஷினி.

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானம். 43வது புத்தகச் சந்தை. டாக்டர் உ.வே.சாமிநாதய்யர் நூல் நிலைய அரங்குக்கு எதிரில் ஆழி பதிப்பகம். பதிப்பக உரிமையாளர் செந்தில்நாதன் நாற்காலியில் அமர்ந்துள்ளார். அருகில் மற்றொரு நாற்காலியில் அமர்ந்துள்ளார் சுபாஷினி. இவர் எழுதிய“உலக அருங்காட்சியகங்களினூடே ஒரு பயணம்” நூலை வாங்கிய வாசகர் ஒருவர் இவரிடம் நூலில் கையொப்பம் பெற்று சுயபடம் எடுத்துக் கொள்கிறார். யார் இந்த சுபாஷினி? தமிழ் மரபின் விடுகதை இவர். தமிழ் மரபு என்பது என்ன? காதலும் வீரமும் செழித்தோங்கியதாக சொல்லப்பட்ட சங்க காலத்து மரபு மட்டுமா? அரசனும் பாணனும் சமமாக பாவிக்கப்பட்ட சங்க கால மரபை தமிழ்ச் சமூகம் எப்போதிலிருந்து கைவிட்டது? சிலப்பதிகாரக் காலம் என்று கருதப்படுகிற ஐந்தாம், ஆறாம் நூற்றாண்டில் கருத்துரிமை என்பது படித்தோருக்கு மட்டும்தான் என்று குறுக்கப்பட்டதன் பின்னால் யாருடைய சூழ்ச்சி இருந்தது? பக்தி இலக்கியக் காலத்தில் மீட்கப்பட்ட ஜனநாயகத் தன்மையை அதற்குப் பின்னர் சோழர்கள் சூறையாடினார்களா? கருத்துரிமைப் பறிப்பை பிரிட்டிஷாரும் தொடர்ந்தார்கள் அல்லவா? சுதந்திரத்துக்குப் பிறகான தமிழ்நாட்டில் சுதந்திர மரபுக்குத் தடையாக இருப்பவை எவை? நிகழ்காலத்தின் பிரச்சினைகளைப் புரிந்துகொள்வதிலிருக்கும் அறிவு இடைவெளியை மரபின் இடைவெளிகளை அறிவதிலிருந்து சரி செய்யலாமா? கடந்த காலத்தை அறிவதிலிருந்துதான் சமகாலத்தை மானுடச் சமூகங்கள் செப்பனிட்டிருக்கின்றன. தமிழ் மரபின் விடுபட்ட பக்கங்களைத் தேடிச் சேர்க்கும் வேலையை கடந்த பதினெட்டு வருடங்களாகச் செய்து வருகிறார் முனைவர் சுபாஷினி.

மலேசியாவின் பினாங்குவில் பிறந்த சுபாஷினி ஜெர்மனியில் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் உயர் பொறுப்பில் இருக்கிறார்.”பொருளாதார உயர்வுக்காக புலம்பெயர்கிற அனேகம்பேருக்கு இருக்கிற உளவியல்ரீதியான தாக்கம்அல்லது ஏக்கம் என்னை மரபைத் தேடும் பயணத்துக்கு இட்டுச் சென்றது” என்கிறார் இவர். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து 90,000க்கும் அதிகமான ஓலைச்சுவடிகளைத் தேடிக் கண்டுபிடித்து மின்னாக்கம் செய்தது இந்தப் பயணத்தில் சுபாஷினியின் முதல் வெற்றி என்று சொல்லலாம். 320க்கும் மேற்பட்டவர்களுக்குக் கல்வெட்டு வாசிக்கும் பயிற்சியை வழங்கியது இரண்டாவது மைல் கல். ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான இளம் தலைமுறையினரைச் சென்றடைந்து அவர்களுக்கு மரபைத் தேடும் பயணங்களில் ஈடுபாட்டை உண்டாக்கியது மூன்றாவது வெற்றி. ஐரோப்பிய யூனியனிலேயே முதன்முதலாக ஜெர்மனியில் அய்யன் திருவள்ளுவருக்கு இரண்டு சிலைகளை நிறுவியது சமீபத்திய மைல்கல். ஜெர்மானிய மொழியில் 1800களில் வெளியிடப்பட்ட திருக்குறள் மொழிபெயர்ப்புகள் இரண்டைத் தன்னுடைய தமிழ் மரபு அறக்கட்டளையின் மூலமாக மறுபதிப்பு செய்துள்ளார். சமகாலத்தில் இப்படித் தமிழின் எல்லைகளை விரிவுபடுத்திக் கொண்டே செல்கிறார் சுபாஷினி.

”இருப்பதைப் பாதுகாக்கணும்;இனிமேல் சிதைக்கக்கூடாது” என்று தனது மரபைப் பாதுகாக்கும் லட்சியத்தை நாலே வார்த்தைகளில் நறுக்கென்று சொல்கிறார். தமிழ் மரபின் ஆழங்களை அறிவதில் ஒரு சமூகமாக நம்முடைய முயற்சிகள் மிகவும் குறைவானவை என்கிறார். ஆராய்ச்சிகளையும் அகழாய்வுகளையும் முறைப்படுத்தி, மக்கள்மயப்படுத்துவது மட்டுமே மரபினை மீட்கும் என்கிறார். இவரது அம்மா ஜனகா. மலேசிய நண்பன் பத்திரிகையில் துணை ஆசிரியராக இருந்திருக்கிறார். தீவிர சமூக சேவையாளர். இந்து சங்கத்தில் இணைந்து செயல்பட்டுள்ளார். அப்பா கனகசுந்தரம். தொலைத்தொடர்புத் துறையில் தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றினார். ஆஸ்திரேலியாவில் தகவல் தொழில்நுட்பத்தில் பட்டம் பெற்றார் சுபாஷினி.ஜெர்மனியில் பட்ட மேற்படிப்பு. பிரிட்டனில் முனைவர் பட்டம். ”அம்மாவிடமிருந்து சமூக ஈடுபாடு வந்திருக்கிறது” என்று பலரும் சொல்கிறார்கள். “அப்பாவிடமிருந்து தொழில்நுட்ப நேர்த்தி வந்திருக்கிறது” என்று சொல்கிறார்கள். எப்படியானாலும் தொழில்நுட்ப அறிவாலும் மரபின் மீதான காதலாலும் தமிழ் மரபு பற்றிய தேடலை ஜனநாயகப்படுத்தியிருக்கிறார் சுபாஷினி.

ரேஷ்மா: ஹூக்ளி நதியை ஆளும் தமிழச்சி

எம்மி விருதுக்குப் போன சாதனைப் பெண் சாதனா

“நாதமும் தாளமும் நீயானாய்”

ஒரு துண்டு மீன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here