சுதந்திரத்துக்கு பிறகு முதன்முதலாக 6 வருடங்களில் அதிகரித்த வேலைவாய்ப்பின்மை

0
385

படித்த இளைஞர்களின் வேலையின்மை விகிதம் இந்தியாவில் 35.8 சதவீதமாக உயர்ந்துள்ளதாக ஆய்வறிக்கை ஒன்றின் வாயிலாகத் தெரியவந்துள்ளது.

இந்தியாவின் வேலையின்மை விகிதம் அக்டோபர் மாதத்தில் 8.5% அதிகரித்துள்ளது. இது 2016ம் ஆண்டு ஆகஸ்டுடன் ஒப்பிடுகையில் அதிகமாகும் என்று இந்தியப் பொருளாதாரத்திற்கான கண்காணிப்பு மையம் (சிஎம்ஐஇ) தெரிவித்துள்ள தகவல் மூலம் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் போதிய அளவிலான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதில்லை எனவும், படித்த இளைஞர்கள் பலர் வேலையில்லாமல் கிடைத்த வேலைக்குச் செல்வதாகவும் அரசின் மீது குற்றச்சாட்டு உள்ளது. குறிப்பாக 2014ஆம் ஆண்டில் நரேந்திர மோடி பிரதமராகப் பொறுப்பேற்றதிலிருந்து  வேலை வாய்ப்புகள்  மிக மந்தமாக இருந்து வருவதாகக் கூறப்படுகிறது.

அசிம் பிரேம்ஜி பல்கலைக் கழகத்தின் நிலையான வேலைவாய்ப்புக்கான மையம் வெளியிட்டுள்ள ’இந்தியாவின் வேலைவாய்ப்பு பிரச்சினை’என்ற தலைப்பிலான அறிக்கையில் வேலை உருவாக்கம், வேலையின்மை  குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி, 2017-18ஆம் ஆண்டில் மொத்தம் 46.5 கோடி வேலைவாய்ப்புகள் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளன. 2011-12ஆம் ஆண்டில் 47.4 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருந்தன. அதாவது ஐந்து ஆண்டுகளில் மட்டும் 90 லட்சம் வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளன. வரலாற்றிலேயே வேலை வாய்ப்புகள் குறைவது இதுவே முதல் முறையாகும்.

வேளாண்மை, மற்றும் அதைச் சார்ந்த துறைகளில் 2011-12 முதல் 2017-18 வரையிலான ஆண்டுகளில் 2.7 கோடி வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளன. இந்தியாவின் ஒட்டுமொத்த வேலை சந்தையில் 49 சதவீதமாக இருந்த வேளாண்மைத் துறையின் பங்களிப்பு 44 சதவீதமாகக் குறைந்துள்ளது.

உற்பத்தித் துறையில் 2011-12 முதல் 2017-18 வரையிலான ஆண்டுகளில் 35 லட்சம் வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளன. இதன்மூலம் ஒட்டுமொத்த வேலைவாய்ப்புகளில் உற்பத்தித் துறையின் பங்களிப்பு 12.6 சதவீதத்திலிருந்து 12.1 சதவீதமாகக் குறைந்துள்ளது.

2011-12ஆம் ஆண்டில் 3 சதவீதமாக இருந்த வேலையின்மை விகிதம் 2017-18ஆம் ஆண்டில் 8.8 சதவீதமாக உயர்ந்துள்ளது. படிப்பறிவில்லாத இளைஞர்களின் வேலையின்மை விகிதம் 1.7 சதவீதத்திலிருந்து 7.1 சதவீதமாக உயர்ந்துள்ளது.

10ஆம் வகுப்பு மட்டுமே முடித்தவர்களின் வேலையின்மை விகிதம் 5.9 சதவீதத்திலிருந்து 14.4 சதவீதமாகவும், 12ஆம் வகுப்பு முடித்தவர்களின் வேலையின்மை விகிதம் 10.8 சதவீதத்திலிருந்து 23.8 சதவீதமாகவும், பட்டப் படிப்பை முடித்தவர்களின் வேலையின்மை விகிதம் 19.2 சதவீதத்திலிருந்து 35.8 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.

தொழில்நுட்ப கல்வியில் பட்டம் பெற்ற இளைஞர்களின் வேலையின்மை விகிதம் மிக அதிகமாக 37.3 சதவீதமாக இருக்கிறது.

 https://www.business-standard.com/


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here