சுதந்திர இந்தியாவிலேயே மிகப் பெரிய ஊழல் பணமதிப்பிழப்புதான்; நாட்டை பாதுகாக்க மோடியை வீட்டுக்கு அனுப்ப மக்கள் முடிவு செய்துவிட்டனர் -விளாசும் மன்மோகன்

0
322

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில், இளைஞர்கள், விவசாயிகள், வர்த்தகர்கள் என அனைத்து தரப்பினருக்கும் மிகவும் அதிர்ச்சிகரமான, பேரழிவு,  வேதனை ஏற்பட்டுள்ளது என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். 

மக்களிடையே பிரிவினை, வெறுப்புணர்வை தூண்டுவதே பாஜக செய்கிறது சமுதாய பிளவுகளில்தான் அக்கட்சி செழித்து வளர்கிறது.
 மோடியின் 5 ஆண்டு கால ஆட்சிக் காலம், நிர்வாகத்திலும் பொறுப்புகளை நிறைவேற்றுவதிலும் ஒரு அரசு தோல்வியடைந்த கதையாகும். கடந்த 2014-இல் மோடி ஆட்சிக்கு வந்தபோது, மக்களுக்கு நல்ல நாள்கள் வரும் என்று கூறினார்.
 ஆனால், இளைஞர்கள், விவசாயிகள், வர்த்தகர்கள் மற்றும் ஜனநாயக அமைப்புகளுக்கு அழிவுக் காலமே வந்தது. எனவே, நாட்டை பாதுகாப்பதற்காக, மோடி அரசை வீட்டுக்கு அனுப்ப மக்கள் முடிவு செய்துவிட்டனர்.

நாட்டில் மோடிக்கு ஆதரவான அலை வீசுவதாக கூறப்படும் கருத்தை ஏற்க முடியாது. ஏனெனில், அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய வளர்ச்சியில் நம்பிக்கை இல்லாத பாஜக அரசை, ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்பதே மக்களின் மனநிலையாக உள்ளது.


மோடி தலைமையிலான ஆட்சியில், கற்பனைக்கு எட்டாத அளவுக்கு ஊழல்கள் அதிகரித்துவிட்டன. சுதந்திர இந்தியாவிலேயே மிகப் பெரிய ஊழல் பணமதிப்பிழப்பு நடவடிக்கைதான். இந்த நடவடிக்கையால் பாதிக்கப்படாத தரப்பினர் யாரும் இல்லை.
 இதேபோல், பொருளாதார மந்த நிலையை நோக்கி நாடு நகர்வதாக நான் உணர்கிறேன். நாட்டின் பொருளாதாரத்தை மோசமான சூழலுக்கு இட்டுச் சென்றிருக்கிறது மோடி அரசு.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பிரதமர் மோடி உடனடியாக பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான மத்திய அமைச்சரவை குழு கூட்டத்தை கூட்டி ஆலோசித்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யாமல், உத்தரகண்டில் உள்ள ஜிம் கார்பெட் தேசிய பூங்காவில் அவர் படப்பிடிப்பில் பங்கேற்றிருந்தது கவலையளிக்கும் விஷயமாக இருந்தது.


 புல்வாமா சம்பவம், உளவுத் துறையின் தோல்வியாகும். பயங்கரவாதத்தை எதிர்கொள்ள அவரது அரசு எந்த அளவுக்கு தயாராக இருந்தது என்பதை, இச்சம்பவமே வெளிக்காட்டுகிறது.பாகிஸ்தான் தொடர்பான மோடி அரசின் கொள்கை முன்னெச்சரிக்கை அற்றதாகும்.


 அழையா விருந்தாளியாக பாகிஸ்தானுக்கு சென்றது முதல் பதான்கோட் தாக்குதல் தொடர்பாக விசாரிக்க ஐஎஸ்ஐ-க்கு அழைப்பு விடுத்தது வரையிலான பிரதமரின் வியூகங்கள் தோல்விகண்டுவிட்டன. தேச பாதுகாப்பு விவகாரத்தில், மோடி அரசு தோற்றுவிட்டது என்பதற்கு இவை போதாதா?

 தேசியவாதம், தேசப்பாதுகாப்பு குறித்து பிரதமர் மோடி அதிகம் பேசினாலும், அவரது ஆட்சியில்தான் பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களும், பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறல்களும் கணிசமாக அதிகரித்துள்ளன.


 கடந்த 5 ஆண்டுகளில் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்கள் 176 சதவீதமும், பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறல்கள் 1,000 சதவீதமும் அதிகரித்துள்ளன.


130 கோடி மக்கள் வாழும் இந்தியாவில் பிரதிநிதித்துவம் என்பது மிக முக்கியமானதாகும். எனவே, ஒரு நபரை மட்டுமே முன்னிறுத்தும் சிந்தாந்தம் இந்தியாவுக்கு பொருந்தாது என்று பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.  

 


 
 


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here