சுதந்திரமான செய்திகளுக்கு ஒரு வருஷம்

1
259

(ஆகஸ்ட் 15, 2016இல் வெளியான தலையங்கத்தின் மறுபிரசுரம்.)

சுதந்திரமான செய்திகளுக்கு இந்தச் சுதந்திர தினத்தில் ஒரு வருஷம் நிறைவடைந்திருக்கிறது.
எல்லாப்புகழும் இறைவனுக்கே.
டிஜிட்டல் யுகத்துக்கேற்ப தமிழ் ஊடகவியலை மறுவரையறை செய்யும் லட்சியத்துடன் ஒரு வருடத்துக்கு முன்பு களமிறங்கினோம்; தமிழ்ச் சமூகத்தில் செய்தியறைகளுக்கும் மக்களுக்குமிடையே ஏற்பட்டிருக்கும் இடைவெளியைத் தொழில்நுட்பப் பயன்பாட்டால் கடந்து செல்வதற்கான பெரும் பயணம் இது; இப்போதுதான் தொடங்கியிருக்கிறது; சென்னைப் பெருவெள்ளத்தின்போது உண்மைகளைப் பேசிய ஓர் ஊடகமாக உயர்ந்து நின்றோம்; சென்னை சைதாப்பேட்டை மறைமலையடிகள் பாலத்துக்கு அருகேயுள்ள குடிசைகள் ஆக்கிரமிப்பு என்றால், மியாட் மருத்துவமனையும் நந்தம்பாக்கம் ராணுவக் குடியிருப்பில் அடையாற்றின் குறுக்கே போடப்பட்ட இரும்புப் பாலமும் டி.எல்.எஃப் சிறப்புப் பொருளாதார மண்டலம் செய்த அடையாறு ஆற்றங்கரை ஆக்கிரமிப்பும் என்னவென்று சக ஊடகங்களைச் சிந்திக்கத் தூண்டினோம்; தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு மக்கள் மனசறிந்து சொன்னோம்.

சுதந்திரமான செய்திகளே ஜனநாயகத்தின் அடித்தளத்தைப் பலப்படுத்தும்; விரிவுபடுத்தும். இதற்காக எவ்வளவோ முயற்சிகள் நடந்து வருகின்றன. அதில் ஒரு முயற்சியாக ”இப்போது” பயணப்படுகிறது. ஏழை, எளிய மக்களின் அபிலாஷைகளையும் சமூகத்தின் ஒதுக்கப்பட்ட, பேசப்படாத பக்கங்களையும் பேசுவதன் மூலம் புதிய உரையாடல்களைக் கிளர்ந்தெழச் செய்கிறோம். வெகுமக்களுக்கான ஊடகம் என்கிற போர்வையில் எண்ணற்ற சமூகக்குழுக்களை இழித்தும் பழித்தும் நடந்து வந்த ஊடகவியலை சற்றே அசைத்துப் பார்த்துள்ளோம்; ஆம். இது போதாது என்ற உங்கள் கூக்குரல் கேட்கிறது. செல்ல வேண்டிய தொலைவு அதிகம்தான்; ஆனால் அதற்கு நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் முக்கியமானது; வாழ்த்தப்பட வேண்டியது; ஊக்குவிக்கப்பட வேண்டியது; அதற்கான சக்தியை தர வல்ல இறைவன் போதுமானவன்; நட்புக்கரம் கொடுத்து, உதவிக்கரம் நீட்டி உடன் பயணிக்கும் அன்புச் சொந்தங்களே, நீங்கள் புதிய வரலாற்றை உருவாக்குகிறீர்கள். இந்த வெற்றிப் பயணம் நெடியது; மக்களின் ஆதரவோடு #அன்பு, #அகிம்சை, #தொண்டு ஆகியவற்றை மறவாது தொடரும்.

1 கருத்து

ஒரு பதிலை விடவும்