சீமைக்கருவேல மரங்களை நம்பி வாழும் மக்கள் என்ன செய்வார்கள்?

சீமைக்கருவேல மரங்களை அழிக்கும் மக்கள் இயக்கம் அவற்றை நம்பி வாழும் மக்களின் மறுவாழ்வைப் பற்றி யோசிக்கவில்லை.

0
1633

கருவேல மரங்களை எல்லாம் வேரோடு அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பட்டிருக்கிறது; அதற்கான போராட்டங்களும் தமிழகத்தின் பல பகுதிகளிலும், குறிப்பாக தென் மாவட்டங்களில் நடைபெறுகின்றன. ஒவ்வொரு மாவட்ட நிர்வாகமும் பிப்ரவரி 10ஆம் தேதிக்குள் கருவேல மரங்களை வெட்ட வேண்டும் என்றும், இல்லாவிட்டால் அபராதத்தொகையுடன் அகற்ற நேரிடும் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதனைத் துரிதப்படுத்தும்விதமாக ராமநாதபுரம் மாவட்டம், மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் பல இடங்களில் கருவேல மரங்கள் அகற்றப்பட்டும் வருகின்றன. இன்னும் சில இடங்களில், நவீன இயந்திரங்கள் மூலமாக அகற்றப்பட்டும் வருகின்றன.

இதையும் பாருங்கள்: நெடுவாசல்

இதையும் பாருங்கள்: செல்ஃபோனால் நாம் தொலைத்தவை எவை?

அரசும் அவர்களுக்குச் சொந்தமான இடங்களில் (ஓடைகள், கண்மாய்கள்) உள்ள கருவேல மரங்களை அகற்றிவருகின்றன. கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று நாம் அனைவரும் முழுவீச்சில் கூறும்முன், ராமநாதபுரம், முதுகுளத்தூர், கமுதி, நீராவி, சாயல்குடி, சிவகங்கை, மதுரை, சாத்தூர், திருச்சுழி ஆகிய இடங்களிலும் விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய தென் மாவட்டங்களின் பல கிராமங்களிலுள்ள மக்களுக்கு இந்தக் கருவேல மரங்கள்தான் சோறு போடும் தொழிலாக உள்ளது என்பதையும் மறக்கக்கூடாது. இந்த மரங்களை நம்பி தென் மாவட்டங்களில் 5000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்தக் கருவேல மரங்கள் முழுவதும் அழிக்கப்படும்பொழுது, இந்த 5000 குடும்பங்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி விடுவதற்கான வாய்ப்புகள் அதிகமுண்டு.

மறைந்த முதல்வர் காமராஜர் காலத்தில் – 1960களின் தொடக்கத்தில் – தமிழகம் முழுவதும் சீமைக் கருவேல மரத்தின் விதைகள் தூவப்பட்டன. அதற்கு முன்னர் 1877ஆம் ஆண்டில் வனங்களின் முதன்மைக் காப்பாளராக இருந்த ஆர்.எச்.பெந்தோம் என்ற ஆங்கிலேய அதிகாரி ஜமைக்காவிலிருந்து இந்தச் சீமைக் கருவேல மரத்தின் விதைகளைப் பெற்று பரப்பியதாக ஐ.நாவின் உணவு மற்றும் வேளாண்மைப் பிரிவு ஆவணங்கள் கூறுகின்றன. வறட்சியில் தவித்த தமிழகத்தின் ராமநாதபுரம் பகுதியில் வேலைவாய்ப்பை உருவாக்கவும், மின்சார உற்பத்திக்குத் தேவையான கரியைத் தயாரிக்கவும் சீமைக் கருவேல விதையைக் கொண்டு வந்து கொட்டினார்கள். எந்த வறட்சியையும் தோற்கடித்து வளரும் சீமைக் கருவேலம் நிலத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டது.

இதையும் படியுங்கள்: இந்த முறை சஸ்பென்ஸ் வைக்கவில்லை ரஜினி

இதையும் படியுங்கள்: வரலட்சுமி சரத் குமார் சொன்னது என்ன?: வீரமான பெண் பதிவின் முழு விவரம்

பல்வேறு விதங்களில் இந்த மரம் தனித்தன்மை மிக்கது. இது வாழும் நிலப்பகுதியை ‘தனி உயிரினத்தின் சாம்ராஜ்யம்’என்று உயிரியலாளர்கள் சொல்வார்கள். பக்கவாட்டில் வளரும் தன்மைமிக்க இந்த மரம், தனக்குக் கீழும், அருகிலும் எந்தத் தாவரத்தையும் வளரவிடாது. எளிதில் இதை அழிக்கவும் முடியாது. கரிக்குத் தவிர வேறெதற்காகவும் இந்த மரத்தைப் பயன்படுத்த முடியாது. நிலத்தின் உயிர்ச்சூழலை அழிப்பதோடு, நீர், காற்று ஆகியவற்றையும் இந்த மரம் சிதைத்துவிடும். விதைகளைச் சாப்பிடும் கால்நடைகளையும் மலடாக்கும் என்று பெரம்பலூர் ரோவர் வேளாண்மைக் கல்லூரியின் வனவியல் துறை உதவிப் பேராசிரியர் ஆனந்தன். ஒரு பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அதே நேரத்தில் நம் மண்ணுக்குத் தொடர்புள்ள மரம் நாட்டுக்கருவேல மரம். இந்த மரத்திற்கும், சீமைக் கருவேல மரத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. நாட்டுக் கருவேல மரம் என்பது ஒரே மரமாக வளரக்கூடியது. ஆனால், சீமைக் கருவேலை பக்கவாட்டில் வளரும் தன்மை கொண்டது. நாட்டுக் கருவேல மரத்தின் மூலம் மாட்டு வண்டிகள், ஏர்க் கலப்பை, அரிவாள், கொம்பு அது மட்டுமில்லாம அன்றைய காலத்து சில வீடுகளில் வாசல், சன்னல், சட்டங்கள் செய்ய இதைப் பயன்படுத்தியுள்ளனர். மேலும், நாட்டுக் கருவேல மரத்தின் குச்சிகள் பல் துலக்கவும் பயன்பட்டுள்ளன. இவ்வாறு பலவகை பயன்பாடுகளை அளித்துவந்த நம் நாட்டுக் கருவேல மரங்களையும் இந்தச் சீமைக் கருவேல மரங்கள் அழித்து விட்டன. நாட்டுக் கருவேல மரங்களை ஒருமுறை வெட்டிவிட்டால் பட்டுப் போய்விடும். ஆனால், சீமைக் கருவேல மரங்களை வேரோடு அகற்றினாலும் மீண்டும் வளரும் தன்மை கொண்டவை. மேலும், நாட்டுக் கருவேல மரங்களின் காய்கள் கால்நடைக்கு உணவாகவும் பயன்படுகின்றன. ஆனால், சீமைக் கருவேல மரங்கள் கரி உற்பத்தியைத் தவிர வேறு எதற்கும் பயன்படாது.

இதையும் பாருங்கள்: ஜெயலலிதாவுக்கு என்ன உடல்நலக் குறைவு? முழு விவரம்

இதையும் படியுங்கள்: உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்துங்கள்

ஒவ்வொரு பொருளையும், உயிரினத்தையும், தாவரங்கள் அல்லது மரங்களையும் அழிக்கும் முன்னர் அது சார்ந்து இயங்கும் மக்களின் வாழ்வாதாரத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். அதுசார்ந்த மக்களின் வாழ்க்கையை பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே அமைந்துள்ள உடையனாம்பட்டி கிராமத்திற்குச் சென்றேன். செல்லும் வழி யெங்கும் கருவேல மரங்கள் அடர்ந்த வனம் போல காட்சி அளித்தன. சில இடங்களில், கரி மூட்டங்கள் போடுவதற்காக, கருவேல மரங்கள் வெட்டப்படும், குச்சிகளாக அடுக்கப்பட்டும், சில இடங்களில் கருவேல மரத்தின் தூர்கள் குவிக்கப்பட்டும் இருந்தன. அங்கு உச்சிவெயிலில் தலையில் துண்டுகள் கட்டிக்கொண்டு சுமார் 45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் சிலர் மரங்களை வெட்டிக்கொண்டிருந்தனர். அவர்களிடம் இதுபற்றிக் கேட்டபோது, என்னிடம் பேசிய கடம்பன்குளத்தை சேர்ந்த ஜானகி என்ற பெண்மணி, ” ஏம்ப்பா அரசாங்கம் இதெல்லாம் வெட்ட சொல்றாங்களாமே.. இதெல்லாம் முழுசா வெட்டிட்டா நாங்க எல்லாம் என்ன பண்றது.. வயசானவங்கனு சொல்லிட்டு எங்களை எல்லாம் மில்லு வேலைக்கும் சேத்துக்க மாட்டிங்கிறாங்க.. ஏதோ இந்த முள்ளை வெட்டித்தான் பொழப்பு நடத்துறோம்.. ” என்றார்.

“நாங்க எல்லாம் கடம்பன்குளத்தைச் சேர்ந்தவங்க… தினமும் காலைல 6 மணிக்கு கிளம்பி, 7 மணி பஸ்ஸைப் பிடிச்சு இந்த ஊருக்கு வர 7.30 ஆயிடும்.. 8 மணிக்கு வெட்ட ஆரம்பிச்சோம்னா.. மதியம் 2 மணி வரைக்கும் வெட்டுவோம்.. நாங்களும் முதல விவசாயம் பாத்தவங்கதான்.. அதுல நொடிஞ்சு போனதுக்கு அப்றம்தா.. இந்த வேலைக்கு வர ஆரம்பிச்சோம். இதுக்குத் தினமும் 200 தினக்கூலி தராங்க.. இன்னைக்குதா வேலை, லீவு எல்லாம் கெடயாது.. நாங்க ஒரு நாளைக்கு நல்லா வெட்டுனா 15 மரம்வரை வெட்டுவோம்.. அரசாங்கம் தண்ணிக்காகத்தான் இது எல்லாம் அழிக்க சொல்றாங்கனு சொல்ராங்க..நல்லதுதான்.. அப்டி ஏதும் நடந்துச்சுனா எங்களுக்கு அரசாங்கம்தான் ஏதாது மாத்து வேலைக்கு ஏற்பாடு பண்ணனும்..” என்றார்.

இதையும் படியுங்கள்: 40 ஆண்டுகளாக வெளிவராத ரகசியம்: சவூதி அரேபியாவுக்கும் அமெரிக்காவுக்குமிடையே எப்படி இந்த நட்பு மலர்ந்தது?

இதையும் படியுங்கள்: முடியாதவர்களுக்கு மாதம் 12,000 ரூபாயை வங்கியில் போட்டு விடுங்கள்

மேற்கொண்டு பேசிய பாண்டி என்பவர், ” எனக்கு 58 வயசு ஆகுது.. நான் ஆரம்பத்துல கரிமூட்டம் தொழில்தான் பண்ணிட்டு இருந்தேன்.. அப்புறம் 25 வருசமா மீன்பிடித் தொழில் செஞ்சேன்.. ஒரு கட்டத்துல தொழில் நொடிஞ்சு போனதால திரும்பவும் இதே வேலைக்கே வந்துட்டேன்.. இப்ப ஓரளவு நல்லா இருக்கேன். நீங்க இன்னைக்கு முள்ளு செடியா பாக்குற இதே இடங்கள் ஒரு காலத்துல வாழையும், நெல்லும், தர்பூசணியும் வெளஞ்ச பூமிதான்… நானே பாத்துருக்கேன்.. இங்க பக்கத்துல உள்ள குண்டாறு ஆத்த நம்பித்தான் விவசாயம்
பாத்தோம்.. ஆத்துல தண்ணி எப்ப வத்த ஆரம்பிச்சுச்சோ அப்பவே விவசாயமும் முடங்கிடுச்சு.. அப்புறம் இந்த வேலையப் பாக்க ஆரம்பிச்சுட்டோம்.. இப்பவரைக்கும் இந்தக் கரிமூட்டத்தை நம்பித்தான் இந்த கிராமம் மட்டுமில்ல.. சுத்தி உள்ள பல கிராமங்கள் இருக்கு..இப்படி திடீர்னு இது எல்லாத்தையும் முழுசா அழிக்கணும்னா நாங்க என்ன பண்றது..” என்று கேள்வி எழுப்பினர்.

இந்தத் தொழிலிலே 40 வருடங்களுக்கு மேலாக செயல்பட்டு வரும் குடும்பத்தைச் சேர்ந்தவரும், மொத்த கரி வியாபாரியுமான கருப்பசாமி இந்தத் தொழில் பற்றியும் அதில் உள்ள சிக்கல் பற்றியும் தெளிவாக விளக்குகிறார்.
“எல்லாரும் நெனக்குற மாதிரி முள்ளை வெட்டி, அப்படியே எரிச்சுக் கரியாக்குறது இல்ல இந்த வேலை.. இதுல இப்படி இப்படிச் செய்யணும்னு நெறய முறைங்க இருக்கு.. கருவேல மரங்களை 3 வருஷத்துக்கு ஒரு தடவதா வெட்டணும்.. அதிகபட்சம் எத்தனை வருஷம் வேணும்னாலும் வளந்ததுக்கு அப்புறம்கூட நாம வெட்டலாம்.. முதல முள்ளுங்கள அருவணும்..அப்படி அருவுன முள்ளுங்கள விறகா வெட்டி, ஒரு முழம் நீள குச்சியா நறுக்கணும்.. அப்டி வெட்டுற குச்சிங்கள ஒரு கட்டா கட்டணும்.. அப்படி கட்டு கட்டுறவங்களுக்கு தனி சம்பளம் தரணும்.. 120 கட்டு கட்டுனா 150 ரூபாய் சம்பளம் அவங்களுக்கு.. ஆரம்ப காலத்துல இந்தக் கட்டுகளை எல்லாம் பனை ஓலைகள்லதான் கட்டுனோம்.. பிறகு பிளாஸ்டிக் கயிறுகளக் கட்ட ஆரம்பிச்சுட்டோம்.. பிறகு இந்த டிராக்டர் மூலம் தண்ணி இருக்குற ஏரியாக்குக் கொண்டு போவோம்.. அவங்க அவங்க வசதிக்கு ஏத்தமாதிரி நாம மாத்திக்கலாம்.. அப்புறம் அந்த இடத்தைக் கட்டாந்தரையா நல்ல சுத்தம் பண்ணணும்.. பிறகு அந்த விறகுக்கட்டுகளை எல்லாம் கூம்பு வடிவத்துல அடுக்கணும்..
அதுக்கு மேல வைக்கோல், மஞ்சு( தேங்காய் நார்) இல்ல கரும்புத்தோகை, இல்ல சில செடிங்க இதெல்லாம் வச்சு முழுசா மூடணும்.. இப்ப அதுக்கு மேல தண்ணிய தெளிக்கணும்..அதுவும் வாசல் தெளிக்குற மாதிரி.. அதுக்கு மேல ஆத்து மணலை, அல்லது வண்டல் மணலைப் புட்டு மாதிரி தண்ணில நனைச்சு வீசணும்.. இப்ப அந்த மண்ணுங்க நல்லா காத்து போகாத மாதிரி விறகைச் சுத்தி அடைச்சபிறகு, கூம்பு வடிவ உச்சில, ஒரு ஓட்டை போட்ருக்கணும்..அது வழியா ஒரு சிமெண்ட் தட்டு நெருப்பை உள்ள போட்டுடணும்..பிறகு அந்த ஓட்டைய அடைச்சுடணும்.. இந்த விறகுகளை எரிக்க ஆரம்பிச்சதுல இருந்து கரிய எடுக்குற வரைக்கும் தினமும் ரெண்டு பேரு இது பக்கத்துலயே இருக்கணும்..

இதையும் பாருங்கள்: நந்தினி

இதையும் பாருங்கள்: என்.டி.ஆர்

இதுக்கு அப்றம்தா ஆபத்தே இருக்கு.. உள்ளுக்குள்ள உள்ள விறகுங்க வேற வேற அளவுல இருந்துச்சுன்னா.. ஒரு பக்கம் வேகமா வெந்துடும்.. இன்னொரு பக்கம் பொறுமையா வேகும்.. இதுனால மேல உள்ள மணலுங்கள்ல ஓட்டை விழுகும்.. அந்த இடத்தை அடைக்குறதுக்குனே தனியா விறகும், மணலும் தயாரா வச்சுருப்போம்.. அப்படி விழுகுற ஓட்டைய அடைக்கிறதுல ரொம்பக் கவனமா இருக்கணும்.. எதுக்குன்னா நாம ஓட்டைய அடைக்கப் போற எடத்துல ஒவ்வொரு அடியும் பாத்து பாத்துதான் வைக்கணும்.. தப்பித் தவறி உள்ள விழுந்திட்டா நிச்சயம் பிணமாத்தான் வெளில எடுக்க முடியும்.. உள்ள பூரா நெருப்பு.. யாரும் இறங்கியும் காப்பாத்த முடியாது.. அதுமாதிரி நெறய பேரு இறந்துருக்காங்க…விறகுகளை ஏழு நாள் வரைக்கும் எரிய விடுவோம்..அதுவே தூருங்கலா இருந்தா 14 நாள் வரைக்கும்கூட எரிய விடுவோம்.. முழுசா வெந்துட்டா மண்ணுல புகை வரது நிண்டுடும்.. அப்புறம் மூணு நாளைக்குத் தண்ணி தெளிப்பாங்க.. அதுக்கப்புறம் மண்ணை உரிப்போம்.. அப்படி உரிக்குறப்ப கரும்புத்தோகை இது எல்லாமே வந்துடும்.. பொதுவா மூட்டம் போட்டாலே அதுல ஒரு லோடு கரி வர மாதிரிதா போடுவோம்..பிறகு வித்துடுவோம்..”

இந்தக் கரிகளின் பயன்பாடு குறித்து கேட்டதற்கு, இவைகள் அனைத்தும் டீக் கடை, பாய்லர் முதல் இரும்பு ராடு தயாரிப்பு வரை பயன்படுகின்றது. பெரும்பாலும், பெரிய உணவகங்களிலும், கடைகளிலும் உணவு தயாரிக்கப் பயன்படுகிறது. இதைப் பொடியாக்கினால், ஊதுபத்தி, மற்றும் பட்டாசு ஆலைகளில் வெடி மருந்து தயாரிக்கவும் பயன்படுகிறது. மேலும், கார்பெட் கல் தயாரிக்கவும் இதன் தேவை அதிக அளவில் உள்ளது.

இதையும் பாருங்கள்: எண்ணெயவிட தண்ணிய சிக்கனமா செலவழிக்கிறேன்

இதையும் பாருங்கள்: தமிழக மீனவர்களின் உயிர் காப்போம்

இந்தக் கருவேல மரங்களினால் குடிநீர்த் தட்டுப்பாடு வருவது பற்றி கேட்டதற்கு, ”இதோட வேர்கள் எல்லாம் 40, 50 அடி ஆழம் வரைக்கும் போறதால தண்ணீர் பிரச்னை வருது.. உண்மைதான்.. அதுக்கு இதுங்க மட்டுமே காரணமா.. ஆத்துல மணல் எடுக்குறதும் முக்கிய காரணம்.. நாங்களும் இந்த மரங்களைத் தூரோட பிடிங்கிட்டு நிலத்துல பயிர் போட்டோம்.. மூணு வருஷம் குதிரைவாலிய போட்டோம்.. ஆனா குதிரை வாலி வளரல.. கருவேலதா வளந்துச்சு.. இந்தத் தொழில்ல முதலாளி, தொழிலாளி எல்லாம் கெடயாது.. எல்லாருமே முதலாளிதா.. நாலு காட்டை வெட்டுனா.. நாளைக்கு வெட்டுற ஆளே சம்பளத்தத்துக்கு ஆளுங்கள வச்சு வெட்டலாம்.. குடிதண்ணீர் வேணும்னா இதை அழிக்கணும்னுறத ஏத்துக்குறோம்.. இப்ப என்கிட்டயே ஒரு 60 குடும்பங்கள் இதை நம்பி இருக்காங்க.. இதுமாதிரி இந்த மாவட்டம் முழுக்க எத்தனை குடும்பங்கள் இருக்கும்?.. தமிழ்நாடு முழுக்க எத்தனை குடும்பங்கள் இருக்கும்..? அது மட்டுமில்லாம கிராமங்கள் முழுக்க விறகுக்கு இதைத்தான் முழுசா பயன்படுத்துறாங்க.. இதுங்கள முழுசா அழிச்சுட்டா நாம முழுக்க முழுக்க சிலிண்டர் மட்டுமே நம்பி இருக்க வேண்டிய நிலைம வரும்.. அப்படி வந்துட்டா சிலிண்டர் விலை என்னவாகும்..” என்று அவர்கள் தரப்பு கேள்விகளையும் எழுப்பினர்.

எப்பொழுதும் ஒரு விஷயத்தை முற்றிலும் அழிக்க நினைக்கும் முன்னர் அதுசார்ந்து வாழும் மக்களின் வாழ்வாதாரத்தையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அப்படி இந்தக் கருவேல மரங்களையே சார்ந்து வாழும் இந்த மக்களின் வாழ்வாதாரத்திற்கான மாற்று வழிகளையும் உருவாக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்: சசி

இதையும் படியுங்கள்: மனைவி மிரட்டுறாங்களா? இதைச் செய்யுங்கள்.

இதையும் படியுங்கள்: ஆன்மாவோடு பேசலாம்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்