சீமராஜா படத்துக்கு ஓபனிங் அள்ளுகிறது. அதேநேரம் விமர்சனங்களில் படத்தை எண்ணைய் இல்லாமல் தாளிக்கிறார்கள். நாலு நாள் ஓபனிங் இருக்கும், அஞ்சாவது நாள் திங்கள்கிழமை படம் தாங்குமா? என்கிறார்கள் விமர்சகர்கள்.

உண்மையில் சீமராஜா வெற்றியா தோல்வியா? தயாரிப்பாளரின் மனநிலை என்ன? படத்தை தயாரித்த டி.ராஜாவே அறிக்கை வெளியிட்டுள்ளார்.

“இந்த வெற்றிக்கு காரணமான சிவகார்த்திகேயனின் ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். ஒரு ஜனரஞ்சகமான படத்துக்கு தேவையான அத்தனை அம்சங்களையும் நிறைத்து ஒரு படத்தை தயாரிப்பது என்பது, அனைத்து மக்களையும் சென்று அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் தான். குடும்பமாக படம் பார்க்கும் ரசிகர்களையும், இளைஞர்களையும் கவர வேண்டும் என்பதே பிரதான நோக்கம். சிவகார்த்திகேயன் நிறைய வித்தியாசமான வேடங்களில் நடிக்க வேண்டும் என்ற நிலையை தாண்டி, அவரது ரசிகர்களுக்கு பிடித்தமான ஒரு கலகலப்பான படம் தான் சீமராஜா.

முதல் நாளே திரை அரங்குகளுக்கு குடும்பம் குடும்பமாக ரசிகர்கள் வருகிறார்கள் என்று திரையரங்கு உரிமையாளர்கள் கூறும் போது உள்ளம் பூரிப்பு அடைகிறது. சிவகார்த்திகேயனின் முந்தைய படங்களின் வசூல் சாதனையை இந்த படம் முறியடிக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. முதல் நாள் வசூலே 13.5 கோடி என்பது பெருமைக்குரியது, சாதனைக்குரியது. 550 காட்சிகள் திரையிடபட்டு உள்ளன. இந்த எண்ணிக்கை இந்த வார இறுதிக்குள் மேலும் கூடும். ஊடக நன்பர்களுக்கும், திரை அரங்கு உரிமையாளர்களுக்கும் பொது மக்களுக்கும் இந்த மாபெரும் வெற்றிக்கு என் மனமார்ந்த நன்றிகள்.”

பணம் போட்டவரே நான் ஸேஃப் என்கிறார். அப்பறம் நமக்கு ஏன் வெற்றியா தோல்வியா பட்டிமன்றம்?

ஆனா சாரே… வேலைக்காரன் படத்துக்கு திருப்பித்தர வேண்டிய பணத்தால் சீமராஜா அதிகாலைக் காட்சிகள் ரத்தானது போல், சீமராஜாலால் சிவகார்த்திகேயனின் அடுத்தப் படத்துக்கு சிக்கல் வராமல் இருந்தால்… அப்போ தைரியமாகச் சொல்லலாம்…. சீமராஜா வெற்றி.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்