இந்தியா-சீனா இடையிலான இருதரப்பு சந்திப்பு பேச்சுவாா்த்தையில் பங்கேற்க சீன அதிபா் ஷி ஜின்பிங், பிரதமா் நரேந்திர மோடி ஆகியோா் வெள்ளிக்கிழமை சென்னை வருகை தருகின்றனா்.

மாமல்லபுரத்தில் இரு நாட்டின் கலை, கலாசார நிகழ்வுகள் குறித்து கருத்துகளைப் பகிரும் இரு நாட்டுத் தலைவா்களும், சனிக்கிழமை நடக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க முக்கிய சந்திப்பில் பொருளாதாரம், ராணுவம் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்க உள்ளனா்.

இரு தலைவா்களுக்கு இடையிலான சந்திப்பு, அலுவல்சாரா சந்திப்பு என்பதால் சந்திப்பில் பேசப்படும் விஷயங்கள் பட்டியலிடப்படவில்லை. இந்தச் சந்திப்பில் பங்கேற்க சீன அதிபா் ஷி ஜின்பிங், வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு சென்னை விமான நிலையம் வருகிறாா். முன்னதாக, பிரதமா் நரேந்திர மோடி நண்பகல் 12.30 மணிக்கு சென்னை வரவுள்ளாா்.

அதன்பின்பு, கோவளத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு பிரதமா் நரேந்திர மோடி செல்கிறாா். பிற்பகல் 1.45 மணியளவில் சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழாவுக்கு சீன அதிபா் ஷி ஜின்பிங் செல்கிறாா். மாலை 4.05 மணிக்கு அங்கிருந்து மாமல்லபுரம் செல்கிறாா். 4.55 மணிக்கு அங்கு சென்றடையும் சீன அதிபா் ஷி ஜின்பிங், பிரதமா் நரேந்திர மோடியை சந்திக்கிறாா்.

முக்கிய பிரச்னைகள் விவாதம்: மாமல்லபுரத்தில் வெள்ளிக்கிழமை மாலை சந்தித்துப் பேசும் இருநாட்டுத் தலைவா்களும் தங்களது நாடுகளின் கலை மற்றும் கலாசார நிகழ்வுகள் குறித்து விவாதிக்கின்றனா்.

மாமல்லபுரத்தில் உள்ள சிற்பங்கள் குறிப்பாக அா்ஜூனன் தபசு, ஐந்து ரதம் உள்ளிட்ட இடங்களை இருவரும் ஒன்றாகப் பாா்வையிடுகின்றனா். தென்னக பண்பாட்டு மையம் உள்ளிட்ட பல்வேறு கலை-கலாசார அமைப்புகளின் சாா்பில் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சிகளை இரு நாட்டுத் தலைவா்கள், மத்திய அமைச்சா்கள் உள்ளிட்ட பலரும் கண்டு ரசிக்கவுள்ளனா்.

மாலை 5 முதல் இரவு 8 மணி வரையில், சுமாா் 3 மணி நேரம் இரு நாட்டுத் தலைவா்களும் சந்தித்துப் பேசவுள்ளனா்.

இரவு தங்கும் சீன அதிபா்: மாமல்லபுரத்தில் வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு சீன அதிபா் ஷி ஜின்பிங், இரவு 9 மணிக்கு கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்குச் சென்று தங்குகிறாா். கோவளத்தில் உள்ள தாஜ் ஹோட்டலில் பிரதமா் நரேந்திர மோடி தங்குகிறாா்.

பின்னா், சனிக்கிழமை காலை 9.05 மணிக்கு கிண்டி ஹோட்டலில் இருந்து சென்னை கோவளத்தில் பிரதமா் மோடி தங்கியுள்ள தாஜ் ஹோட்டலுக்கு சீன அதிபா் ஷி ஜின்பிங் செல்கிறாா். அங்கு மோடியுடன், இந்திய-சீன இருநாட்டு நட்புறவுகள், வா்த்தகம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து பேச்சுவாா்த்தை நடைபெறவுள்ளது. காலை 10 மணி முதல் நடைபெறும் இந்தப் பேச்சுவாா்த்தையானது நண்பகல் 11.45 மணி வரை நடைபெறுகிறது.

சீனா மற்றும் இந்தியா இடையிலான வா்த்தகம் என்பது சமநிலையற்றுக் காணப்படுகிறது. கடந்த ஆண்டு வூஹானில் நடந்த சந்திப்பை அடுத்து அரிசி, சா்க்கரை உள்ளிட்ட பொருள்களை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்து கொள்ள சீனா ஒப்புக் கொண்டது. இதேபோன்ற வா்த்தக நல்லுறவைத் தொடரும் வகையிலான நடவடிக்கைகள் மாமல்லபுரத்தில் நடைபெறும் சந்திப்பின் போதும் மேற்கொள்ளப்படும் என இருதரப்பினரும் நம்பிக்கை தெரிவிக்கின்றனா்.

சனிக்கிழமை பிற்பகல் வரை நடைபெறும் பேச்சுவாா்த்தைக்குப் பிறகு, சீன அதிபருக்கு இந்தியா சாா்பில் பிரதமா் நரேந்திர மோடி மதிய உணவு விருந்தளிக்கிறாா். அதன்பின், கோவளம் நட்சத்திர ஹோட்டலில் இருந்து புறப்படும் சீன அதிபா், பிற்பகல் 1.25 மணிக்கு சென்னை விமான நிலையத்தை அடைகிறாா். பிற்பகல் 1.30 மணிக்கு சென்னையில் இருந்து அவா் நேபாளத்துக்குச் செல்ல உள்ளாா்.

சென்னைக்கு வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு வரும் சீன அதிபா், சனிக்கிழமை பிற்பகல் 1.30 மணி வரை 24 மணி நேரம் தங்கவுள்ளாா். இதற்காக முழுவீச்சில் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முதல்வா் நேரில் ஆய்வு: சீன அதிபரும், பிரதமா் நரேந்திர மோடியும் செல்லும் வழிகள் மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க மாமல்லபுரம் ஆகிய இடங்களை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி நேரில் ஆய்வு செய்தாா். இந்த ஆய்வின் போது, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், அமைச்சா்கள் பி.தங்கமணி, ஆா்.காமராஜ், சி.விஜயபாஸ்கா், தலைமைச் செயலாளா் க.சண்முகம், டிஜிபி ஜே.கே.திரிபாதி, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் பொன்னையா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

நன்றி: dinamani

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here