சீனா, இந்தோனேசியா, எத்தியோப்பியாவை தொடர்ந்து சிங்கப்பூரும் ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானங்களுக்கு தடை விதித்துள்ளது.

எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானம் அந்நாட்டின் தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்டு சென்ற சில நிமிடங்களில் பிஷாப்டு நகருக்கு அருகே விழுந்து நொறுங்கியது. இதில் பயணம் செய்த 157 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

இதே ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானம் தான், கடந்த அக்டோபர் 29ஆம் தேதி இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் ஜாவா கடலில் விழுந்து விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்திலும் விமானத்தில் இருந்த 189 பேரும் பலியாகினர். மேலும் இந்த 2 விமான விபத்துகளுக்குமான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில் போயிங் 737 ரக விமானங்களின் பாதுகாப்பு கேள்விக்கு உள்ளாகி இருக்கிறது.

‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானங்கள் முதல்முறையாக 2017ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டுக்கு வந்தன. ஆரம்ப கட்டத்திலேயே இந்த விமானங்கள் தொடர்ந்து விபத்தில் சிக்கியுள்ளன. மேலும் இந்தோனேசியா மற்றும் எத்தியோப்பியாவில் நடந்த 2 விபத்துகளுக்கும் சில ஒற்றுமைகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்தத் தொடர் விபத்துகளை அடுத்து சிங்கப்பூர், ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானங்களுக்கு தடை விதித்துள்ளது. தங்கள் நாட்டு வான் வழியாக இந்த வகை விமானங்கள் செல்வதற்கும் சிங்கப்பூர் தடை விதித்துள்ளது என ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே, சீனா, இந்தோனேசியா, எத்தியோப்பியா ஆகிய நாடுகள் ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானங்களுக்கு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here