சீனாவின் செஜியாங் மாகாணத்தில் லெகிமா சூறாவளி தாக்கியதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். 16 பேரை காணவில்லை.

சீனாவின் செஜியாங் மாகாணத்தில் லெகிமா என்ற சூறாவளி புயல் தாக்கியது. நள்ளிரவு 1.45 மணியளவில் லெகிமா புயல் தாக்கியபோது, மணிக்கு 187 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசியது. பலத்த மழையும் பெய்தது. இதனால் மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்தன. வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இந்த சூறாவளிக்கு 13 பேர் உயிரிழந்துள்ளனர்.  16 பேரை காணவில்லை. 

இந்த சூறாவளி மணிக்கு 15 கிமீ வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து, படிப்படியாக பலவீனமடைந்து வருவதாக தேசிய வானிலை மையம் (என்எம்சி) சீனா தெரிவித்துள்ளது.

இந்த சூறாவளியானது செஜியாங்  மற்றும் ஜியாங்சு மாகாணங்களில் கடும் சேதத்தை ஏற்படுத்தும் என்றும், ஷாண்டாங் தீபகற்பத்தின் கடற்கரை பகுதிகளில் நாளை மாலை கரை கடக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்த சூறாவளியானது நேற்று தைவானின் வடக்கு முனையை தாக்கியபோது, 9 பேர் காயமடைந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 500-க்கும் அதிகமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 

லெகிமா சூறாவளி தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டதும், ஷாங்காய் மாகாண மக்கள் இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் பேர் உள்பட உள்பட பத்து லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செஜியாங் மாகாணத்தில் மட்டும் 288 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. ரெயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டன. 

மீட்புக் குழுவைச் சேர்ந்த 1000 வீரர்களும், 150 தீயணைப்பு வாகனங்களும், 153 மீட்புப் படகுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.