சீனாவில் இருந்து இந்தியா இறக்குமதி செய்வது பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக மத்திய அரசு மீது காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக ட்விட்டரில் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள விடியோ பதிவில் கூறியிருப்பதாவது:
நாட்டிலேயே அதிக வேலைவாய்ப்பை உருவாக்கி வருவது சிறு,குறு, நடுத்தர தொழில்துறை தான். ஆனால், இப்போது மத்திய அரசு சீனாவில் இருந்து பல்வேறு பொருள்களை தொடர்ந்து அதிகஅளவில் இறக்குமதி செய்வதால் உள்நாட்டில் வேலைவாய்ப்பு பறிபோய்விட்டது. இந்தியாவில் தயாரிப்போம் என்ற திட்டத்தை
மத்திய அரசு அறிவித்தது. ஆனால், இப்போது சீனாவில் வாங்குவோம் என்ற கொள்கையைத்தான் அவர்கள் பின்பற்றி வருகின்றனர்.
2021-இல் இந்தியாவின் மொத்த இறக்குமதியில் சீனாவின் பங்களிப்பு மட்டும் 46 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதற்கு முன்பு இந்த அளவுக்கு அதிகமாக சீனாவில் இருந்து இந்தியா இறக்குமதிசெய்தது இல்லை.
இப்போதைய அரசுதான் சீனாவில் இருந்து இறக்குமதி செய்வதில் புதிய உச்சத்தை
எட்டியுள்ளது என்று கூறியுள்ளார்.
ஏற்கெனவே சீனாவுடனான எல்லைப் பிரச்னையை மத்திய அரசு சரியாகக் கையாளாமல், இந்தியப் பகுதியை விட்டுக் கொடுத்துவிட்டதாக காங்கிரஸ் கட்சி பாஜக அரசு மீது குற்றம்சாட்டி வருகிறது. இப்போது, சீன இறக்குமதி அதிகரித்துள்ளதை மையமாக வைத்து மத்திய அரசு மீது ராகுல் காந்தி
குற்றஞ்சாட்டியுள்ளார்.