சீதா கிங்ஸ்டன் மெட்ரிகுலேஷன் பள்ளியை இந்து சமய அறநிலையத் துறை ஏற்று நடத்தும்

0
358

சீதா கிங்ஸ்டன் மெட்ரிகுலேஷன் பள்ளியை இந்து சமய அறநிலையத் துறை ஏற்று நடத்தும் என்று அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக, இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமாக 141 கிரவுண்ட் நிலம் உள்ளது. இதில் 44.5 கிரவுண்ட் பரப்பில் சீதா கிங்ஸ்டன் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி இயங்கி வந்தது. இப்பள்ளி கட்டிடங்களுடன் நிலம் சுவாதீவனமாக கோயில் வசம் ஒப்படைக்கப்பட்டது. சீதா கிங்ஸ்டன் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 700-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயின்று வந்தனர்.

இந்தச் சூழலில், அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் பள்ளிக்கல்வித் துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில், சீதா கிங்ஸ்டன் பள்ளியை இந்து சமய அறநிலையத் துறை ஏற்று கோயில் நிர்வாகம் மூலம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இப்பள்ளியில் உள்ள கட்டிடங்கள் அனைத்தும் புதுப்பிக்கப்படும். தேவைக்கு ஏற்ப புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பள்ளியில் ஏற்கெனவே பணியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்கள் தொடர்ந்து பணிபுரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதனால், அப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர், அவர்களது பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் அச்சப்படத் தேவையில்லை.

பள்ளி வளாகத்தில் அடிப்படை வசதிகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். தேவையான பணிகளை உடனே மேற்கொள்ளவும், பள்ளி தொடர்ந்து சிறப்பாக செயல்படவும் இந்து சமய அறநிலையத் துறை அனைத்து ஏற்பாடுகளையும் செய்யும் என்று பள்ளியின் ஆசிரியர்கள், பெற்றோர்களிடம் அமைச்சர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியின்போது இந்து சமய அறநிலையத் துறை செயலர் பி.சந்திரமோகன், ஆணையர் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here