சிவலிங்கத்தை விமர்சித்த டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிப்பு

0
181

வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதி வளாகத்தில் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படும் ‘சிவலிங்கத்தை விமர்சித்ததால் டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்துக் கல்லூரி வரலாற்றுத்துறை இணைப் பேராசிரியர் ரத்தன் லால் வெள்ளிக்கிழமை ரவு கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். 

கியான்வாபி மசூதி வளாகத்தில் உள்ள இந்து தெய்வங்களை பூஜை செய்வதற்கு அனுமதிக்கக் கோரி வாராணசி சிவில் நீதிமன்றத்தில் இந்து பக்தர்கள் தொடுத்துள்ள வழக்கை மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில்  இந்த விவகாரம் குறித்து முகநூலில் சர்ச்சைக்குரிய கருத்து பதிவிட்டதாக எழுந்த புகாரை அடுத்து, டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்து கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர் ரத்தன் லாலை போலீசார் கைது செய்துள்ளனர். 

மசூதியில் ஆய்வு நடத்த எதிர்ப்பு தெரிவித்து மசூதி நிர்வாகக் குழு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், மசூதி நிர்வாகக் குழு தாக்கல் செய்துள்ள மனு விசாரணைக்கு ஏற்புடையதா என்று மாவட்ட நீதிமன்றம் முடிவு செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.

முன்னதாக, உச்சநீதிமன்றம் கடந்த 17-ஆம் தேதி பிறப்பித்த இடைக்கால உத்தரவில், கியான்வாபி மசூதியில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்ட பகுதிக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் முஸ்லிம்கள் தொழுகை நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது.

கியான்வாபி மசூதியில் பலத்த பாதுகாப்புடன் வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகை அமைதியான முறையில் நடந்து முடிந்தது. இதையொட்டி காசி விஸ்வநாதர் கோயிலின் நான்காவது நுழைவு வாயிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அந்த வழியாக முஸ்லிம்கள் தொழுகைக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்து கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியார் ரத்தன் லால், தனது முகநூல் பக்கத்தில், வாரணாசியின் கியான்வாபி மசூதியில் சிவலிங்கம் போன்ற அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில் அது பற்றி  சர்ச்சைக்குரிய கருத்தை பதிவிட்டுள்ளதாக டெல்லி வழக்குரைஞர் வினீத் ஜிண்டால் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில், “ரத்தன் லால் பதிவிட்டுள்ள கருத்து இரு பிரிவினருக்கிடையே புண்படுத்தும் விதமாகவும், பகையை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. சமூக நல்லிணத்துக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் அவரது கருத்து அமைந்துள்ளது. 

மேலும், கியான்வாபி விவகாரம் மிகவும் உணர்வுப்பூர்வமானது மற்றும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே, அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார். 

இந்தப் புகாரின் பேரில் டெல்லி வடமாவட்ட சைபர் காவல் நிலைய போலீசார் ரத்தன் லால் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 153ஏ கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து வெள்ளிக்கிழமை இரவு அவரை கைது செய்தனர். 

இதுகுறித்து பேராசிரியர் ரத்தன் லால் கூறுகையில், எனது கருத்தில் எந்த தவறும் இல்லை. “இந்தியாவில், நீங்கள் எதைப் பற்றி பேசினாலும், யாரோ அல்லது மற்றவர்களின் உணர்வுகள் புண்படுத்தப்படும். எனவே இது ஒன்றும் புதிதல்ல. நான் ஒரு வரலாற்றாசிரியர். பல அவதானிப்புகளைச் செய்துள்ளேன். நான் அவற்றை எழுதினேன். , நான் எனது பதிவில் மிகவும் பாதுகாக்கப்பட்ட மொழியைப் பயன்படுத்தினேன். நான் என்னைப் பாதுகாத்துக் கொள்வேன்” என்று டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்துக் கல்லூரி இணைப் பேராசிரியர் ரத்தன் லால் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here