பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணியிலிருந்து தெலுங்கு தேச கட்சி விலகவுள்ளதாகக் கூறப்படுகிறது.

மத்திய பொது பட்ஜெட்டை வியாழக்கிழமை (நேற்று), நிதியமைச்சர் அருண்ஜேட்லி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இதில் ஆந்திர மாநிலத்திற்கு குறிப்பிடத்தக்க நிதி ஒதுக்கீடு, புதிய திட்டங்கள் அறிவிப்பு எதுவும் செய்யப்படவில்லை. இது தெலுங்கு தேசம் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.4), தெலுங்கு தேசம் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்தவுள்ளார்.

கடந்த சில நாட்களாக, ஆந்திர மாநில பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள், அம்மாநில அரசைக் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இது முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனையடுத்து, தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி வேண்டாம் என பாரதிய ஜனதா கட்சி முடிவெடுத்தால் அதற்கும் தாங்கள் தயார் எனவும் சந்திரபாபு நாயுடு பேசியிருந்தார்.

தற்போதையை மக்களவையில் தெலுங்கு தேச கட்சிக்கு 18 உறுப்பினர்கள் உள்ளனர். பாஜகவுடனான கூட்டணி முடிவுக்கு வந்தால், தெலுங்கு தேச கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்யவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. முன்னதாக பாஜகவுடனான கூட்டணியை சிவசேனா கட்சி முறித்துக் கொண்டது.

இதையும் படியுங்கள்: ஒக்கி: கண்ணுக்குப் புலப்படாத மக்களுக்கு நடந்த கண்ணுக்குப் புலப்படாத பேரிடர்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்