சிவகார்த்திகேயன், விஜய் தேவரகொண்டா இருவர் படங்களுக்கும் ஹீரோ என்ற ஒரே தலைப்பை அறிவித்திருக்கிறார்கள். ஒரு பெயர் ஒரு படத்துக்கு மட்டுமே அனுமதிக்கப்படும். ஹீரோவை கைப்பற்றப் போவது சிவகார்த்திகேயனா இல்லை விஜய் தேவரகொண்டாவா?

முதலில் இந்த குழப்பத்துக்கான காரணத்தை பார்ப்போம். நீங்கள் உங்கள் படத்துக்கு ஒரு பெயரை தேர்வு செய்தால் அதனை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், பிலிம் சேம்பர், கில்டு ஆகிய மூன்று சங்கங்களில் ஏதாவது ஒன்றிற்கு முறைப்படி தெரிவித்து பெயரை வைக்க அனுமதி கோரலாம். அவர்கள் மற்ற இரு சங்கங்களில் இந்தப் பெயர் பதிவு செய்யப்பட்டிருக்கிறதா என்று விசாரித்து, பதிவு செய்யப்படவில்லை என்றால், குறிப்பிட்ட பெயர் ஆட்சேபகரமானது இல்லை என்பதை உறுதி செய்து அனுமதி வழங்குவார்கள். அதன் பிறகு அந்தப் பெயர் வேறெnருவருக்கு வழங்கப்பட மாட்டாது. இந்த விசாரித்து அறியும் நடைமுறை பல குழப்பங்களை கொண்டது. மற்ற இரு சங்கங்களில் அப்பெயர் பதிவு செய்யப்பட்டிருக்கிறதா என்பதை அறிய பல நாள்கள் பிடிக்கும். அதற்குள் அந்தப் பெயரை ஒருவர் வேறெnரு சங்கத்தில் பதிவு செய்ய வாய்ப்புள்ளது. பெயர் நன்றாக இருக்கிறது என்று பிற இரு சங்கங்களில் உள்ள கருப்பு ஆடுகள் யாரேனும், ஏற்கனவே இந்தப் பெயர் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்று தட்டிக்கழிக்கவும் சாத்தியமுண்டு. மூன்று சங்கங்களில் பதிவு செய்யலாம் என்பதை மாற்றி ஒரேயொரு சங்கத்துக்கு அந்த உரிமையை தரவேண்டும் என்ற கோரிக்கை நெடுநாளாக உள்ளது. எந்த சங்கமும் அதற்கு தயாராக இல்லை. யாருக்கும் தங்களின் முக்கியத்துவத்தை விட்டுத்தர விருப்பமில்லை.

சிவகார்த்திகேயன் படத்தை தயாரிக்கும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் ஹீரோ என்ற பெயரை தயாரிப்பாளர்கள் சங்கத்தில் முறைப்படி அனுமதி கேட்டு பதிவு செய்துள்ளது. ஹீரோ என்ற பெயரை இசையமைப்பாளரும், இயக்குநருமான எஸ்.எஸ்.குமரன் பதிவு செய்து வைத்திருந்தார். அவரிடம் அனுமதி பெற்று கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பெயரை பதிவு செய்துள்ளது.

ஆனால், விஜய் தேவரகொண்டாவின் படத்தை தயாரிக்கும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் ஹீரோ பெயருக்கு அனுமதி கேட்டு கடிதம் மட்டுமே கொடுத்துள்ளனர். இதுவரை அனுமதி பெறவில்லை. அதற்குள் இரவோடு இரவாக எங்கள் படத்தின் பெயர் ஹீரோ என்று அறிவித்தனர். இது விதிமுறைகளை மீறியச் செயல். அதனால் ஹீரோ பெயர் சிவகார்த்திகேயன் படத்துக்கே சொந்தம் என்கிறார்கள்.

விஜய் தேவரகொண்டாவின் படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் தயாராகிறது. ஒவ்வொரு மொழிக்கும் ஒரு பெயரை தேர்வு செய்யாமல் அனைத்து மொழிகளுக்கும் சேர்த்து ஹீரோ என்ற பெயரை தேர்வு செய்திருந்தனர். இன்றைய நிலையில் தமிழுக்கு அவர்கள் வேறு பெயரை தேர்வு செய்ய வேண்டிய நெருக்கடி உருவாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here