விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே காளையார்குறிச்சி எனுமிடத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 பேர் பலியாகினர். 10க்கு மேற்பட்ட அறைகள் தரைமட்டமானதாலும், பலர் படுகாயமடைந்திருப்பதாலும் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

விபத்துப் பகுதியிலிருந்து இதுவரை 6 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஆனால், உடல்கள் கருகிய நிலையில் இருப்பதால் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.

sivakasi-fireworks-accident-5-dead

ஒரே மாதத்தில் 3வது விபத்து:

விருதுநகர் மாவட்டத்தில் ஒரே மாதத்தில் நடந்துள்ள மூன்றாவது பட்டாசு ஆலை விபத்து இது. கடந்த 12ம் தேதி அச்சங்குளத்தில் பட்டாசு ஆலையில் விபத்து ஏற்பட்டது. தொடர்ந்து அதே வாரத்தில் சிவகாசி அருகே காக்கிவாடன்பட்டியில் ஓர் ஆலையில் விபத்து நடந்தது.

இந்நிலையில், சிவகாசி காளையார்குறிச்சி பட்டாசு ஆலையில் இன்று மாலை திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. பேன்ஸி ரக பட்டாசு செய்யும் அறையில் ஏற்பட்ட தீ அடுத்தடுத்த அறைகளுக்கும் பரவியதால் விபத்து பகுதி தீயணைப்பு வீரர்கள் நெருங்கமுடியாத அளவுக்கு உள்ளது. 40க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்ந்து பட்டாசுகள் வெடித்துச் சிதறுவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது என அஞ்சப்படுகிறது.

இதுவரை 14 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் இருவருக்கு 80 சதவீதத்துக்கும் மேல் காயம் ஏற்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 12ம் தேதி சாத்தூர் அச்சங்குளம் பகுதியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 23 பேர் பலியாகினர். அந்த விபத்து ஏற்படுத்திய சோகம் விலகுவதற்குள் மற்றுமொரு விபத்து நடந்துள்ளது.

Image

அதிகாரிகள் ஆய்வு:

சம்பவ இடத்தில் மாவட்ட எஸ்.பி. மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். பட்டாசு ஆலைக்கு உரிமம் இருப்பதாகத் தெரிவித்துள்ள எஸ்.பி., ஆலை உரிமம் புதுப்பிக்கப்பட்டிருக்கிறதா, ஆலையில் விதிமீறல் ஏதும் உள்ளதா போன்ற விசாரணைகள் நடைபெறுவதாகக் கூறினார்.

நீதிமன்றம் உத்தரவு:

முன்னதாக இன்று பிற்பகல், உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, தமிழகத்தில் பட்டாசு தொழிலை முறைப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பாக தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here