சில மணி நேரங்களில் குழிதோண்டும் பணி முடிவடையும் : 37 மணி நேரத்திற்கும் மேலாக தொடரும் குழந்தையை மீட்கும் பணி

0
2820

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்தவர் பிரிட்டோ. கட்டிட தொழிலாளியான இவர் வீட்டின் அருகே விவசாயமும் செய்து வந்தார். இவருடைய மனைவி கலாமேரி. இவர்களுடைய மகன்கள் புனித் ரோசன் (வயது 4), சுஜித் வில்சன் (வயது 2).

பிரிட்டோ தனது வீட்டு உபயோகத்திற்காக கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டின் அருகே ஆழ்துளை கிணறு ஒன்றை அமைத்திருந்தார். சுமார் 400 அடி ஆழத்திற்கு அந்த ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. ஒரு ஆண்டு வரை அந்த ஆழ்துளை கிணறு பயன்பாட்டில் இருந்தது. பின்னர் தண்ணீர் இல்லாத நிலையில், பயன்பாடின்றி இருந்த ஆழ்துளை கிணற்றை மூடும் வகையில், மேல்மட்டம் வரை மண்ணை கொட்டியுள்ளனர். கடந்த சில நாட்களாக அப்பகுதியில் மழை பெய்ததால் ஆழ்துளை கிணற்றை மூடியிருந்த மண் சுமார் 30 அடி ஆழம் வரை கீழே இறங்கியது.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை சுமார் 5.30 மணியளவில் சுஜித்வில்சன் அப்பகுதியில் விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது அவன் சோளம் சாகுபடி செய்யப்பட்ட பகுதியில் நடந்து சென்றபோது, எதிர்பாராதவிதமாக ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான்.

இதைக்கண்ட கலாமேரி குழந்தை அடிப்பகுதியில் சிக்கியிருப்பதை கண்டு சத்தம்போட்டார். இதனால் அக்கம், பக்கத்தினர் அங்கு திரண்டு வந்து பார்த்தனர். மேலும் உடனடியாக இதுபற்றி மணப்பாறை தீயணைப்பு துறையினர், போலீசார் உள்ளிட்டோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தற்போது 100 அடி ஆழத்தில் சிக்கியுள்ள குழந்தையை மீட்கும் பணி 37 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது.  பலகட்ட முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில் தற்போது குழந்தையை மீட்க புதிய முயற்சி மேற்கொள்ளப்பட உள்ளது. 

அதாவது ஆழ்துளை கிணறு அருகே சுரங்கம்போல மற்றொரு குழி தோண்டப்பட்டு குழந்தையை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்காக ஓஎன்ஜிசியின் ரிக் இயந்திரம் வரவழைக்கப்பட்டுள்ளது. ஆழ்துளை கிணறுக்கு அருகில் 2 மீட்டர் தொலைவில் 1 மீட்டர் அகலம், 110 அடி ஆழத்தில் இந்தக்குழி தோண்டப்படும்.

குழி தோண்டும் பணிக்காக ரிக் இயந்திரம், மீட்புப் பணி நடைபெறும் இடத்திற்கு வந்தது. இந்த இயந்திரத்தை ஒருங்கிணைத்து நிலைநிறுத்தும் பணி நடைபெற்றது. அது முடிவடைந்த நிலையில் குழி தோண்டும் பணியை இயந்திரம் தொடங்கியுள்ளது. இந்த பணி ஒன்றரை மணி நேரத்தில் நிறைவடையும் எனக் கூறப்படுகிறது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here