சில சோற்றுப்பருக்கைளுள் மறையும் பெரும் அரசியல் பூசணிக்காய்கள்!

மலேஷிய அதிபர் ரஸாகின் சமீபத்திய இந்திய விஜயத்திற்கும், சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும், இலங்கைத் தமிழர்கள் படும் அவதிக்கும், தமிழ் சினிமாத் துறையின் பிதற்றல்களுக்கும் கண்களுக்குத் தென்படாத ரகசிய உறவுகள் உண்டா?

0
1775
மலேசிய பிரதமர் நஜீப் ரஷாக் நடிகர் ரஜினிகாந்தைச் சந்தித்தபோது எடுத்த படம்.

“இரண்டு முழுப்பூசணிக்காய்களை ஒரு சில சோற்றுப் பருக்கைகளுக்கடியில் மறைக்க முடியும் என சமீபத்தில் விளங்கிற்று,” என்று ஒருவர் சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் சொல்லிக்கொண்டிருந்தது காதில் விழுந்தது.

வாக்கியத்திலுள்ள விதண்டாவாதத்தனமான, வித்தியாசமான காரணத்தால், குரல் வந்த திசையை நோக்கி நடந்தேன்.

ப்ரொஃபைலில் முன்னாள் முதல்வர் ஓ. பி. எஸ்ஸின் அண்ணன் போலத் தென்பட்ட அந்த மனிதர், நேர் பார்வையில் மன்னார்குடி நடராஜனின் “சிற்றப்பர்” போலத் தெரிந்தார். முகத்தில் கூஜா-காவடி வகையறாக்கள் என்ற களை டாலடிக்கும் ஐந்து மனித ஜந்துக்கள் அந்த மனிதரைச் சுற்றி நின்றன. வெள்ளை வெளேர் என்ற காதி ரக வேட்டி-ஜிப்பா. உடலில் உயர் ட்ரக்கார் ரக பர்ஃபியூமின் நாற்றம். மணிக்கட்டில் தங்கத்தாலான, ஸ்வித்ஸர்லாந்தில் தயாரான டிஸ்ஸோ கடிகாரம். விரலில் சுமார் மூன்று பவுன் எடையுள்ள தங்க மோதிரத்தில் பச்சை நிற ஒற்றைத் துளசி இலையின் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது. வயது சுமார் 75. மண்டைமேல் அடர்த்தியான முடி. அந்தக் கிரீடத்தின் அடியில் ஆங்காங்கே நுரை தள்ளிய நரை.

இதையும் பாருங்கள்: ஆட்சி

இதையும் பாருங்கள்: நந்தினி

அவரை நெருங்கியபோது அந்த ஐவரில் ஒருவர் என்னைப் பற்றி அந்த மனிதரின் காதில் கிசுகிசுத்தார்.

“வாருங்கள், விதண்டாவாதப் புகழ் சண்டைக்கோழி சோணகிரி! சண்டையிடுவது எனக்குக் காசி அல்வா சாப்பிடற மாதிரி,” என்றார்.

காசி அல்வா என்ற சொல் கேட்டு புருவங்களை நெரித்தேன்.

“திருநெல்வேலி அல்வா என்ற இரு சொற்கள் தேய்ந்துபோய் கீறல் விழுந்த ரிக்கார்ட்டின் இழிநிலையை அடைந்து விட்டன. காசியில் செய்யப்படும் அல்வா அலாதியானது. அதில் கோதுமைக்குப் பதிலாக வெள்ளைப் பூசணிக்காய் விழுது முக்கியப் பதார்த்தம்!”

“முழுப் பூசணிக்காய்களை மறைக்கும் மர்மம் இதுதானா?” உட்கார மனமின்றி, திரும்பிச் செல்ல எத்தனித்தேன்.

“அதுக்குள்ளற கோவிச்சுகிட்டுக் கும்பிடாம கும்பகோணம் பண்ணி, காணாமல் போனா எப்படி? இரண்டு முழுப்பூசணிக்காய்களை உண்மையிலேயே நாலைந்து சோற்றுப் பருக்கையில் மறைச்சிருக்காங்க! அத்த என்னால நிரூபிக்க முடியும்,” என்றார் அந்த நபர்.

“நீர் யார்? உம்மை இங்கு பார்த்ததில்லையே!” என்றேன், சற்றுக் காட்டமாக.

இதையும் பாருங்கள்: ஃபாரூக்

இதையும் பாருங்கள்: என்.டி.ஆர்

“சுருக்கமா, நான் ச.வை.வி.பு. அப்பாவை சவுடால் வைத்தி என்பார்கள் ஆக, ச, வை. தாயார் விசுத்தன விசாலாட்சி. அதனால் ‘வி’ என்ற உயிர்மெய் எழுத்து சேர்ந்தது. எனக்கிடப்பட்ட பெயர் புருஷோத்தமன். அதைத் தமிழ்ப்படுத்தி புருடோத்தமன் என்றாக்கி விட்டேன். ஆக பு. சுருக்கமாக ச-வை-வி-பு. அரசியல்வாதிகளுக்கும், தொழிலதிபர்களுக்கும் ஐடியா வழங்குவதுதான் என் தொழில். இந்தத் தொண்டுக்கான செலவுகளை பல பெரிய மனிதர்கள் ஏற்கிறார்கள். என்னைச் சிலர் ஏழைக்கேற்ற சு. ஸ்வாமி என்று தவறாக வர்ணிப்பார்கள். ஸ்வாமிக்கு யாரெல்லாம் எதற்கெல்லாம், எப்படி எல்லாம் நன்கொடைகள் அளித்தார்கள், அளிக்கிறார்கள் என்று யாரும் கேட்பதில்லை. கேட்டால், அதற்குரிய கணக்கை அவரால் கொடுக்க முடிந்தாலும், கேட்க வருபவரிடம், “உம்மைப்பற்றியே ஒரு பெரிய ஃபைல் என்னிடமுள்ளது. அதற்கு நீர் விடை அளிக்கத் தயாரா,” என்று கேட்டு, ஒரு கோப்பை மேஜைமீது “தொப்” என உரக்கக் கேட்கும் விதத்தில் போட்டு விடுவார். ஸ்வாமிக்கு அப்பல்லோ மருத்துவமனை தலைவர் டாக்டர் பிரதாப் ரெட்டி ஆப்த நண்பர். அந்த நண்பர் மறைமுகமாக, விஷப்பெண் நாகம் என ஸ்வாமி வார்த்தை அர்ச்சனை செய்த சசிகலாவுக்கும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மர்மமான மரணத்திற்கும் சம்பந்தமே இல்லை எனப் பொருட்பட அறிக்கை விடக் காரணமானவர் எனக் கிளம்பிய சந்தேகங்களை மறுக்காதவர். சசிகலாவை முதல்வராக்குவது ஆளுனர் வித்யாசாகரின் கடமை எனப் பகிரங்கமாக லா பாயின்டை முன்வைத்தவர். அதைச் செய்யாவிட்டால், ராவின் பதவிக்கு ராவடி நிலை ஏற்படும் என்று மிரட்டல் அறிக்கை விட்டார். சசிகலா சிறை சென்றதும் இது பற்றி ஸ்வாமி மௌன விரதம் மேற்கொண்டார். அவரது அரசியல் எதிரிகள் அது பற்றிப் பேசுவதில்லை. ”மாறுபடும் கருத்தை உடையவரும் கண்டால் மயங்கிடும் அழகே வடிவெனக் கொண்டாய்” (1) என டி. எம். எஸ் முருகக் கடவுளை பக்தி உருக முன்னொரு காலத்தில் பாடி இருக்கிறார். அக்கடவுளின் பெயர் உள்ளதாலோ என்னவோ, அதே வசதி ஸ்வாமிக்கும் உண்டு, எனக்கில்லை. ஸ்வாமி பிரதமராக விரும்புவதால், அதற்கான மனிதர்களைத் திரட்டி ஒன்று சேர்த்து வருகிறார். எனக்கு அது போன்ற எந்த ஆசையும் இல்லை. ஆக, நான் தனிக்கட்டை. ஆனால் தனிக்காட்டு ராஜா. சுருக்கமாக த.கா.ரா! வசதி உள்ள சில எதிரிகள் அதைத் திருத்தி, தகர-டப்பா என்று ஏசுவதுண்டு. ஏசுவோர் ஏச்சும், பேசுவோர் பேச்சும் போகட்டும் பரந்தாமனுக்கே! கண்ணதாசனின் வரிகளைக் காப்பியடித்து, கொஞ்சம் திருத்தி அளித்தேன்…ஹி…ஹி…” என்றார்.

மனிதரிடம் ஏதோ விஷயமிருக்கலாம் என்ற சந்தேகம் என் மனதில் உதித்தது.

“ஏதோ பூசணிக்காய் மறைந்தது பற்றிச் சொல்ல ஆரம்பித்தீரே? மெரினா கடற்கரையில் கீரியையும் பாம்பையும் மோதவிடுவதாகச் சொல்லி, இறுதிவரை அதைச்செய்யாமல் முஷுமுஷுகு தைலம் விற்றுப்பிழைக்கும் மோடி மஸ்தான் வித்தை என்னிடம் செல்லுபடியாகாது,” என்று மிரட்டினேன்.

அந்த மனிதருக்குக் கொஞ்சம் கோபம் வந்தது.

“பத்திரிக்கைகளுக்கு உளவு சொல்வோரின் பெயர்களை ‘கழுகு, புறா, வாத்து, சாமியார் என்று இதழ்கள் மறைக்கின்றன. நான் அந்த ரகப் பறக்காவட்டிக் கற்பனைப் பறவை அல்ல. சொல்வதை நேரடியாக, ஆணித்தரமாக…”

“அதைத்தான் சொல்லுமே!”

“முழுப்பூசணிக்காய் நம்பர் 1 மலேஷிய விமானம் எம் எச் 370 மார்ச் 8, 2014 அன்று வானில் காணாமல் போயிற்று. அதன் மர்மத்தை இங்குள்ள சில பத்திரிகையாளர்கள்கூட விளக்கியுள்ளனர். முழுப்பூசணிக்காய் நம்பர் 2 – எம் எச் 17 என்ற இன்னொரு மலேசிய விமானம் யுக்ரெயின்-ரஷ்ய எல்லையில் சுட்டு வீழ்த்தப்பட்டது. இரண்டிலுமாகச் சேர்ந்து 522 நபர்கள் உயிரிழந்தனர். இரண்டு சம்பவங்களை ஒட்டிய துப்பு இன்றும் துலங்கவில்லை. சமீபத்தில் மலேஷியப் பிரதமர் நஜீப் ரஸாக்கு இந்தியா வந்தபோது அதுபற்றி எந்த ஊடக பிரஹஸ்பதியும் – நீர் உட்பட – ஒரு கேள்விகூட எழுப்பவில்லை.”

“ஒரு பேச்சுக்கு இந்த இரண்டையும் முழுப்பூசணிக்காய்கள் என்று ஒப்புக்கொண்டாலும், அதை மறைக்க உதவிய சோற்றுப்பருக்கைகள் எவை?”

நான் இடைமறித்தேன்.

“ஹிந்தி நடிகர் ஷாருக் கான் மலேஷிய நாட்டின் ப்ராண்ட் அம்பாஸிடர். அந்தப் பதவியை ரஜினிகாந்துக்கு அளிக்கப்போவதாகக் கயிறு திரித்தது; அது வெறும் வதந்தி என்பது தெரிந்தது. அது முதல் சோற்றுப் பருக்கை. மலேஷியாவில் 7% தமிழர்கள் இருப்பதால், வரும் அதிபர் தேர்தலில் அவர்களது ஆதரவைத் திரட்ட ரஜினி என்ற கொக்கு தலையில் நஜீப் வெண்ணை வைத்துப் பிடிக்க முற்படுகையில் அந்த நடிகருடன் ‘ஸெல்ஃபி எடுத்துக் கொண்டார்” என ஊடகக்காரர்கள் காதில் பூ சுற்றினர். அது இரண்டாவது சோற்றுப் பருக்கை. நஜீபுக்கு இட்லி ரொம்பப் பிடிக்கும் என்பதை விளக்க பல நீண்ட கட்டுரைகள். அது மூன்றாவது சோற்றுப் பருக்கை. இந்தியாவுடன் ரூ.2.45 லட்சம் கோடிக்கான மலேஷிய முதலீடுகளுக்கான ஒப்பந்தம் என்ற செய்தி – நான்காவது சோற்றுப் பருக்கை. எம் எச் 370 விமானம் காணாமல் போனதில் அதில் பயணித்த 239 நபர்கள் மாயமாய் மறைந்தார்கள். எம். எச். 370 இல் சென்னையைச் சேர்ந்த சந்த்ரிகா ஷர்மா என்ற பெண்ணும் உண்டு. அவரது கதி என்ன என எந்தப் பத்திரிக்கையாளனாச்சும் கேட்டானா? ஒரு ஃபுட்பால் க்ரவுண்டு அளவுக்குப் பெரிய விமானம் காற்றில் காணாமல் போவது என்பது நடவாத காரியம். ஒவ்வொரு நிமிடமும் அதன் கறுப்புப் பெட்டிகளிலிருந்து – கடலின் எந்த ஆழத்தில் இருந்தாலும் அபாய ஓசை உலகின் ஆறு இடங்களில் கேட்டுக் கொண்டே இருக்கும் என்பது வேறொரு உண்மை. இதை எல்லாம் மறைத்து, சுமார் 3 வருடம் 28 நாடுகள் உலகின் பல கடல் பகுதிகளில் மாயமான விமானத்தைத் தேடிக், கண்டுபிடிக்க முடியவில்லை எனக் கூறியது காதில் பூ சுற்றிய கதை. எம். எச். 17 சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் இன்னும் வெட்கக்கேடானது. அந்த மலேஷிய விமானத்தில் 283 பயணிகள் கூண்டோடு கைலாயம் சென்றனர். அந்த விமானம் சுடப்பட்டது யுக்ரெயின்-ரஷ்ய எல்லையில். அதே பகுதியை சில நிமிடங்கள் முன்பு, இந்தியப் பிரதமர் மோடியின் விமானம் கடந்து சென்றிருந்தது. அதே பகுதியை ரஷ்ய அதிபர் புத்தினின் விமானம் சில நிமிடங்களுக்குப் பின்பு கடந்து செல்வதாக இருந்தது. விமானத்தைச் சுட்டது, ரஷ்ய ஏவுகணை என்பது குற்றச்சாட்டு. அது உண்மை என்றால் அந்த ஏவுகணையை இயக்கியது யார் என்ற விஷயத்தில் தெளிவு இதுவரை இல்லை! ஆக, இரண்டு முழுப்பூசணிக்காய்கள். நான்கு சோற்றுப்பருக்கையில் – சென்னையில் மறைந்தன!”

“இரண்டுமே மூன்று வருடம் பழைய கதை. அதில் புதிதென்ன?” எனது கேள்வியில் கொஞ்சம் எரிச்சலைப் புகுத்தினேன்.

“புதிய விஷயம் ரஜினி மேட்டர்தான். அவர் நடிச்ச மலேஷியாவுல எடுக்கப்பட்ட கபாலி படம் வசூலில் சரித்திரம் படைத்ததுன்னு காதுல பூ சுத்தினாங்க! அவ்வளவு கோடிகள் சம்பாரிச்ச வினியோகஸ்தர்கள வருமான வரித்துறை ஏன் ரெயிடு பண்ணல்ல? இப்போ புதியதாக ஒரு பிரச்சனை கிளம்பி ஓய்ந்தது. அது தான் 2.0. இலங்கைய்யில வவுனியா பகுதியில லைகான்ற அமைப்பு – அதுதான் 2.0 ஐத் தயாரிக்குது – 150 வீடுகளக் கட்டிச்சாம், அதுங்களோட சாவியை ரஜினி குடுக்கப்போறாருன்னு சொன்னாங்க, எதிர்ப்பு கிளம்பிச்சி, சூப்பர் ஸ்டாரும் மௌனமாயிட்டாரு, போகல்லன்னாரு! எல்லாரும் வாயை மூடிக்கிட்டாங்க!”

“அதுல சொல்ல வேற என்ன இருக்கு?”

“யோவ் குடாக்கு! லைக்கா கம்பெனி அந்தப் படத்த மட்டுமா எடுக்குது? எவனாச்சும் கமல் நடிக்கிற சபாஷ் நாயுடு, உதய நிதி ஸ்டாலின் நடிக்கிற இப்படை வெல்லும், என்கிற இரண்டு படத்தையும் லைக்காதான் தயாரிக்குதுன்னு எழுதறானா? விஜய் சேதுபதி நடிச்ச எமன் படத்தைத் தயாரிச்சதும் லைக்காதான்னு யாராவது சொன்னானுங்களா? அதெல்லாம் போவுது … ரஜினி நடிச்ச எந்திரன் படத்துனால லண்டன்ல இருக்கற ஐங்கரன் இன்டர்னேஷனல் ஃபணால் ஆன நிலைக்குப் போயி – கடைசியில – ஈராஸ்ன்ற மும்பை கம்பெனி காப்பாத்தினதா ரீல் உட்டானுங்க! எந்திரன் விஷயத்துல ஸன் குழுமத்துக்கும் “கில்போத்ரகா” ரகசியங்கள் இருக்கு! லைக்கா மொபைல் கம்பெனியோட முதலாளி அல்லிராஜா சுபாஸ்கரன் வட இலங்கை வவுனியாவுல தயாரிச்சுக்குடுக்கற வீடுங்க பூமி பூஜையில 2015-இல் கலந்துகிட்டு முதல் கல்ல நட்டது தமிழர்களக் கொன்னு குவிச்ச இலங்கை சுதந்திரக் கட்சியோட பொதுச்செயலாளர் டுமிந்தா திஸ்ஸனாயகான்னு எவனாவது கண்டுபிடிச்சானா? அது பத்தி பேசாம இருக்க சந்திரிக்கா குமாரதுங்காவையும் அந்த விழாவுல கலந்துக்க வெச்சாங்கன்னு எவனாவது துப்பறிஞ்சானா? தமிழகத்துல அரசியல் நடத்தத் துடிக்கிற விஜய் நடிச்ச கத்தியைத் தயாரிச்சப்பவே இவ்வளவும் நடந்திச்சின்னு எவன் சொன்னான்? போன வருஷம் வெளிவந்த “எனக்கு இன்னொரு பெயர் இருக்கு” படத்தையும் லைக்காதான் தயாரிச்சிச்சி. தெலுங்கு “விஜய்காந்த்” சிரஞ்சீவி நடிச்ச “கைதி நம்பர் 150”யும் “கத்தியும்” ஒரே கதை. இதை எல்லாம் வெளிவராத, இல்லன்னா புதைஞ்சு அழுகின பூசணிக்காய்கள்ன்னு சொல்லலாமா?

நான் வாயடைத்துப் போனேன்.

“தமிழ்ச் சினிமாப்படங்களோட திருட்டு வி. சி. டிக்கள ரிலீஸ் பண்ணறதே “வெளிநாடுவாழ்த் தமிழ்ப் பொடியனுங்க” ன்னு எந்தப் பைத்தியக்காரனாவது கண்டுபிடிச்சானா? அப்படிக் கண்டுபிடிச்சதை எழுதினானா? அது ஒரு பக்கம் இருக்கட்டும்! ஐங்கரன் என்ற ஸ்தாபனமும் லைக்காவும் இணைந்து செயல்படுவதையும், லைக்காவுக்கும் ராஜபக்ஸவுக்கும் எந்த உறவும் இல்லை என்று எல்லோரும் சொல்கிறார்கள். திஸ்ஸ நாயகாவும் சந்திரிக்காவும் கலந்துகொண்ட லைக்காவின் வவுனியா விழாவை எவனாவது மறுக்கிறானா? சரி அதுவும் போகட்டும். புலிகள் இயக்கத்திற்கும், ஐங்கரனுக்கும், தே. மு. தி. க தலைமைக்கும், ரகசியத் தொடர்பு இருந்ததாகக் குற்றச்சாட்டுக்கள் எழுந்தனவே! விஜய்காந்தும் அருண் பாண்டியனும் ரகசியமாக 2012இல் யாழ்ப்பாணம் சென்றார்கள் என்ற தகவல் வெளியாயிற்றே! அதை அருண் பாண்டியனும் சரி, விஜய்காந்தும் சரி, மறுக்கவில்லையே! (4) அதுபற்றி யாராச்சும் மூச்சு விட்டாங்களா? ஐங்கரன் கம்பெனிக்கும் புலிகளுக்கும் தொடர்பு உண்டு என்று மத்திய அரசு பல முறை தனது ரகசிய அறிக்கைகளில் சொல்லி இருக்கிறது. ஐங்கரன் கம்பெனி திவால் நிலையை பல முறை எட்டியதன் காரணமும் புலிகள் இயக்கத்தின் வீழ்ச்சிதான் எனச் சொல்வோர் உண்டு. லைக்கா கம்பெனியை 65 தமிழகக் கட்சிகள் – இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் அடக்கம் – எதிர்க்கின்றன. ஆனால், இந்த அமைப்புகள் எல்லாமே மேலே நான் சொன்ன எந்தத் தகவலையும் வெளியிடவில்லையே! ஏன்? இதை எல்லாம் சேர்த்தால் எத்தனை முழுப்பூசணிக்காய்கள், சோணகிரி?”

இதையும் பாருங்கள்: நெடுவாசல்

நான் வாயடைத்துப் போனேன்.

“சுமார் 150,000 அப்பாவித் தமிழர்களக் கொன்னதாக இலங்கை அரசு மேல ஐ. நாவோட பெண் அதிகாரி நவனீதம் பிள்ளை வைத்த குற்றச்சாட்டுகள் என்கிற முழுப்பூசணிக்காய்களை இலங்கை அரசு மறைக்க அமெரிக்கா உதவலாம், ஏன் இந்தியாவோட மத்திய அரசு உதவலாம், தமிழை உயிர் மூச்சுன்ற மற்ற கட்சிகள் மறைக்க உதவலாமா? இதை எல்லாம் தட்டிக் கேட்க துப்பில்லாத சோணகிரி, நீங்க சைதாப்பேடையில குத்தாட்டம் போட்டு, சமாலகிடி-கிரி-கிரின்னு பாடிக்கொண்டே வடைகறியோட இட்லி திங்கப்போகலாம்,”

“இதெல்லாம் தெரிஞ்சும் எல்லாரும் சும்மா இருக்காங்கன்னா, அதுக்கு ஒரு அர்த்தம்தான் இருக்க முடியும் …இதெல்லாம் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகள்!” இப்படி எதையாவது சொல்லித் தப்பிப்பதைத் தவிர எனக்கு வேறு வழி தோன்றவில்லை.

“அடப்போய்யா, ஆதாரம், வேதாளம், சுகாதாரம்னுட்டு! உங்கள்ள எத்தினிப்பேரு கவர் வாங்கி, நக்கிக்குடிக்கறதுக்குச் சமமா ஓஸியில கிடைக்கற விஸ்கிக்கு வாலாட்டறாங்கன்னு போயி விசாரிங்க. என்ன மாதிரி அரசியல்வாதிகளுக்கு ஐடியாக் குடுக்கறவங்க ஆடுதுறை 27 ரகம்தான். ஆனா, நியாயம்பேசற ஊடகங்கள் எந்த ரகம்? நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள்? உங்கள் ஆசை நெஞ்சைத் தொட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்! இதுவும் ஒரிஜினல் டயலாக் இல்ல. ஒரு பழைய சிவாஜிப்பட சினிமாப் பாட்டு, அவ்வளவு தான்!”

எவனோ ஒருத்தன் இலவச கடன் அட்டை வேண்டுமா எனக் கேட்டு போட்ட ஃபோனைப் பொய்யான அலுவலக அழைப்பு எனக் காரணம் காட்டி அங்கிருந்து நடையைக் கட்டினேன்.

(விளக்கம்: இதைப் போன்ற விசேஷ பத்திகளில் வெளிப்படுத்தப்படும் கருத்துகளுக்கு எழுத்தாளர்களே பொறுப்பேற்றுக் கொள்கிறார்கள்; அவற்றை இப்போது டாட் காமின் கருத்துகள் என்று எடுத்துக்கொள்ள வேண்டாம்; இப்போது டாட் காம் தமிழ்நாட்டில் சுதந்திரமான ஊடகவியலை வலுப்படுத்தும் சாதனம்; உங்களது கருத்துகளை editor@ippodhu.comக்கு எழுதுங்கள்.)

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்