சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு அலுவலகம் இல்லை. நடுத்தெருவில் நிற்கிறோம் என்று சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன். மாணிக்கவேல் கூறியுள்ளார்.

சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு கொண்ட அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது பேசிய பொன். மாணிக்கவேல், கிண்டியில் உள்ள  சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலகத்தை பூட்டிவிட்டார்கள். கிண்டியில் உங்களுக்கு அலுவலகம் இல்லை என்று கூடுதல் டிஜிபி கூறுகிறார். நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், அலுவலகம் கூட இல்லாமல் தெருவில் நிற்கிறோம் என்று கூறினார்.

தன்னுடன் பணியாற்றும் காவலர்களை, டிஜிபி அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று எனக்கு எதிராக புகார் கொடுக்குமாறு கையெழுத்து வாங்குகிறார்கள் என்றும் பொன். மாணிக்கவேல் தெரிவித்தார்.

இதனைக் கேட்டு, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கடும் கண்டனம் வெளியிட்டனர். தற்போது இது ஒரு நெருக்கடி நிலையாக உள்ளது. அரசுத் துறையை அரசே முடக்குவது எந்த விதத்தில் நியாயம். இதுபோன்ற செயலை தமிழக அரசிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் செயல்பட்டால் தலைமைச் செயலாளரை நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும். இது தொடர்பாக அரசு வழக்குரைஞரோ அல்லது தலைமை வழக்குரைஞரோ நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று வழக்கு விசாரணையை 9ம் தேதிக்கு ஒத்திவைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், பொன் மாணிக்கவேலுக்கு ஒத்துழைக்க மறுத்தால் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய நேரிடும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here